ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்: அமெரிக்காவை சீனா அலறவிடுவதன் பின்னணி என்ன?

எப்போதுமே வல்லரசு நாடுகள் அனைத்தும் உலக அரங்கில் தங்கள் பலத்தை நிரூபிக்க, அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை வழக்கமாகவைத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களில், அடுத்தடுத்து ஏவுகணைகளைச் சோதனை செய்து உலக நாடுகளை மிரளச் செய்தது வடகொரியா. அந்த வகையில், தற்போது ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணையை, சீனா சோதனை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏவுகணை

Also Read: வட கொரியா தென் கொரியா ஏவுகணை மோதல்: அச்சத்தில் உலக நாடுகள் – கிம் தேசத்தில் நடப்பது என்ன?

கடந்த மாதத்தில், `பைனான்ஷியல் டைம்ஸ்’ பத்திரிகை சீனாவின் புதிய சோதனை குறித்துச் சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில், “கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரகசியமாகப் பரிசோதனை செய்திருக்கிறது சீனா. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாகப் பயணிக்கும் திறன்கொண்டவை. இந்தச் சோதனைகள் அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. ஏனென்றால், இந்தத் தொழில்நுட்பம்கொண்ட ஏவுகணையை தற்போது கையில் வைத்திருக்கும் ஒரே நாடு சீனாதான்” என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையைச் சீனாவின் தென் பகுதியிலிருக்கும் கடலில் சோதனை செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்கா அச்சப்படுவது ஏன்?

அமெரிக்காவின் வியப்புக்கும் அச்சத்துக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையிலிருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் செயல்திறன்தான் காரணம். அணு ஆயுதங்களை ஏந்திச் செல்வதில் Ballistic Missile, Hypersonic Glide Vehicle என இரண்டு வகைகள் இருக்கின்றன. இரண்டுமே கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் பெற்றவைதான். ஆனால், பேலிஸ்டிக் வகையைப் பொறுத்தவரை, இது முதலில் புவியிலிருந்து கிளம்பி, பின்னர் விண்வெளிக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து (பரவளையப் பாதையில்) இலக்கை நோக்கிச் செல்லும். ஆனால், ஹைப்பர்சோனிக் வகையைப் பொறுத்தவரை இது வளிமண்டலத்துக்குள் நுழைந்து, புவியின் சுற்றுவட்டப் பாதையிலேயே பயணம் செய்து, அங்கிருந்து இலக்கை நோக்கி அதிவேகமாகச் செல்லும்.

இதில் பேலிஸ்டிக் ஏவுகணைகள், எளிதில் தரையிலிருக்கும் ரேடார்களில் சிக்கிவிடும். ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், மிக நெருக்கத்தில் வந்த பின்னர்தான் ரேடாரில் சிக்கும். அதிவேகத்தில் வரும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அவ்வளவு குறைந்த தூரத்திலிருந்து தடுத்து நிறுத்துவது மிக மிகக் கடினம்.

மேலும், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பேலிஸ்டிக் ஏவுகணைகளை அமெரிக்காவை நோக்கி ஏவினால், அவை வடதுருவத்தில்தான் (கனடா இருக்கும் மேற்பகுதி) வந்து தாக்கும். அங்கே அமெரிக்கா வலிமையான ரேடார், ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை வைத்திருக்கிறது. ஆனால், இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பொறுத்தவரை இதனால் அமெரிக்காவின் தென்துருவத்தையும் தாக்க முடியும். அங்கு அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அமெரிக்காவின் வலிமையான ஏவுகணை அரண்களைத் தாண்டியும் தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தற்போது சீனா தயாராக வைத்திருக்கிறது. இதனால், “சீனாவின் இந்த ஏவுகணை குறித்து அமெரிக்கா கவலைகொள்கிறதா?” எனக் கேட்டதற்கு, “ஆம்!” என்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்கா – சீனா

Also Read: `இரவு நேரத்தில் ஏவுகணை; சேட்டிலைட்டில் சிக்கிய 2 சிக்னல்!’- உக்ரைன் விமானம் வீழ்ந்த பின்னணி என்ன?

வாய் திறக்காத சீனா!

சீனா, இதுவரையிலும் இப்படியோர் ஏவுகணை சோதனை நடந்ததை ஒப்புக்கொள்ளவேயில்லை. ஆனால், அமெரிக்க உயரதிகாரிகள் பலரும் இதை உறுதி செய்திருக்கின்றனர். இந்த நிலையில், ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பில் சீனா, இன்னும் சில நவீன மாற்றங்களைச் செய்யவிருப்பதும் தற்போது தெரியவந்திருக்கிறது. எனவே, சீனாவுக்கு ஈடாக அமெரிக்காவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைத் தயாரிக்க வேண்டுமென்ற முடிவிலிருக்கிறது.

“ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தங்கள் பலத்தை நிரூபிக்க அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரித்துவருகின்றன. அணு ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்குச் சாட்சியாக ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் இன்றும் அதற்கான விளைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. சுற்றுச்சுழலை நஞ்சாக்கி, அடுத்தடுத்த தலைமுறைகளைக் கதிர்வீச்சின் மூலம் அவதிக்குள்ளாக்கும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது” என்பதே சுற்றுச்சூழலியலாளர்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

🔊 Listen to this எப்போதுமே வல்லரசு நாடுகள் அனைத்தும் உலக அரங்கில் தங்கள் பலத்தை நிரூபிக்க, அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை வழக்கமாகவைத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களில், அடுத்தடுத்து ஏவுகணைகளைச் சோதனை செய்து உலக நாடுகளை மிரளச் செய்தது வடகொரியா. அந்த வகையில், தற்போது ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணையை, சீனா சோதனை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏவுகணை Also Read: வட கொரியா தென் கொரியா ஏவுகணை மோதல்: அச்சத்தில் உலக நாடுகள் – கிம்…

🔊 Listen to this எப்போதுமே வல்லரசு நாடுகள் அனைத்தும் உலக அரங்கில் தங்கள் பலத்தை நிரூபிக்க, அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை வழக்கமாகவைத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களில், அடுத்தடுத்து ஏவுகணைகளைச் சோதனை செய்து உலக நாடுகளை மிரளச் செய்தது வடகொரியா. அந்த வகையில், தற்போது ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணையை, சீனா சோதனை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏவுகணை Also Read: வட கொரியா தென் கொரியா ஏவுகணை மோதல்: அச்சத்தில் உலக நாடுகள் – கிம்…