வழக்குரைஞர்கள் மீது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
நீதித்துறைக்கு எதிராக ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் பணிபுரிய தடை விதிப்பதற்கு, நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் டி.ரவீந்திரன் வெளியிட்ட அறிவிப்பாணை:
வழக்குரைஞர்கள் சட்டப் பிரிவு 34(1) வழங்கியுள்ள அதிகாரத்தின் படி, அந்தச் சட்டத்தில் கீழ்காணும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
14-ஏ- தடை செய்யும் அதிகாரம்:
வழக்குரைஞர்கள் நீதிபதியின் பெயர், அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் பெற்றாலோ; நீதிமன்ற உத்தரவு, ஆவணங்கள் போன்றவற்றை அனுமதி இல்லாமல் மாற்றினாலோ(Tamper); நீதிபதி, நீதித்துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசினாலோ; கடும் சொல் கொண்டு பயமுறுத்தினாலோ; நீதிபதிகள் குறித்து பொய்யான, ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகள், புகார் மனுக்களை மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பினாலோ; நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் ஊர்வலம், போராட்டத்தில் ஈடுபட்டாலோ; நீதிபதி அறை முற்றுகை, கோஷங்கள் அடங்கிய அட்டையை தாங்கி நின்றாலோ; நீதிமன்றத்துக்குள் மது அருந்திவிட்டு நுழைந்தாலோ; அவர்கள்(வழக்குரைஞர்கள்) உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் நிரந்தரமாகவோ அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் குறிப்பிட்ட காலத்துக்கோ பணிபுரிய தடை விதிக்க நீதிமன்றமே நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இந்தத் தகவலை தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு நீதிமன்ற பதிவாளர் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
14-பி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்:
14-ஏ-இன் கீழ் பட்டியலிடப்பட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் பணிபுரிய தடை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உண்டு.
இதே போன்ற அதிகாரம் சார்பு நீதிமன்றங்களுக்கும் (subordinate court) பொருந்தும். இருப்பினும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விவரங்களை மாவட்ட முதன்மை நீதிபதிக்கு சார்பு நீதிமன்றங்கள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
14-சி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:
உயர்நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதி வழக்குரைஞர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கும் முன்னர், அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி, அவரது விளக்கத்தையும் கேட்க வேண்டும். விளக்கம் கேட்க வேண்டும். 14-டி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம்:
வழக்குரைஞர் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் போது, உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் பணிபுரிய இடைக்கால தடை விதிக்கும் அதிகாரமும் உயர்நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதிக்கு வழங்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறியும், நீதித் துறையின் மாண்புக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்படும் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இதுவரை பார் கவுன்சிலுக்கு மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் இந்த அதிகாரம் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் விதிமுறைகளில் உயர் நீதிமன்றம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் பரவலாகக் காணப்படுகிறது. இது குறித்து நீதித் துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
கே_சந்துரு (உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி)
வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ன்படி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் நடத்தை விதிகளை வகுக்கலாம் என்று உள்ளது.
டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது.
அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 34-ல் போதுமான விதிகளை வகுக்கவில்லை. எனவே, இரண்டு மாத காலத்துக்குள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என 2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போதே, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அப்போது விதிகள் வகுக்கப்படவில்லை. இப்போது தான் விதிமுறைகளை வகுத்துள் ளனர். இந்த விதிமுறைகள் தற்போது தேவையான ஒன்றுதான்.
ஆர்_காந்தி, (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)
அனைத்து நீதிமன்றங் களுக்கும் வழக்கறிஞர்களை தடை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டால், வழக்கறிஞர் களின் தன்னம்பிக்கை, தைரியம் போய்விடும்.
அவர்களால் ஒருவார்த்தைகூட எதிர்த்துப் பேச முடியாது. மேலும், கீழமை நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படும்போது பார் கவுன்சிலுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
பார்கவுன்சில்தான் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது வழக் கறிஞர்களை மிரட்டுவது போலா கும்.
சில நேரங்களில் சில வழக்குகளில் வழக்கறிஞர் கள் கடுமையாக வாதிட வேண்டி யிருக்கும். அதற்காக, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், எல்லா நிலையிலும் வழக்கறிஞர்கள் பயப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
இது நல்லதுக்கல்ல. வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்துள்ள திருத்தங்கள் வழக்கறிஞர்களை அச்சுறுத்துவதாகவே உள்ளது.
பி_வில்சன் (முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்)
வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் திருத்தம் செய்துள்ள விதிகளில் நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரி ஆகியோருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி னாலோ; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளித்தாலோ உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங் கள் தடை விதிக்க முடியும் என்று உள்ளது. இந்த இரண்டு விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற விதிகள் அனைத்தும் தேவையான ஒன்றுதான்.
ஆர்சிபால்கனகராஜ், (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்)
வழக்கறிஞர் மீதான புகார் மீது உரிய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு முடிந்தவரை சம்மன் தர வேண்டும்.
நேரில் ஆஜரான பிறகு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும். அதன்பிறகு புகார் நிரூபிக்கப்பட்டால் அந்த வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாக தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடை விதிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒரு நீதிபதி பணம் வாங்கிக் கொண்டுதான் உத்தரவு பிறப்பிக்கிறார் என்று ஆதாரத்துடன் தான் வழக்கறிஞர் புகார் தர வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. நீதிபதி பணம் வாங்கினால் அதை புகைப்படம் எடுத்தா நாங்கள் அனுப்ப முடியும்.
அதுதொடர்பாக வழக்கறிஞர் புகார் கொடுத்தால் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரத்துடன் தான் தர வேண்டும். இல்லாவிட்டால் புகார் கொடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்க்கிறோம்.
அதுபோல நீதிமன்ற வளாகத்திலே போராட்டம் செய்யக்கூடாது என்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
