“வெறுப்புணர்வைத் தூண்டி பணம் பார்க்கும் மார்க்”-பேஸ்புக்கை விமர்சித்த முன்னாள் பெண் ஊழியர்!

முகநூல் நிறுவனம் வெறும் லாபத்தை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்காக அந்த நிறுவனம் அதன் பயனாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்கிறது என்று முகநூல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹவ்கென் (Frances Haugen) குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு அதற்கான ஆவணங்களை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது வெளிப்படையாகவே அதுகுறித்து பேசியிருக்கிறார்.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்

முகநூல் நிறுவனம் உலகம் முழுவதும் 2.85 பில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்நிறுவனம், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. சமீபத்தில் தொழில்நுட்ப தடங்கல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பக்கங்கள் செயல்படவில்லை. தடைப்பட்ட சில மணி நேரங்களிலேயே பேஸ்புக் நிறுவனர் மற்றும் CEO மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு 140 பில்லியன் டாலராக இருந்த அவரின் சொத்து மதிப்பு தற்போது 120 பில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்திருக்கிறது.

பேஸ்புக்கின் இந்த சரிவுக்குத் தொழில்நுட்ப கோளாறு மட்டும் காரணம் கிடையாது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹவ்கென் சமீபத்தில் பேஸ்புக் குறித்துப் பேசியதும் மிக முக்கிய காரணம் என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பிரான்சிஸ் அளித்திருந்த பேட்டியில், “ நீங்கள் நினைப்பதை விட மிக மோசமான விஷயங்கள் பேஸ்புக்கில் நடக்கின்றன. வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளையும், போலி செய்திகளையும் தெரிந்தே அந்த நிறுவனம் கண்டுகொள்ளாமல் செயல்படுகிறது” என்று கூறியிருந்தார்.

பிரான்சிஸ் ஹவ்கென்

பிரான்சிஸ் ஹவ்கென் பேஸ்புக்கின் ‘தயாரிப்பு மேலாளர்’ (Product Manager) ஆக பணிபுரிந்தவர். பேஸ்புக் குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டிருந்தார். மேலும், அமெரிக்க செனட் சபையில் பேசிய அவர், “இன்ஸ்டாகிராம் செயலி மூலம் இளைஞர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து அந்த நிறுவனம் நன்கு அறிந்திருக்கிறது. அந்த பிரச்சினைகளை அவர்களால் சுலபமாகச் சரிசெய்யவும் முடியும். இருந்தாலும், அதைத் தடுக்க அந்த நிறுவனம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்று கூறினார்.

நான் பேஸ்புக்கில் பணிக்குச் சேர்ந்ததன் மூலம், இந்த உலகிற்கு ஏதாவது நன்மை செய்யமுடியும் என்று நம்பினேன். ஆனால், அங்கு நடைபெறும் செயல்கள் குழந்தைகளுக்கு எதிராக இருக்கிறது. முகநூலில் உள்ள சில அம்சங்கள் குழந்தைகளுக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. மேலும், பேஸ்புக்கின் செயல்பாடுகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடும், அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக அமையவும் வாய்ப்புள்ளது” என்று பிரான்சிஸ் ஹவ்கென் கூறியிருந்தார்.

பிரான்செஸ் ஹவ்கென்

பிரான்சிஸ் ஹவ்கென் பேஸ்புக் குறித்த சில முக்கிய ஆவணங்களை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பித்திருந்தார். மேலும், “கண்டிப்பாக இந்த விவகாரத்தில் செனட் சபை நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டார்கள்” என்று செனட் சபையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக செனட் சபை தீவிர விசாரணை நடத்திவருகிறது.

Also Read: 20 கோடி இந்தியர்களின் டேட்டா… வாட்ஸ்அப், பேஸ்புக் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தா?!

அமெரிக்கத் தேர்தல் சமயத்தில் பேஸ்புக் நிறுவனம் மக்களின் தகவல்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு முன்பு பேஸ்புக் தொழில்நுட்ப தடை காரணமாக ஒரு சில முறை முடங்கியிருக்கிறது. ஆனால், இம்முறை தடையைச் சரிசெய்ய ஏழு மணி நேரத்திற்கும் மேலானது. பேஸ்புக் நிறுவனம் பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கியிருப்பதால், சில முக்கிய நிறுவனங்கள் பேஸ்புக்குக்கு விளம்பரம் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மார்க் சக்கர்பெர்க் | Mark Zuckerberg

பேஸ்புக் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அந்த நிறுவனத்தின் CEO மார்க் சக்கர்பெர்க், “பேஸ்புக் நிறுவனம் விளம்பரங்களின் மூலம்தான் வருமானம் ஈட்டிவருகிறது. தீங்கு விளைவிக்கும் அல்லது ஆத்திரமூட்டும் உள்ளடக்கங்களுக்கு அடுத்து தங்களின் விளம்பரங்கள் வருவதை எந்த நிறுவனமும் விரும்பாது. பேஸ்புக் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது. இந்த நிறுவனம் மக்களின் பாதுகாப்பில் முழு அக்கறை கொண்டுடிருக்கிறது” என்று பதிலளித்தார்.

AIARA

🔊 Listen to this முகநூல் நிறுவனம் வெறும் லாபத்தை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்காக அந்த நிறுவனம் அதன் பயனாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்கிறது என்று முகநூல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹவ்கென் (Frances Haugen) குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு அதற்கான ஆவணங்களை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது வெளிப்படையாகவே அதுகுறித்து பேசியிருக்கிறார். பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் முகநூல் நிறுவனம் உலகம் முழுவதும் 2.85 பில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது.…

AIARA

🔊 Listen to this முகநூல் நிறுவனம் வெறும் லாபத்தை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்காக அந்த நிறுவனம் அதன் பயனாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்கிறது என்று முகநூல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹவ்கென் (Frances Haugen) குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு அதற்கான ஆவணங்களை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது வெளிப்படையாகவே அதுகுறித்து பேசியிருக்கிறார். பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் முகநூல் நிறுவனம் உலகம் முழுவதும் 2.85 பில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது.…