Non Religion Certificate-1

Non-Religion Certificate how to get? | சாதி மதம் அற்றவர்’ என சான்றிதழ் பெறுவது எப்படி?

Order on 20-08-2022

இந்தியாவில் முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்றவர் இவர் என பலரும் ஸ்நேகாவை குறிப்பிடுகிறார்கள்.

இந்தியா என்றாலே சாதி மதம்தான் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்படும் வேளையில் அந்த பிம்பத்தை கட்டுடைத்தவர் இவர் என சமூக ஊடகங்கள் இவரை சிலாகித்து எழுதுகின்றன.

சரி. யார் இந்த ஸ்நேகா? அவரிடமே பேசினோம்.

நான் ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர் என்று தன் உரையாடலை தொடங்கினார்.

‘வேர்களிலிருந்து’

“நான் வழக்கறிஞர் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள். என்னுடைய பெற்றோர் ஆனந்த கிருஷ்ணன், மணிமொழி இருவரும் வழக்கறிஞர்கள். யோசித்து பார்த்தால் ஜாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வாங்கும் முயற்சியை நான் தொடங்கவில்லை. இந்த முயற்சி என் பெற்றோர்களிடமிருந்துதான் தொடங்கியது. அவர்கள்தான் இவ்வாறான சான்றிதழ் பெற பெரும் முயற்சி எடுத்தார்கள். அப்போது அது சாத்தியப்படவில்லை. பல ஆண்டுகளாக நடந்த முயற்சிக்குப் பின் இப்போதுதான் எனக்கு சாத்தியப்பட்டிருக்கிறது” என்கிறார்.

மேலும் அவர், “சான்றிதழாக பெறாவிட்டாலும் என்னையும், இரு தங்கைகளையும் பள்ளியில் சேர்க்கும்போது, எங்கள் சாதி, மதங்களை எங்கேயும் குறிப்பிடவில்லை. என் பெயரை வைத்தும் நான் என்ன சாதி என்று யாராலும் கணிக்க முடியாது.” என்கிறார்.

‘வாழ்வியல் முறை’

என் பெற்றோர்கள் சாதி, மதங்களை துறப்பதை வெறும் நடவடிக்கையாக பார்க்கவில்லை. அதனை ஒரு வாழ்வியல் முறையாகதான் பார்த்தார்கள் அப்படிதான் வாழ்வும் செய்தார்கள், எங்களையும் அப்படிதான் வளர்த்தார்கள் என்கிறார்.

கணவரும் இந்த விஷயத்தில் உற்ற துணையாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.

அவர், “என் கணவர் பார்த்திபராஜாவும் சாதி, மத மறுப்பாளர். பெண்ணிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சுயத்தை மதிப்பவர். எங்கள் திருமணமே சாதி மறுப்பு திருமணம்தான். இதனை சாத்தியப்படுத்தியதில் அவரது பங்கு பெரிது.” என்கிறார்

இவர் தன் பெற்றோர்களிடமிருந்து பெற்ற புரட்சிகர சிந்தனைகளை அடுத்த தலைமுறையிடமும் கடத்திக் கொண்டிருக்கிறார்.

இவரது குழந்தைகளின் பெயர் ஆதிரை நஸ்ரின், ஆதிலா அய்ரின், ஹாரிஃபா ஜெஸ்ஸி என்று மூன்று பெண் குழந்தைகள். இவர்களை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் சாதியை குறிப்பிடவில்லை என்கிறார்.

சாதி மறுப்பை, அடையாள துறப்பை வாழ்வியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் அதி தீவிரமாகவும் மூன்று தலைமுறையாக கடைப்பிடித்து வருவதாக விவரிக்கிறார்.

“நாங்கள் சாதி சார்ந்த எந்த சடங்குகளையும் கடைப்பிடிப்பதில்லை. அதுபோல, மதம் சார்ந்த பண்டிகைகளை கொண்டாடுவதும் இல்லை.

அதனால்தான் என்னவோ, எங்களது கணப்பொழுதும் கொண்டாட்டமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர்.

‘இந்திய, தமிழ சூழல்’

இந்தியா முழுவதும் மத அரசியல் முன்னெடுக்குப்பட்டு கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இவ்வாறான சான்றிதழ் பெற்றதை வாழ்வின் முக்கிய நிகழ்வாக கருதுகிறார் அவர்.

“சாதி, மதம் அடையாளம் கொண்டு எங்களை பிரித்தாள பார்க்காதீர்கள் என்பதற்கான சமிக்ஞைதான் என் இந்த நடவடிக்கை. சாதி, மதம்தான் சமூகம் என்று கட்டமைப்பை ஏற்படுத்தியவர்களுக்கு அல்லது ஏற்படுத்த முயல்பவர்களுக்கு என்னளவில் நான் கொடுக்கும் அடி இது. அவர்களுக்கு இதுவொரு பயத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்” என்கிறார் ஸ்நேகா.

என்னை தொடர்ந்து பலர் சாதி, மதத்தை துறக்க முன் வருவார்களாயின், அவர்களின் இருப்பு கேள்வி குறியாகும், அவர்களின் அரசியல் நீர்த்து போகும் என்கிறார்.

“என் நோக்கம் என்னவெனில், இந்த சாதி, மதம் என்ற பிடிமானத்திலிருந்து இளைஞர்கள் வெளியேற வேண்டும் என்பதுதான். ஆனால், அதே நேரம் நான் அனைவரையும் சாதி சான்றிதழை துறக்க சொல்லவில்லை”

‘இடஒதுக்கீட்டிற்கு எதிரான நடவடிக்கை’

“சாதி சான்றிதழை துறக்கும் என் நடவடிக்கையை இடஒதுகீட்டிற்கு எதிரான நடவடிக்கையாக சிலர் பார்க்கிறார்கள். சாதி சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழியுமா என்றும் கேட்கிறார்கள்.

உண்மையில் இடஒதுக்கீட்டிற்கு நூறு சதவீதம் ஆதரவு தெரிவிப்பவள் நான். ஆயிரமாண்டு காலமாக அநீதியை எதிர்கொண்டவர்களுக்கு, வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, வளர்ச்சியில் இடஒதுகீட்டிற்கு பெரும் பங்கு உள்ளது. மிக போராடி பெற்ற இடஒதுக்கீட்டிற்காக சாதி சான்றிதழ் பெறுவது என்பதை நான் மறுக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. நிச்சயம் அவர்களுக்கு சாதி சான்றிதழ் தேவை.

சாதி அடுக்கில் மேலே உள்ளவர்கள், ஆதிக்க சாதியினர், வர்ணாஸ்மரத்தை கடைபிடிப்பவர்கள், அதிலிருந்து வெளியே வர வேண்டும். சாதி சான்றிதழை துறக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்” என்று விவரிக்கிறார்.

“அரசாங்கம் எப்படி பார்க்கிறது”

தமது இந்த செயலுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் பெரும் ஆதாரவாகவே இருந்தார்கள் என்று கூறும் ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபரிடம், எப்போது இந்த சான்றிதழுக்காக விண்ணப்பித்தீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தோம்.

அவர், “பத்தாண்டுகளுக்கு முன்புதான் இதற்காக முதல்முறையாக விண்ணப்பித்தேன். ஆனால், தாலுகா அலுவலகத்திலேயே நிராகரித்து விடுவார்கள். மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு சொல்கிறோம் என்பார்கள். ஏன் இதனை கேட்கிறீர்கள் என அச்சுறுத்தலாக பார்ப்பார்கள். ஆனால், இந்த முறை சார் ஆட்சியர், வட்டாட்சியர் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். இந்த சான்றிதழை முதல்முறையாக வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி என்றார்கள்” என்று தெரிவிக்கிறார் இவர்.

சான்றிதழ் பெற்ற முறையை விவரிக்கிறார், “இந்த சான்றிதழை பெற பல முறை முயற்சித்து தோல்வி அடைந்தபின், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கமாக சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் வழியிலேயே இதனையும் விண்ணப்பித்தேன்.

“முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்தேன். அதனை அவர் ஆர்.ஐ-யிடம் அனுப்பினார். அங்கிருந்து தாசில்தார் மேஜைக்கு என் விண்ணப்பம் சென்றது. அதன்பின் அவர்கள் விசாரணையை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு நான் நிறைய விளக்கம் அளிக்க வேண்டி இருந்தது. நான் யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக இந்த சான்றிதழை கேட்கவில்லை என விளக்கம் அளித்த பின்தான் அவர்கள் சான்றிதழ் அளித்தார்கள்” என்கிறார்.

நீங்கள் ஒரு வழக்கறிஞர், அதனால் போராடி இந்த சான்றிதழை பெற்றீர்கள். சாமானியனுக்கு இது சாத்தியமா, அரசு இயந்திரம் அதற்கு ஆதரவாக இருக்கிறதா என்ற நம் கேள்விக்கு, “சாத்தியம்தான், அரசு இயந்திரமே மக்களுக்கானதுதான். சாமன்ய மக்களின் நியாயமான தேவை, விருப்பங்களை நிறைவேற்றதான் அரசு இயந்திரம். மக்கள் இந்த சான்றிதழை கேட்டால் அரசு அதிகாரிகள் தர வேண்டும். ஆனால், இது பெரும் சமூக புரட்சியாக அமைத்துவிடுமோ என்று அச்சப்பட்டால் அரசு தர மறுப்பார்கள். அரசு இதனை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்கிறார் ஸ்நேகா.

Source & Courtesy: https://www.bbc.com/tamil/india-47237300

AIARA

🔊 Listen to this இந்தியாவில் முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்றவர் இவர் என பலரும் ஸ்நேகாவை குறிப்பிடுகிறார்கள். இந்தியா என்றாலே சாதி மதம்தான் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்படும் வேளையில் அந்த பிம்பத்தை கட்டுடைத்தவர் இவர் என சமூக ஊடகங்கள் இவரை சிலாகித்து எழுதுகின்றன. சரி. யார் இந்த ஸ்நேகா? அவரிடமே பேசினோம். நான் ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர் என்று தன் உரையாடலை தொடங்கினார். ‘வேர்களிலிருந்து’ “நான் வழக்கறிஞர் குடும்ப பின்னணியில்…

AIARA

🔊 Listen to this இந்தியாவில் முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்றவர் இவர் என பலரும் ஸ்நேகாவை குறிப்பிடுகிறார்கள். இந்தியா என்றாலே சாதி மதம்தான் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்படும் வேளையில் அந்த பிம்பத்தை கட்டுடைத்தவர் இவர் என சமூக ஊடகங்கள் இவரை சிலாகித்து எழுதுகின்றன. சரி. யார் இந்த ஸ்நேகா? அவரிடமே பேசினோம். நான் ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர் என்று தன் உரையாடலை தொடங்கினார். ‘வேர்களிலிருந்து’ “நான் வழக்கறிஞர் குடும்ப பின்னணியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *