நீதிமன்றத்தின்_முன்அனுமதி இல்லாமல் சமரசம்செய்து கொள்ளும் குற்றங்கள் (#Compoundable #offence)
நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் #குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டம் (#IPC) பிரிவுகள் 298, 323, 334, 341, 342, 352, 355, 358, 426, 427, 447, 448, 491, 497, 498, 500, 501, 502, 504, 506, 508 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களின் தரப்பினர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை
பாதிக்கப்பட்டவரும் (Victim) எதிரிகளும் (Accused) உள்ளூர் பஞ்சாயத்தார் முன்னிலையில் வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாம் என குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்தாலே போதுமானதாகும்.
மனு, கு. வி. மு. ச (#CrPC) பிரிவு 320(1)ன் கீழ் தாக்கல் செய்ய வேண்டும். மனுவில் பாதிக்கப்பட்டவரும், எதிரிகளும் கையேழுத்து போட வேண்டும்.
சமரசத்தின் பொருட்டு மனுத்தாக்கல் செய்த பின்னர், நீதித்துறை நடுவர் பாதிக்கப்பட்டவரை விசாரித்து, அவர் வழக்கில் சமரசம் செய்து கொண்டதை சாட்சியமாக அளித்த பின்னர் எதிரிகளை விடுதலை செய்வார்.
பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராகவோ, பிறவி மந்தராகவோ, பித்தராகவோ இருந்திடும் போது வழக்கு ஒன்றில் சமரசம் செய்து கொள்ள முடியாது.
அவர் சார்பாக அவரது தாய் அல்லது தந்தை அல்லது காப்பாளர் சமரசம் செய்து கொள்ளலாம்.
குற்றம் ஒன்றை சட்டப்படி சமரசமாக தீர்த்துக் கொள்ள, மற்றைய வகையில் தகுதி வாய்ந்த நபர் ஒருவர் இறந்திருக்கும் போது, அவரின் சார்பாக உரிமையியல் நடைமுறைச் சட்டம் (#CPC) 1908 கூறும் வரையறைகளின் படியுள்ள நபர்கள் சம்பவம் தொடர்பாக சமரசம் செய்து கொள்ளலாம்.
கு. வி. மு. ச பிரிவு 320(1) மற்றும் (2)ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை தவிர மற்றைய குற்றங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாது.
அதுபோன்ற குற்றங்களில் சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக (Hostiled Witnesses) ஆக்கியே விடுதலை பெற வேண்டும். தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று #சமரசம் செய்து கொள்ளலாம் (LW-CRI-1991-590)
நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள்:-
298- எவரது சமய உணர்வையேனும் வேண்டுமென்றே புண்படுத்தும் உட்கருத்தோடு சொல்லால் காயப்படுத்துதல்
323,334- காயம் விளைவித்தல்
341,342- எவரையேனும் சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் அல்லது அடைத்து வைத்தல்
352,355,358- தாக்குதல் அல்லது வன்முறை தாக்குதல்
426,427- சொத்தழிப்பு, தனிப்பட்ட ஒருவருக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் போது
447- அத்துமீறல் குற்றம்
448- வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்
491- ஊழிய ஒப்பந்த மீறுதல் குற்றம்
497- முறைபிறழ்ந்த புணர்ச்சி
498- திருமணமான பெண்ணை கடத்துதல்
500- அவதூறு
501- செய்தி ஒன்றை அவதூறானது என்று தெரிந்தே அச்சிடுதல் அல்லது செதுக்குதல்
502- அவதூறான செய்திகள் அடங்கிய நூல்களை அல்லது பொருட்களை விற்பனை செய்தல்
504- அமைதி குலைவை தூண்டக் கருதி அவமதிப்பு செய்தல்
506- மிரட்டல், 7 ஆண்டிற்கு உட்பட்டது
508- ஒருவரை அவர் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாவார் என்பதாக நம்புமாறு செய்வதன் மூலம் விளைவித்த செய்கை.