வீடு, மனை வாங்க போறீங்களா? பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்வது எப்படி தெரியுமா? பத்திரத்தில் பிழை இருந்தால், அதை திருத்த முடியுமா?
சொந்த வீடு, நிலம் எது வாங்கினாலும் அதற்கு பட்டா மிகவும் முக்கியம்..
இதை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் கையிலேயே பத்திரமாக வைத்திருக்க வேண்டிய ஆவணமாகும்.
இதில், உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் பதிவாகியிருக்கும்.
பொதுசேவை: பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக, நில உரிமையாளர்கள் விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகே பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” என்ற இணையவழி சேவையின் மூலமாக, பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியும் துவங்கப்பட்டுள்ளது.
https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
இந்த வெப்சைட்டின் மூலமாகவே, பட்டா மாறுதலையும் விண்ணப்பித்து மனு செய்யலாம்.
பெயர் மாற்றம்: இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமான, பத்திரத்தில் உள்ள பெயரை நம்மால் மாற்ற முடியுமா?
சார் பதிவாளர் அலுவலகத்திலேயே இதனை நாம் மாற்றி கொள்ளலாம்.
இதற்கு சொத்தின் உரிமையாளர் யாரோ, அவர்தான் நேரில் செல்ல வேண்டும்..
எந்த முறையில் பெயர் மாற்றம் செய்ய போகிறீர்கள் என்பதை விளக்கமாக சொல்ல வேண்டும்..
உரிமையாளர் பெயரில் பட்டா மற்றும் பத்திரங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிறகு, நிலப்பதிவேடு அலுவலகத்திற்கு சென்று, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
பிறகு, புதிய பெயரை பற்றின சுயசான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களை அந்த அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். நீங்கள் தந்த அத்தனை சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும்.
சரிபார்ப்பு: பிறகு, நிலப்பதிவேடு அலுவலகத்தின் உரிமை துறையானது, பத்திரத்தில் பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவு குறித்து விசாரணையை ஆரம்பிக்கும்.
காரணம், இந்த பெயர் மாற்றத்தின் பெயரில், மோசடி எதுவும் நடந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இப்படியான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அனைத்துமே சட்டரீதியாக சரிபார்த்த பிறகே, பத்திர பதிவுகளில் பெயர் புதுப்பிக்கப்பட்டு, இறுதியில், பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், உரிமையாளருக்கு வழங்கப்படும்.
பிழை திருத்தம்: ஒருவேளை, உங்களது பத்திரத்தில் பிழை ஏதாவது இருந்தாலும் அதனை திருத்திக்கொள்ளலாம்..
முக்கியமாக, பழைய எண், புதிய எண் போன்ற நம்பர் சம்பந்தப்பட்ட விவரங்களில் பிழை இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், பத்திரத்தின் சொத்து விவரமானது, பட்டாவுடன் பக்காவாக பொருந்தாது. மாறுபாடுடன் தென்பட்டால், சொத்தை அவசரத்துக்கு விற்க நேர்ந்தாலும் சிக்கல் வந்துவிடும்.
பிழைகள் பத்திரத்தில் இருந்தால், அதனை திருத்த சார் – பதிவாளர் அலுவலகத்தை அணுகினால், சொத்து மாறாத நிலையில், குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும்.
உங்களுக்கு விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தரும் அதே நபரால், பிழையும் திருத்தப்பட்டு தரப்படும் ஆவணத்தின் பெயர்தான், “பிழை திருத்தல் பத்திரம்” (Rectification Deed) ஆகும்.