RTI | information not to be refused | தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுக்கக் கூடாத தகவல்கள்.
-
by admin.service-public.in
- 106
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவது ஆகும். ஆனால் தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் செயல்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
குறிப்பாக பிரிவு 8 ல் கூறப்பட்டுள்ள சில உட்பிரிவுகளை சுட்டிக்காட்டியே பெரும்பாலும் தகவல் அளிக்க மறுக்கின்றனர். அதிலும் குறிப்பாக தனிப்பட்ட ஒருவரின் தகவல் என்றே மறுக்கப்படுகிறது. ஒருவர் அரசுப் பணிக்கு தகுதியான நபரா என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தகவல் பெறும் உரிமை அடிப்படை உரிமையாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
பல ஆர்டிஐ ஆர்வலர்கள் தனிப்பட்ட நபரின் தகவல் குறித்து பல வீடியோக்கள் மற்றும் எழுத்து வடிவிலான பதிவுகள் வெளியிட்டு இருந்தாலும் எனக்கான புரிதல் குறித்தே இந்தப் பதிவு.
எந்த சூழலில் ஒருவரின் தனிப்பட்ட தகவல் என்று கூறி தகவலை தர பொதுத் தகவல் அலுவலர் மறுக்கலாம்?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) (j) ல் – ” information which relates to personal information the disclosure of which has not relationship to any public activity or interest, or which would cause unwarranted invasion of the privacy of the individual unless the Central Public Information Officer or the State Public Information Officer or the appellate authority, as the case may be, is satisfied that the larger public interest justifies the disclosure of such information: Provided that the information, which cannot be denied to the Parliament or a State Legislature shall not be denied to any person” என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது மத்திய பொதுத் தகவல் அலுவலர் அல்லது மாநில பொதுத் தகவல் அலுவலர், ஒருவர் கேட்கும் ஒரு தகவல், எந்தவொரு பொது நலன் அல்லது பொதுமக்கள் நலனிற்கு தொடர்பு இல்லாதது என்றும் அந்த தகவல் தனிநபரின் தனியுரிமையில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கருதினால் அந்த தகவலை வெளியிட வேண்டியதில்லை. ஆனால் கோரப்படும் தகவல்கள் பொதுநலன் தொடர்பானது எனும் பட்சத்தில் அந்த தகவலை வழங்கலாம். அதேபோல் நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ மறுக்க முடியாத தகவல்கள் யாருக்கும் மறுக்கப்படக்கூடாது.
அப்படியானால் எந்தத் தகவலை நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ வழங்க மறுக்க முடியாதோ அந்த தகவலை பொதுமக்களுக்கும் தனிநபர் தகவல் என்று காரணம் கூறி வழங்க மறுக்க முடியாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 4(1) (b) ல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தானாகவே முன்வந்து வெளியிட வேண்டிய தகவல்களை, தனிநபர் தகவல் என்று காரணம் கூறி வழங்க மறுக்க முடியாது.
கேட்கப்படும் தகவலானது பொதுநலன் சார்ந்திருந்தால் அதனை பிரிவு 8(1)(j) – ஐ காரணம் காட்டி வழங்க மறுக்க முடியாது.
அதாவது ஒருவர் கேட்கும் தகவலானது பொதுநலன் நோக்கத்துடன் இருக்கும்போது அந்த தகவலை கட்டாயமாக பொதுத் தகவல் அலுவலர் வழங்க வேண்டும். எனவே சமூக ஆர்வலர்கள் ஒரு தகவலை அரசுத்துறைகளில் இருந்து கேட்கும்போதும், கேட்கப்படும் தகவல் எந்த வகையில் பொதுநலன் சார்ந்தது என்று மனுவில் கூற வேண்டும்.
இது தொடர்பான முக்கிய தீர்ப்புகளை பதிவு செய்துள்ளேன். சமூக ஆர்வலர்கள் இவைகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- Canara Bank vs The Central Information Commissioner & Another என்ற இந்த வழக்கில் நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியும் என்கிற தகவலை மனுதாரருக்கும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிரிவு 8(1)(j) பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
- The Tamil Nadu Public Service Commission rep. by its Secretary, Omsnthoorar Government Estate vs The Tamil Nadu Information Commission rep. by its Registrar என்ற இந்த வழக்கில் மனுதாரர் விடைத்தாள் பற்றிய தகவல்களை கேட்கிறார். தகவல் மறுக்கப்படுகிறது. மேல்முறையீட்டில் ஆணையம் தகவலை வழங்க உத்தரவிடுகிறது. அதனை எதிர்த்து TNPSC உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறது. நீதிபதி சட்டமன்றம் கேட்டால் தகவல்களை வழங்க மறுப்பீர்களா என்று கேட்கிறது. TNPSC மறுக்க மாட்டோம் என்கின்றனர். அப்படியானால் மனுதாரருக்கும் மறுக்க முடியாது என்று கூறி தகவல்களை வழங்க உத்தரவிடுகிறது.
- CBSE Vs. Aditya Bandopadhyay (2011) 8 SCC 497 என்ற இந்த வழக்கில் பிரிவு 4(1) (b) ன் முக்கியத்துவம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் – 8870009240, 9360314094

🔊 Listen to this தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவது ஆகும். ஆனால் தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் செயல்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக பிரிவு 8 ல் கூறப்பட்டுள்ள சில உட்பிரிவுகளை சுட்டிக்காட்டியே பெரும்பாலும் தகவல் அளிக்க மறுக்கின்றனர். அதிலும் குறிப்பாக தனிப்பட்ட ஒருவரின் தகவல் என்றே மறுக்கப்படுகிறது. ஒருவர் அரசுப் பணிக்கு…
🔊 Listen to this தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவது ஆகும். ஆனால் தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் செயல்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக பிரிவு 8 ல் கூறப்பட்டுள்ள சில உட்பிரிவுகளை சுட்டிக்காட்டியே பெரும்பாலும் தகவல் அளிக்க மறுக்கின்றனர். அதிலும் குறிப்பாக தனிப்பட்ட ஒருவரின் தகவல் என்றே மறுக்கப்படுகிறது. ஒருவர் அரசுப் பணிக்கு…