விவசாயிகளை ஏமாற்றி கோடிக் கணக்கில் கடன்? திருஆரூரான் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எப்போது?

  • 5

தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆரூரான் குழுமத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள், அப்பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் தரவேண்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல். விவசாயிகளின் பெயரில் முறைகேடாக, வங்கிகளில் பலநூறு கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையை, அரசியல் செல்வாக்குப் பெற்ற புதிய நபர்கள் சிலர் வாங்கப்போவதாக தகவல் பரவியுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் தர வேண்டிய பணம் மற்றும் இவர்கள் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகம் வாங்கியுள்ள பல நூறு கோடி கடனின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள்.

சுந்தர விமலநாதன்

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கந்தின் செயலாளரும், கரும்பு விவசாயிகளின் நலன்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவருமான சுவாமிமலை சுந்தர விமலநாதன், “திருஆரூரான் குழுமத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடி, துகிலி பகுதிகள்லயும் கடலூர் மாவட்டத்துல பெண்ணாடம், ஏ. சித்தூர்லயும் செயல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. இந்த ஆலைகளுக்காக கரும்பு சாகுபடி செஞ்ச விவசாயிகள் அடைஞ்ச துயரம் கொஞ்சநஞ்சமல்ல. அறுவடைக்கு தயாரான கரும்புகளை பல மாதங்கள் வரைக்கும் அறுவடை செய்யாமல், விவசாயிகளை இழுத்தடிக்குறது, அரைச்ச கரும்புக்கு, பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்றதுனு இன்னும் ஏகப்பட்ட பாதிப்புகளை கொடுத்தாங்க. இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுதான் விவசாயிகள் கரும்பு சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தாங்க.

Also Read: அடிச்சு புடுங்கறதுக்கு பேருதான் அரசாங்கமா? – கொதிக்கும் விவசாயிகள்… தகிக்கும் நெய்வேலி!

இந்த நிலையிலதான், 2016-க்கு பிறகு கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தை ஆலை நிர்வாகம் கொடுக்கவே இல்லை. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் பல லட்சம் ரூபாய் பணம் வர வேண்டியதிருக்கு. தங்களோட கடும் உழைப்பையும், முதலீட்டையும் செலுத்தி, கரும்பு விளைவிச்சி கொடுத்த விவசாயிகளோட வயித்துல அடிக்குறது, மிகப்பெரிய கொடுமை. கரும்புக்கு மத்திய அரசாங்கம் அறிவிச்ச சட்டப்பூர்வமான விலையை கொடுக்கலை.

தமிழக அரசின் பரிந்துரை விலையையும் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கொடுக்கலை. விவசாயிகளோட பணத்தை ஏமாத்தணும்னுங்கறதுதான் ஆலை நிர்வாகத்தோட நோக்கம், விவசாயிகளோட உழைப்புல உற்த்தி செய்யப்பட்ட கரும்பை அரைச்சி, சர்க்கரையை வெளியில விற்பனை செஞ்சி கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்துட்டாங்க. ஆனால் விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்க மனசு வரலை. இதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க. இது இன்னும் கொடுமை.

திருஆரூரான் சர்க்கரை ஆலை

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கொடுத்த கரும்புக்கு, 100 கோடி ரூபாய் பணம் வர வேண்டியதிருக்கு. இந்த நிலையிலதான், பூர்த்தி செய்யப்படாத சில விண்ணப்பத்தை கரும்பு விவசாயிகள்கிட்ட கொடுத்து, `இதுல கையெழுத்து போட்டு கொடுத்திங்கனா, உங்களுக்கு தர வேண்டிய கரும்பு பணம் உடனே கிடைச்சிடும்’னு ஆலை தரப்புல சிலர், விவசாயிகளை ஏமாத்தி கையெழுத்து வாங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்ல பல நூறு கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது. இது மிகப்பெரிய மோசடி, விவசாயிகள் பெயரை முறைகேடாக பயன்படுத்தி, சர்க்கரை ஆலை நிர்வாகம் கடன் வாங்கியது, சட்டவிரோத செயல். இதுல வங்கி அதிகாரிகளுக்கும் பங்கிருக்கு. ஒருத்தரோட விரலை எடுத்து அவர் கண்ணையே குத்துற மாதிரி, இதுல சுயநலமிக்க சில விவசாயிகளையே பயன்படுத்தி, மத்த விவசாயிகள்கிட்ட கையெழுத்து வாங்கியிருக்காங்க. விவசாயிகள் சிலரே இதுல உடந்தையாக இருந்ததுதான் மிகப்பெரிய வேதனை. தாங்கள் வாங்காத கடனுக்கு, விவசாயிகள் கடனாளி ஆகி நிக்குறாங்க. பணத்தை கட்டச்சொல்லி, வங்கிகள் விவசாயிகளுக்கு நோட்டிஸ் அனுப்பிக்கிட்டு இருக்கு. இதுக்கு இடையில கடந்த பல மாதங்களா சர்க்கரை ஆலை இயங்கவே இல்லை.

விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கரும்பு பணத்தை வாங்கி கொடுக்க, கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வான எந்த முயற்சியையுமே எடுக்கலை. திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்னு ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து எட்டு மாசத்துக்கு மேலாகியும் எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கப்படலை. இந்த சூழல்லதான், திருமண்டகுடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை வேறொரு புதிய நபர் வாங்கப் போறதா பேச்சு அடிபட்டுக்கிட்டு இருக்கு. விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு பணம் நிலுவையில இருக்குறதுனால, இந்த ஆலையை புதிய நபர்கள் வாங்கி, தொடர்ந்து இயக்குறதுல, சட்ட சிக்கல் இருக்கு, இதனால, விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்துல பாதியை மட்டும் கொடுத்துட்டு, இதுக்கு சம்மதம் வாங்குறதுக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கு. இதுவும் கூட மோசடிதான். விவசாயிகளுக்கு தர வேண்டிய முழு பணத்தையும், புதிய நிர்வாகம் கொடுத்தாகணும். இல்லைனா, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம், ஆலையை இயங்கவிடாமல் தடுப்போம். புதிய நிர்வாகத்துக்கிட்ட இருந்து முழு பணத்தையும் விவசாயிகளுக்கு பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

Also Read: `தன் சொத்துக்களை விற்றுத்தான் பென்னிகுக் அணை கட்டினாரா?’ – கவிஞரின் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

இப்பிரச்னை குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நாம் பேசியபோது, “விவசாயிகள் உற்பத்தி செஞ்சிக் கொடுத்த கரும்புக்கு, சர்க்கரை ஆலை நிர்வாகம், பணம் கொடுக்கலைங்கறது, வேதனையானது. அந்த பணம் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கணும்ங்கறதுதான் என்னோட நிலைப்பாடு. இது தொடர்பாக விவசாயிகள்கிட்ட கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும். பெரும்பான்மையான விவசாயிகளோட கருத்துப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என தெரிவித்தார்.

AIARA

🔊 Listen to this தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆரூரான் குழுமத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள், அப்பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் தரவேண்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல். விவசாயிகளின் பெயரில் முறைகேடாக, வங்கிகளில் பலநூறு கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையை, அரசியல் செல்வாக்குப் பெற்ற புதிய நபர்கள் சிலர் வாங்கப்போவதாக தகவல் பரவியுள்ளது. இதனால்…

AIARA

🔊 Listen to this தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆரூரான் குழுமத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள், அப்பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் தரவேண்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல். விவசாயிகளின் பெயரில் முறைகேடாக, வங்கிகளில் பலநூறு கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையை, அரசியல் செல்வாக்குப் பெற்ற புதிய நபர்கள் சிலர் வாங்கப்போவதாக தகவல் பரவியுள்ளது. இதனால்…

Leave a Reply

Your email address will not be published.