பாகபிரிவினை ! இந்து சட்டப்படி, இஸ்லாம் சட்டப்படி, கிறிஸ்தவ சட்டப்படி, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
பாகப் பிரிவினையின் போது, தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள்.
சரிசமமாக பிரித்து கொள்கிறோம் என்பது, பல பங்குகளாக பிரித்து கொண்டு, ஒருவருக்கு மட்டும், அதில் மதிப்பு குறைவானதாக சொத்து கிடைத்தால், அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து, கோர்ட்க்கு சென்று, அந்த பாகப்பிரிவினை செல்லாது என்றும், நியாயமாக பிரிக்கவில்லை என்று டிகிரி வாங்கலாம்.
எல்லோருக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருவருக்கு கூடவும், ஒருவருக்கு குறையவும் இருக்கலாம். ஆனால் அதற்கு சரியான விளக்கம் பாகப்பிரிவினை பத்திரத்தில் இருக்க வேண்டும்.
பிரிக்க முடிந்த சொத்தை, சுலபமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம். பிரிக்க முடியாததை, பங்கு பிரித்தால், மிக சிறிய பங்காகிவிடும் என்று கருதினால், அதனை, (NOT DIVISIBLE BY METES AND BOUNDS) அதாவது, நீள அகலத்துடன் பிரிக்க முடியாத சொத்து என்று சொல்லபடுகிறது.
பிரிக்க முடியாத சொத்தை, யாராவது ஒருவர் யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு, அதற்கேற்ற பணத்தை பெற்று கொண்டு, விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து, சொத்தில் இருந்து வெளியேறலாம். இப்படி செய்யும்போது, பாகப்பிரிவினை பத்திரம் தேவையில்லை.
பிரிக்க முடியாத சொத்தை, யாரும் யாருக்கும் விட்டு கொடுக்க மனம் இல்லை, பகை முரண்களில், சகோதர சகோதரிகள் சிக்கிக் கொண்டு, அனைவரும் சொத்து எனக்கு வேண்டும் என்று சொன்னால், அந்த சொத்தை பொது ஏலத்திற்குதான், கொண்டுவர வேண்டும். அதில் வரும் தொகையை அனைவரும் பிரித்து கொள்ள வேண்டும்.
பாகம் பிரிக்கும் சொத்துக்களில் இருக்கும் கடன்களை, ஒருவர் மட்டும் மீட்டு இருந்தால், அதற்கான பணத்தை பெற அவருக்கு உரிமை உண்டு.
மேற்படி சொத்துக்களில், மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தோடு, அதில் ஒரு மாடியோ, சுற்று சுவரோ கட்டி இருந்தால், அதற்கான பணத்தை பெறலாம்.
மற்ற பாகஸ்தரர்கள் முதலில் ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அதற்கு பங்கு கேட்பதும் முடியாத காரியம்.
பாகப்பிரிவினையில், எப்போதும் மூத்தவர்கள்தான், விட்டு கொடுக்க வேண்டும் என்றில்லை. இளையவர்களும் விட்டுக் கொடுக்கலாம்.
ஆனால் நம் முன்னோர் மரபுப்படி, வலுத்தவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்பதே பழக்கத்தில் இருந்தது . அதனால் வயதில் பெரியவர்களையே விட்டு கொடுக்க சொல்லி இருக்கின்றனர்.
சொத்தை பங்கிடும் போது, கீழ் மேலாகவோ, அல்லது தென் வடக்காகவோ பங்கிடலாம். அவ்வாறு பங்கிடும் போது, கீழ் மேலிருந்தால், கிழக்கு ஓரத்தின் முதல் பங்கு, கடைசி குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு அடுத்தவர், அதற்கு அடுத்த பங்கு, இப்படியாக மேற்கு கடைசி பங்கு மூத்தவர் எடுத்து கொள்ளலாம். இதேபோல் வடக்கிலிருந்து பிரிக்கும் போது வடக்கின் முதல் பாகம் கடைசி தம்பிக்கும், தெற்கின் இறுதி பங்கு மூத்தவர்க்கும் கிடைக்கும்.
இளையவன் அதிக சலுகை பெற்றால், எதிர்காலத்தில் மூத்தவர்கள் வயதாகும் போது, இளையவன் தோள் கொடுப்பான் என்று இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.
பாகப்பிரிவினையில் பணத்தை வீணாக்காமல் இருக்க 11 வழி முறைகள்.
சகோதர, சகோதரிகளிடையே, இணக்கமும், அன்பும் இல்லாத இடத்தில், பாகவிரினையில், அதிக அளவு செலவுகள் ஆகும். மூத்தவர் இறுக்கி பிடித்தால், இளையவரும் இறுக்கிப் பிடிப்பார், என்ற உண்மையை உணர்தல் வேண்டும்.
பங்குகளில் சச்சரவு இல்லாமல் பிரிக்க வேண்டும். எப்போதும் குடும்பத்தினருக்குள்ளேயே பேசி முடிக்க வேண்டும். யாருக்கு என்ன பங்கு என்று, வெளிநபரையோ, நாட்டாமையையோ, பெரிய மனுஷங்களையோ அறவே தவிர்க்க வேண்டும்.
பங்கு பிரிப்பதில் முரண்பாடுகள் அதிகம் இருந்தாலும், நிச்சயம் நீதிமன்றம் நாடக்கூடாது. பேசித் தீர்க்க வேண்டும். மிக மிக கடைசி வாய்ப்பாக கோர்ட்டை தீர்வாக நினைக்க வேண்டும்.
நீதிமன்றத்திற்கு செல்லும் நிலை வந்தால் , அதற்கு முன்பாக,பெரிய மனுஷன்களை வைத்து பேச்சுவார்த்தையை நடத்தலாம்.
சகோதரர் சகோதரிகளிடையே, பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், பாகம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பக் கூடாது. முடிந்தவரை நேரில் சந்தித்து பேச வேண்டும். முடியவில்லை என்றால், நீங்களே கைப்பட பாகம் கேட்டு சகோதரர் சகோதரிகளுக்கு கடிதம் எழுதலாம்.
பாகப் பிரிவினை வேலையை செய்ய, செலவு யார் செய்வது என தள்ளிப் போட்டால், நாட்கள் தள்ளத் தள்ள, செலவு கூடுமே தவிர நிச்சயம் செலவு குறையாது.
பூனைக்கு யாராவாது மணிகட்ட வேண்டும்” என்ற எண்ணத்தில் யாராவது ஒரு சகோதரர், அல்லது சகோதரி, முதல் முயற்சி எடுக்க வேண்டும். அனைத்து சகோதர சகோதரிகளும், ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வேலையில் இருந்தாலும், இவர்களை ஒருங்கிணைக்க ஒருவர் முன் முயற்சி எடுக்க வேண்டும்.
பெரும்பாலும், குடும்ப நல்லது கெட்டதுகளில் கூடும்போது, இந்த பாக பிரிவினைகளை முடித்துவிட வேண்டும். பாகப் பிரிவினைக்கு என்று ஒரு தனி சந்திப்பு என்பது வீணான செலவுகள்.
நிலவரி திட்ட சர்வே நடக்கும் போதோ , ஜமாபந்தியின் போதோ, எளிதாக வருவாய் துறையின் ஆவணங்களில், அனைத்து பாகஸ்தாரர்களின், பெயரை சேர்த்து விடலாம். செலவு மிக குறைவு.
பெரும்பாலும் விவசாய நிலங்களை, கூர்சீட்டு போட்டு கொள்ளலாம். தனிப்பட்டாவை அதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.
நகர சொத்துகளுக்கும் மற்றும் அதிக மதிப்பு உள்ள சொத்துக்களுக்கு மட்டும், பாகவிரினை பத்திரம் போட்டு கொள்ளலாம்.
பாகப் பிரிவினையில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?
நீங்கள் வாங்கும் சொத்து, பாக பிரிவினை மூலம் வந்து இருக்கிறது என்றால், பாகப்பிரிவினை பத்திரத்தையோ, அல்லது கூர் சீட்டையோ, நன்கு படித்து பார்த்து, சட்டப்படி யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்று தெரிந்து கொண்டு, அந்த பங்கின் படிதான், நீங்கள் வாங்கும் சொத்து இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.
இதில் கொஞ்சம் கவனம் குறைந்து விட்டாலும், எதிர்காலத்தில் மற்றொரு பாகஸ்தர்களோ, அவர்களின் வாரிசுகளோ வழக்கு போடலாம்.
எனவே கீழ்க்கண்ட பட்டியலை எப்போதும் மனதில் வையுங்கள்.
இஸ்லாம் சட்டப்படி, கணவன் இறந்தால், யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
கணவன் இறந்தால்,
- கணவன் சொத்தில் மனைவிக்கு 1/8 அதாவது எட்டில் ஒரு பங்கும்,
- மீதி இருக்கும் பங்கில், ஆண் பிள்ளைகளுக்கு, 2 பங்கும்,
- பெண் பிள்ளைகளுக்கு, 1 பங்கும்,
- ஆண் வாரிசு இல்லாமல், ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால், மீதியில் 1/2 பங்கும் ,
- ஆண் வாரிசு இல்லாமல், பல பெண்கள் வாரிசாக இருந்தால், மீதியில் 2/3 பங்கும் ,
- இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால், மனைவிக்கு 1/4 பங்கும் ,
- இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால், தாயாருக்கு மீதியில் 1/3 பங்கும்,
- இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தந்தை மற்றும் தாத்தா பாட்டிக்கு 1/6 பங்கும் ,
- இஸ்லாம் சட்டப்படி மனைவி இறந்தால், யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?
- மனைவி இறந்தால், மனைவி சொத்தில் கணவனுக்கு 1/4 பங்கும் ,
- பிள்ளைகளுக்கு மீதி உள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்றால்,
- மகன்களுக்கு மீதி உள்ளதில் 2 பங்கும் ,
- மகள்களுக்கு மீதி உள்ளதில் 1 பங்கும்,
- ஆண் வாரிசு இல்லாமல், ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்,மீதி உள்ளதில் 1/2 பங்கும்,
- ஆண் வாரிசு இல்லாமல், பல பெண்கள் வாரிசாக இருந்தால் தலா 2/3 பங்கும் ,
மேற்படி மனைவி, வாரிசுகள் இல்லாமல் இறந்து விட்டால்,
- 1/2 பாகம் சரி பாதி கணவனுக்கு,
- மனைவியின் தாயாருக்கு மீதி சொத்தில் 1/3 பங்கும்,
- மனைவியின் தகப்பனார்ருக்கு (தாத்தா & பாட்டிக்கு) 1/6 பங்குமாகும் .
கிறிஸ்தவ சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
- கணவன் இறந்தால், மனைவிக்கு கணவரின் சொத்தில் 1/3 பங்கும் ,
- மகன்கள் மற்றும் மகள்களுக்கு மீதம் உள்ளதில் 2/3 பங்கும்,
- கணவருக்கு வாரிசு இல்லையென்றால் 1/3 பங்கை, மனைவி எடுத்து கொண்டு, கணவனின் தந்தைக்கு கொடுக்க வேண்டும்.
- தந்தையும் இல்லை என்றால், அவரின் தாயாரும், சகோதர சகோதரிகளும் சரி சமமாக எடுத்து கொள்ளலாம்.
கிறிஸ்தவ சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
- மனைவி இறந்தால், கணவருக்கு சொத்தில் 1/3 பங்கும்,
- மகன்கள் மற்றும் மகள்கள், 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- கணவர் இறந்தால், மனைவி மட்டும் இருந்து, வாரிசு இல்லை என்றால், கணவன் சொத்தில் 1/3 எடுத்து கொண்டு மீதி சொத்தை, கணவரின் தந்தைக்கு கொடுத்து விடவேண்டும்.
- மேற்படி தந்தை இல்லை என்றால், மேற்படி சொத்து தாயாருக்கோ, அல்லது சகோதர சகோதரிக்கோ, சரி சமமாக பிரித்து கொடுக்க வேண்டும்.
இந்து சட்டப்படி, கணவன் இறந்தால், யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
- கணவன் இறந்தால், அவருடைய முதல் வாரிசுகள் அனைவருக்கும், சமபங்கு.
- கணவரின் முதல் வாரிசுகள் யாரும் இல்லையென்றால், இரண்டாம் வாரிசுகளில் தந்தை மட்டும் முழு சொத்தையும் அடையலாம்.
- கணவரின் இரண்டாம் வாரிசுகளில், தந்தை இல்லையென்றால், மீதி உள்ள இரண்டாம் வாரிசுகள் அனைவரும் சமபங்கு அடையலாம்.
- இரண்டாம் வாரிசுகளில், சிலர் உயிருடன் இருந்து, சிலர் உயிருடன் இல்லையென்றால், உயிருடன் இல்லாதவர்களுடைய வாரிசுகளுக்கு எந்த வித பங்கும் கிடையாது.
- இரண்டாம் வாரிசுகளில், தந்தை மற்றும் சகோதர சகோதரிகள், யாருமே உயிருடன் இல்லையென்றால், இரண்டாம் வாரிசுகளின் வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கும் .
இந்து சட்டப்படி கணவனின் முதல் வாரிசுகள் யார் யார்?
- தாய்,
- மனைவி,
- மகன்,
- மகள்,
- முன்னரே இறந்த மகனின் குழந்தை,
- முன்னரே இறந்த மகளின் குழந்தை,
- இறந்த மகனின் விதவை மனைவி,
இந்து சட்டப்படி கணவனின் இரண்டாம் வாரிசுகள் யார் யார்?
- தந்தை
- தந்தை இல்லையென்றால், உயிருடன் இருக்கும் சகோதர சகோதரிகள்.
- சகோதர சகோதரிகள் யாரும், உயிருடன் இல்லையென்றால், அவர்களின் வாரிசுகள்.
இந்து சட்டப்படி மனைவி இறந்தால், யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
- மனைவி இறந்தால் அவருடைய வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.
- மனைவியின் வாரிசுகள் யாரும் இல்லையென்றால், கணவனின் வாரிசுகளுக்கு சம பங்கு.
- கணவனின் வாரிசுகள் இல்லையென்றால், மனைவியின் தகப்பனார் வாரிசுகள் சம பங்கு அடைவார்கள்.
- மனைவியின் தகப்பனார் வாரிசுகள் இல்லையென்றால், மனைவியின் தாயார் வாரிசுகள் அடைவார்கள் சம பங்கு அடைவார்கள் .
- மனைவிக்கு குழந்தை இல்லாமல், கணவன் மட்டும் இருந்து சொத்து மனைவியின் சுய சம்பாத்தியமாக இருந்தால், கணவனுக்கும் கணவனின் வாரிசுகளுக்கும் முழுமையாக சென்றடையும்,
- மனைவிக்கு குழந்தை இல்லாமல், கணவன் மட்டும் இருந்து, சொத்து சீதனமாக தந்தையார் வழியில் வந்திருந்தால், மேற்படி சொத்து, கணவனுக்கும், கணவனின் வாரிசுக்கும் சேராது . திரும்ப தந்தையார் வாரிசுகளுக்கு சென்று விடும்.
இந்து சட்டப்படி மனைவிக்கு முதல் வாரிசுகள் யார் யார்?
- பெண்ணின் மகன்கள்,
- பெண்ணின் மகள்கள்,
- முன்னரே இறந்த மகனின் குழந்தைகள்,
- முன்னரே இறந்த மகளின் குழந்தைகள்,
- கணவர்
தெரிந்து கொள்ள வேண்டிய 3 வகையான பாகப்பிரிவினை பத்திரங்கள்.
ஒரே குடும்பத்தினர் பாகபிரிவினை பத்திரம்:
“ஒரே குடும்ப உறுப்பினர்கள்” என்பது ‘தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும் தான்), தந்தை, தாய், மகன், வளர்ப்பு மகன், மகள், வளர்ப்பு மகள், பேரன், பேத்தி, சகோதரன், சகோதரி” ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
(இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள்) என்று பத்திரபதிவு அலுவலகம் சொல்கிறது .
பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது,
1. பூர்வீகச் சொத்தாக இருந்தாலும்,
2. நம் தகப்பனார், தாயார் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்,
3. பெற்றோர்கள் இறந்த பின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்,
மேற்படி பூர்வீக சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் “ஒரே குடும்ப உறுப்பினர்களாக” இருக்க வேண்டும்.
ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000 மும், பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000 மும் , செலுத்தினால் போதும் என்று, இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.
அதாவது, சொத்தின் மதிப்பு ரூ 25 லட்சம் வரை, 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ 25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக, ரூ 25,000 மும், செலுத்தினால் போதும்.
மேலும் இந்த கட்டணத்தை, பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும், செலுத்தி இருக்க வேண்டும்.
இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000, ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.
குடும்ப உறுப்பினர் அல்லாத பாகபிரிவினை பத்திரம்.
குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள், நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர் அல்லாத, வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும், அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர்.
இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும். இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ, அதை விட்டு விட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து, அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ 1,00,000 (ஒரு லட்சமாக) இருந்தால், ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000 என்றும், மதிப்பு இரண்டு ரூ 2,00,000 (இரண்டு லட்சமாக) இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம், ரூ.8,000 என்றும் செலுத்த வேண்டும்.)
பின்னர், பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
கூர்சீட்டு, அதாவது , வாய்மொழி பாகப்பிரிவினை பத்திரம், விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும் போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம்.
நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும், பேசிக் கொள்ளலாம். அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவ்வாறு பங்கு பிரித்த படியே, பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது.
எனவே, இந்திய பதிவுச் சட்டப்படி, அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என, இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.
இருந்த போதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக, அதை ஒரு சீட்டில் எழுதி, அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று, ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம்.
இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம்.
அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம்.
அதற்குப் பதிலாக, பங்குதாரர்கள், ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை, பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்றுதான், அதில் எழுதி இருக்க வேண்டும்.
ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தின் மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.
விவிலியராஜா🤝👍 வழக்கறிஞர்
9442243433