குடிநீர் விநியோகம் முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம் மறுப்பு வரை, மனித உரிமை மீறல்களுக்கு கீழ் வருகின்றன. பொதுமக்களுக்கு நிறைய விஷயங்கள் மனித உரிமைகள் மீறல் என்ற வகைக்குள் வருமா என்பதே தெரிவதில்லை.
மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம். ஏன்?
மனிதர்களால், மனிதர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம் இருப்பதை பலரும் அறிவோம்.
ஆனால், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், மனித உரிமைகள் நீதிமன்றங்களாகவும் செயல்படுவது, பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
இதனால், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில், மிக, மிக குறைவான புகார்களே பதிவாகின்றன. கோவையில் அண்மைக்காலத்தில் ஒரு வழக்குகூட பதிவாகவில்லை. இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாக உள்ளது.
இது தொடர்பாக சிறப்பு அரசு வழக்கறிஞர், மனித உரிமைகள் நீதிமன்றம் ) எஸ் ராஜ பிரியா வெங்கடராமன் கூறியதாவது:
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமே, அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு, உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான். மாநில மனித உரிமைகள் ஆணையமானது, நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே அளிக்கும். அதனால் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க இயலாது.
ஆனால், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் குற்றம் நிரூபணமானால், தவறிழைத் தவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு. குற்றத்தின் தன்மையை பொறுத்து தண்டனைகள் வேறுபடும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகள் மீறல்கள் அனைத்தையும் புகாராக இங்கு பதிவு செய்ய முடியும்.
உதாரணமாக, குடும்ப வன்முறையால் பாதிப்பு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள், போன்றவைகளுக்கு எங்கு புகாரை பதிவு செய்வது?: மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நேரடியாக புகார் தாக்கல் செய்ய இயலாது. மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர், தனது புகாரை தாமாகவோ அல்லது அவர் நியமிக்கும் வழக்கறிஞர் மூலமாகவோ தனி நபர் புகாராக அதாவது Private Complaint ட்டாக , குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள பகுதியின் வரம்புக்கு உட்பட்ட, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அதாவது Judicial Magistrate Court டில் நேரடியாக தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கை வழக்கறிஞர் வைத்துதான் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரடியாக அவராகவே ஆஜராகி வாதிடலாம். இந்த புகாரை மனித உரிமை பாதுகாப்பு சட்டம், குற்ற விசாரணை முறை சட்ட அதாவது CRPC பிரிவு 200-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
புகாரைப் பெறும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 202-ன் படி விசாரணை செய்து, புகாரில் அடிப்படை முகாந்திரம் athaavathu Prima facie உள்ளதென முடிவு செய்தால், எதிர்தரப்பினருக்கு அழைப்பாணை அனுப்பி, புகாரின் நகலை வழங்கி விசாரித்து, மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கும். மனித உரிமைகள் நீதிமன்றம், அந்த வழக்கை அமர்வு நீதிமன்ற வழக்குகள் போல விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.
பொது மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. மனித உரிமை மீறல் புகார்களுக்கு, போலி மனித உரிமைகள் அமைப்புகளின் தவறான வழிகாட்டுதல்களை நம்பி, பொதுமக்கள் ஏமாறக் கூடாது.