காவல்துறையினா் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கா்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினா் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்த விவரம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் கருப்பு ‘ஸ்டிக்கா்களை’ நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் 14-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
அதில், காவல் துறை உயா் அதிகாரிகள் பயன்படுத்தும் அலுவலக வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கா் பயன்படுத்தக் கூடாது. போலீஸ் என்ற பலகை மற்றும் ‘ஸ்டிக்கரை’ சொந்த வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயா் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது. காவலா்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் என்ற பலகை மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா்.