வைரல் ஆடியோ: `ஒரு ரூபாய்க்கூட திருப்பித் தரமாட்டேன்’ – உதயநிதி பி.ஏ என மிரட்டிய நபரை தேடும் போலீஸ்

  • 10

திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகாராஜன். இவரின் மகள் தேன்மொழி, எம்.எஸ்.டபிள்யு பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2017-ம் ஆண்டு சென்னையிலுள்ள ஹோட்டலில் கேஷியராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதே ஹோட்டலில் வேலை செய்த ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். ஓராண்டு கழித்து, திருமணமான நிலையில் சொந்த ஊருக்கே தேன்மொழி வந்துவிட்டார். இதனிடையே, ராஜேஷ் 2018-ம் ஆண்டு ஓர்நாள் தேன்மொழியைப் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். “நானும் ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு, தி.மு.க இளைஞரணியில் சேர்ந்து, உதயநிதி ஸ்டாலினிடம் உதவியாளராகப் பணிபுரிகிறேன். தலைமைச் செயலகத்தில் ஒரு பணியிடம் காலியாக இருக்கிறது. எனக்கு மேலிட செல்வாக்கு இருப்பதால், அந்தப் பணியில் உன்னை சேர்த்துவிடுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார். அவரின் பேச்சை நம்பி, சுமார் நான்கரை லட்சம் ரூபாயை சிறுக சிறுக கொடுத்துள்ளார் தேன்மொழி. மூன்று ஆண்டுகள் கடந்தும் தேன்மொழிக்கு வேலை வாங்கித் தரவில்லை.

ராஜேஷ்

இந்த நிலையில், “தி.மு.க ஆட்சி அமைந்துவிட்டது. கொஞ்சநாள் காத்திரு. கட்டாயம் வேலை வாங்கித் தருகிறேன்’’ என்று மீண்டும் கதை அளந்திருக்கிறார் ராஜேஷ். அவரின் பேச்சை நம்பி தேன்மொழியும் காத்திருந்தார். இதனிடையே, மேலும் சிலருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக தேன்மொழியை வைத்தே காய் நகர்த்தி லட்சக்கணக்கில் பணம் வாங்கினாராம் ராஜேஷ். நாள்கள் செல்ல செல்ல பணம் கொடுத்தவர்கள் வேலைக் கிடைக்காததால், தேன்மொழியின் வீட்டுக்கே சென்று நச்சரித்துள்ளனர். இதனால், ராஜேஷிடம் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார் தேன்மொழி. அப்போது ராஜேஷ் மிரட்டியதால், இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று புகாரளித்துள்ளார்.

அந்தப் புகார் மனு கந்திலி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தேன்மொழியை அழைத்து விசாரணை நடத்திய போலீஸார், பண மோசடி செய்த ராஜேஷையும் போனில் தொடர்புகொண்டு விசாரணைக்காக அழைத்தனர். விசாரணைக்கு வர மறுத்த அவர், “நான் உதயநிதி ஸ்டாலின் பி.ஏ. புகார் கொடுத்தவர்களை தலைமைச் செயலகம் அனுப்பி வையுங்கள். நான் உங்களை ஏலகிரி மலையிலுள்ள எம்.எல்.ஏ ஒருவரின் ரிசார்ட்டில் வந்து சந்திக்கிறேன்’’ என்று கூறும் ஆடியோவும் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில், புகார் கொடுத்த தேன்மொழிக்கு ராஜேஷ் பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ உரையாடல்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கின்றன.

தேன்மொழி

அந்த ஆடியோ உரையாடல்களில், “நான் உதயநிதி ஸ்டாலினுடைய பி.ஏ. உன்னால, என்னை எதுவும் செய்ய முடியாது. ஆயிரத்தெட்டு போலீஸ்காரன் என்கிட்ட பேசுறான். என் கட்சி இன்ஃப்ளுயன்ஸ் வைச்சு, இந்த விவகாரத்தை முடிச்சுக்கிறேன். நீ… உன்னோட லைஃப்பை பார்த்துக்க. எவனுக்கும் ஒரு ரூபாய்க்கூட கொடுக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிகிறேன். நீ எங்க போனாலும் உனக்குத்தான் ஆபத்து. ஒரு வருஷசத்துக்கு எங்கேயாவது போய் மறைஞ்சுக்க. அப்புறம், ‘ஏன் இப்படி பண்ணிட்ட’ன்னு எங்கிட்ட சொல்லிடாத. இன்றிலிருந்து நான் விளையாடப் போகிறேன்’’ என்பதோடு ஆடியோ உரையாடல்கள் முடிகின்றன.

இது தொடர்பாக, மிரட்டலுக்கு ஆளான தேன்மொழியிடம் பேசினோம். “உதயநிதி ஸ்டாலினுடைய பி.ஏ-னு சொல்லிதான் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்குனாரு. எப்போது கேட்டாலும், உதயநிதி அண்ணன்கிட்ட சொல்லிட்டேன். இப்பக்கூட அவர்கிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன்னு சொல்லுவாரு. போலீஸ்-ல புகார் கொடுத்தப் பின்னர், டிசம்பர் 29-ம் தேதிக்குள்ள மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணிடுறதா சொன்னாரு. அவர் வீடு சென்னை பெருங்குடியில இருக்கிறதா சொன்னாரு. அங்கப் போய் பார்த்தா அட்ரஸ் மாறியிருந்துச்சு. அப்புறம் வேளச்சேரினு சொன்னாரு. அங்கேயும் இல்ல. போலி முகவரி கொடுத்து ஏமாத்துறாருனு பின்னாடிதான் தெரிஞ்சது.

ராஜேஷ்

என்னை மாதிரியே பணத்தை இழந்த மத்தவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த தேவகி என்பவர்கிட்டேயும் 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கியிருக்கிறாரு. தேவகிக்கு தலைமைச் செயலர் உதவியாளர் பணி போட்டுத் தருவதாக சொன்னாரு. பணத்தை கொடுத்து ஏமாந்துட்ட தகவல் தெரிஞ்சு தேவகி வீட்டுக்காரர் ஒரு முறை தற்கொலை செஞ்சுக்க முயற்சிப் பண்ணாரு. அதிலிருந்து உடல்நிலைப் பாதிக்கப்பட்டு, சமீபத்துல இறந்துட்டாரு. இந்த மாதிரி பலப் பேருடைய குடும்பம் தவிச்சிக்கிட்டு இருக்குது. டிசம்பர் 29-ம் தேதி பணம் தருவதா சொன்ன ராஜேஷ்கிட்ட மூணு நாளைக்கு முன்னாடி போன் போட்டு பணம் கேட்டேன். ‘நான் ஆளும் கட்சி. அதுவும் உதயநிதி ஸ்டாலின் பி.ஏ. பணம் கொடுத்த மொத்த பேரையும் கூட்டிக்கிட்டு தலைமைச் செயலகம் வா. அப்புறம் தெரியும். ஒரு வருஷத்துக்கு என் கண்ணுல நீ படாதே’ என்று மிரட்டல் விடுத்தார். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்னை காப்பாத்துங்க’’ என்றார்.

தேன்மொழியிடமிருந்து ராஜேஷின் செல் நம்பரைப் பெற்று, அவரிடம் விளக்கம் கேட்பதற்காகப் போன் செய்தோம். அந்த எண் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, வேலூர் சரக டி.ஐ.ஜி பாபுவிடம் பேசினோம். “அந்த நபரைப் பிடிப்பதற்காக ஒரு டீம் அமைக்கப்பட்டுள்ளது. அவரைப் பிடித்து விசாரித்தப் பின்னர் தகவல் சொல்கிறேன்’’ என்றார். கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, அவருக்கும் உதயநிதிக்கும் தொடர்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷை போலீஸார் கைது செய்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்!.

AIARA

🔊 Listen to this திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகாராஜன். இவரின் மகள் தேன்மொழி, எம்.எஸ்.டபிள்யு பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2017-ம் ஆண்டு சென்னையிலுள்ள ஹோட்டலில் கேஷியராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதே ஹோட்டலில் வேலை செய்த ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். ஓராண்டு கழித்து, திருமணமான நிலையில் சொந்த ஊருக்கே தேன்மொழி வந்துவிட்டார். இதனிடையே, ராஜேஷ் 2018-ம் ஆண்டு ஓர்நாள் தேன்மொழியைப் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். “நானும் ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு, தி.மு.க இளைஞரணியில்…

AIARA

🔊 Listen to this திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகாராஜன். இவரின் மகள் தேன்மொழி, எம்.எஸ்.டபிள்யு பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2017-ம் ஆண்டு சென்னையிலுள்ள ஹோட்டலில் கேஷியராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதே ஹோட்டலில் வேலை செய்த ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். ஓராண்டு கழித்து, திருமணமான நிலையில் சொந்த ஊருக்கே தேன்மொழி வந்துவிட்டார். இதனிடையே, ராஜேஷ் 2018-ம் ஆண்டு ஓர்நாள் தேன்மொழியைப் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். “நானும் ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு, தி.மு.க இளைஞரணியில்…

Leave a Reply

Your email address will not be published.