தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம் ஏதாவது உள்ளதா?
லட்சமி என்ற சிறுமி அவளது தந்தை மூலமாக உச்சநீதிமன்றத்தில் நீதிப்பேராணை (குற்றவியல்) எண் – 129/2006 என்ற எண்ணில் தாக்கல் செய்த வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357(A) ன் கீழ் “தமிழ்நாடு பாதிக்கப்பட்டவர் இழப்பீட்டுத் திட்டம் 2013” என்ற ஒரு திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. குற்றத்தினால் இழப்பு அல்லது காயம் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் ஆணை.
அதன்படி மத்திய அரசின் துணையுடன் தமிழக அரசு G.O (Ms) No. 1055, Home (Police, XII), II(2)/HO /898(a)/2013 நாள் – 30.11+2013 என்ற அரசாணையை இயற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றியது.
பாதிக்கப்பட்டவர் ஏதாவது ஒரு பிடியாணை வேண்டாக் குற்றத்தில் சம்மந்தப்பட்டிருந்தால் அவருக்கோ அல்லது அவரது வாரிசுகளுக்கோ இந்த தொகை கிடைக்காது. அதாவது பாதிக்கப்பட்டவர் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது.
உண்மையில் குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு தொகையை பெற இந்த திட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் ஆணையர் வசம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்.
இந்த திட்டம் சாதி, மதம் வேறுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும். பட்டியல் சாதியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற்றிருந்தாலும்கூட இதிலும் இழப்பீடு பெறலாம். ஆனால் தொகை நேர்விற்கு ஏற்ப கழிக்கப்படும்.
உயிரிழப்புக்கு ரூ 3 லட்சம், கை, கால் அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தை இழந்தால் அந்த இழப்பு 80% க்கு மேல் இருந்தால் ரூ 2 லட்சம், 50%க்கு கூடுதலாக இருந்தால் ரூ. 1 லட்சம், ஆசிட் வீச்சினால் உயிரிழந்தால் ரூ. 3.5 லட்சம், பாலியல் வல்லுறவுக்கு ரூ 3 லட்சம், கடத்தல், மானப்பங்கம் படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கப்படுகிறது.
கூடுதலாக ஈமச் சடங்குகளுக்கு ரூ. 2000, மருத்துவ செலவுகளுக்கு ரூ. 1.50 லட்சம் வரை காப்பீடு மூலம் வழங்கப்படுகிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 4 அல்லது 6 ன் கீழ் பாலியல் வல்லுறவுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.