இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது எப்படி?
ஆக்கிரமிப்பு நிலத்திற்கு இலவச பட்டா வாங்குவது எப்படி?
தமிழ்நாட்டில் எந்த அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியாளர், இலவச வீட்டு மனை பட்டா வழங்குகிறார்?
அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? எவ்வளவு சென்ட் இடம் கிடைக்கும்? வருமான உச்ச வரம்பு என்ன? இலவச வீட்டு மனை பட்டா வாங்கியவர்கள், வேறு யாருக்காவது அதனை பின்னாளில் விற்கலாமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இருக்கும்.
அதற்கு பதில்களை பார்ப்போம்.
பலருக்கும் இன்றைக்கு வீடு, நிலம் சொந்தமாக இல்லை.
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து இடம் வாங்குவது என்பது சாத்தியமில்லை.
மற்ற பகுதிகளிலும் இடம்வாங்குவதும் சரி, வீடு கட்டுவதும் சரி மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது.
எனவே ஏழை மக்கள் எப்படி நிலம் வாங்கி , வீடுகட்ட முடியும்.
அதற்கு ஒரு வழி உள்ளது. அதுதான் இலவச வீட்டு மனை பட்டா.
அரசு இலவச வீட்டு மனை பட்டாக்களை ஏழைகளுக்கு குடியிருக்க வேண்டும் என்று நினைத்து வழங்குகிறது.
எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது? ஏன் சில நிலம் வைத்துள்ளவர்கள் இன்று வரை அலைகிறார்கள்?
புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு, இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 3 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை, 4.37 லட்சம் பேருக்கு, வருவாய் துறை சார்பில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது எப்படி : ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை, சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
அதேநேரம் நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா கிடைக்காது.
அவர்களுக்கு அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகளை கட்டி , குடியமர்த்துகிறது. அங்கு தான் அவர்கள் குடியேற முடியும்.
இலவச வீட்டு மனை பட்டா பெற தகுதிகள்: அதேநேரம் ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் வீட்டு மனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம்.
ஆனால் உங்கள் பெயரில் எந்த வீட்டு மனையும் இருக்கக்கூடாது. உங்கள் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். உங்கள் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது. அத்துடன் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான எல்லா ஆவணங்களும் இருக்க வேண்டும்.
இலவச வீட்டு மனை பட்டா பெற முதல் தகுதி என்னவென்றால், வேறு நிலபுலன் மனை வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் ஏதும் இல்லாமலிருக்க வேண்டும். அடுத்ததாக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, வருமானச்சான்று.. கோட்டா முறையில் பெற, சாதி சான்று உள்பட விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும்.
எந்த பகுதியில் குடியிருப்புக்கு ஏற்ற அரசு நத்தம் புறம்போக்கு உள்ளது என்பதை அறிந்து, அந்த பகுதியை குறிப்பிட்டு மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு போன்றவற்றிற்கும் மனு அளிக்கலாம்
இலவச வீட்டு மனை பட்டா மூலம் மாநகர பகுதியில் 1 1/4 அல்லது 1 1/2 செண்ட் இடமும், கிராம புறப்பகுதி எனில் 2 அல்லது 2 1/2 செண்ட் இடம் நிபந்தனை பேரில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதிகபட்சம் 3 சென்ட் வரை கிடைக்கக்கூடும். கிடைக்கும் இடம் என்பது நத்தம், புறம்போக்கு நிலமாக இருக்கும்.
ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் மற்றும் வட்ட தலைமை நில அளவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் சரிபார்க்கும். அதன்பிறகே வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா வழங்கப்படும்.
ஆக்கிரமிப்பில் குடியிருப்போர் இலவச வீட்டு மனை வாங்க நடைமுறை என்ன: நீங்கள் உங்கள் தாலுகா வட்டாட்சியரை அணுகி , தேவையான இலவச வீட்டு மனை பட்டா மனுவை வாங்கி அதில் நீங்கள் எவ்வளவு வருடமாக அந்த இடத்தில் வசித்து வருகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
உங்களுடைய முகவரி ஏதாவது ஒரு சான்று மற்றும் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, ஆகியவற்றினை இணைத்து வட்டாட்சியரிடம் நீங்கள் மனு வழங்க வேண்டும்.
அந்த மனுவை வட்டாட்சியர் வாங்கிக்கொண்டு உங்கள் பகுதியில் உள்ள கிராம அலுவலரை தொடர்பு கொண்டு அவரிடம் ஒரு அறிக்கை அளிக்க அறிவுறுத்துவார்.
கிராம அலுவலர் நீங்கள் பல வருடங்களாக, அந்த பகுதியில் அந்த இடத்தில் தான் வசிக்கிறார்கள் என்று வட்டாட்சியருக்கு பரிசீலனை தருவார். அதன் பின்பு வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்கும்.
இலவச வீட்டு மனை பட்டா வாங்கியவர்கள் வேறு யாருக்காவது அதனை பின்னாளில் விற்கலாமா? பெரும்பாலும் இலவச வீட்டு மனை பட்டா வாங்கியவர்கள் வேறு யாருக்காவது அதனை பின்னாளில் விற்க முடியாது.
பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தலாம். ஆனால் அதேநேரம் , இத்தனை வருடம் கழித்து விற்கலாம் என குறிப்பிட்ட கால வரம்பு குறிப்பிட்டிருந்தால் அதற்கு பிறகு விற்க முடியும்