20. சட்ட விழிப்புணர்வு நமது கொள்கையாகட்டும்.
நம்மிடம் விழிப்புணர்வு என்பது, தேவையில்லாத விசயங்களில்தான் அதிகம் காணப்படுகிறது: மனம் போன போக்கில் வாழ்க்கையை நடத்தாமல், வாழ்க்கைக்குத் தேவையான, நியாயமான வகையில் வாழ்க்கையை நடத்த உதவுகின்ற, உரிமையை வழங்குகிற, கடமையை வலியுறுத்துகின்ற சட்ட விசயத்தில் விழிப்புணர்வு என்பது, ஆயிரத்தில் ஒரு நபருக்கு கூட இருப்பதாகத் தெரியவில்லை.
நாட்டில் வசிக்கும் மக்கள் தொகையில் 2% பேர் அரசு ஊழியர்கள் எனவும், அவர்களை சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் 10% எனவும் புள்ளி விபரங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். இவர்கள் தவிர மந்திரிகள், முக்கியஸ்தர்கள், வக்கீல்கள், வில்லங்கம் பிடிச்சவங்க என்று பலர் இருக்கும் போது எப்படி 1% கூட இல்லை என நம்புவது என்று எண்ணலாம்.
சட்டத்தை அதிகமாக பயன்படுத்தும் காவலர்கள், வக்கீல்கள், ஏன் நீதிபதிகளே கூட, சட்டம் தெரியாமல்தான் இருக்கிறார்கள் என்பதை, இதற்கு முன்பான இரண்டு புத்தகங்களில் ஆதாரபூர்வமாக பறைசாற்றி இருக்கிறோம். எனவே, அது குறித்த கருத்துக்கள் இங்கு தேவை இல்லாதது. மேலும், இக்களஞ்சியத்தின் தேவையும் இதே கருத்தை நிலைப்படுத்தத்தான்.
நாம் இங்கு பார்க்கப்போவதெல்லாம், உங்களுக்கு அடிப்படையில் தேவையான சட்ட அறிவு என்ன? சட்ட விரோதமாகக் கொடுக்கப்பட்ட சட்ட உரிமைகளால் உங்களுக்கு பாதுகாப்பா? பங்கமா? என்பவைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, “நம் வாழ்க்கை நம் கையில், நம் வழக்கு நமது வாதத்தில்” என்ற அடிப்படை உண்மையை விளக்குவதும், செயல்படுத்துவதுமாகவே இருக்கும்.
எனவே, “நம்மைச் சார்ந்த அப்பா, அம்மா, உறவினர், தோழர், தலைவர் போன்றவர்கள், சொல்லி விட்டார்கள் என்பதற்காக, அவர்கள் சொன்ன அந்த விசயங்களை, எந்த விதத்திலும் ஆராய்ச்சி செய்யாமல், அதை அப்படியே கடைப்பிடிப்பது உங்களை வளர்க்காது. சொன்னவர்களையே பல விதத்தில் வளர்க்கும்”.
எனது இந்த கருத்து, எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி, எனது கருத்துக்கும் பொருந்தும் என்பதையும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
நமக்கு தேவையான, போதுமான அறிவை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது, எவ்வளவு தூரம் சரியானது அல்ல என்பதை, தேவையான சந்தர்ப்பங்களில், இக்களஞ்சியத்தில் படிக்க இருக்கிறோம். அப்படியானால், இக்களஞ்சியத்தின் அவசியம்தான் என்ன என்ற, சந்தேகம் உங்களுக்கு இந்த இடத்தில் தோன்றலாம் அல்லவா?
நிச்சயமாக ஒரு கருத்து தவறு என்பதை, உணர்த்துவதற்கு. மாற்றுக் கருத்து தேவை அல்லவா? அப்போதுதானே நீங்கள் உண்மை நிலையைச் சிந்திக்க இயலும். அதற்காகத்தான் இக்களஞ்சியம். எனவே நமக்குத் தேவையான அறிவை வளர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வே, நம் ஒவ்வொருவருக்கும் கொள்கையாக இருக்கட்டும்.