“முதல்வர் ரங்கசாமியை டம்மியாக்கிவிட்டார்கள்!” – கடுகடுக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

  • 3

படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி காந்தி நகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் எதிரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, “புதுச்சேரி மாநிலத்தில் படித்த பட்டதாரிகளுக்கு கடந்த 6 மாதமாக என்ஆர்.காங் – பாஜக கூட்டணி அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்திற்குள் 10,000 பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தல் நேரத்தில் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரும் புதுச்சேரியில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என கூறினர். ஆனால் இதுவரை பணியிடங்களை நிரப்பவில்லை. பணியிடங்களை நிரப்ப எங்களிடம் நிதியில்லை என பா.ஜ.க அமைச்சர்கள் இப்போது கூறுகின்றனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி – கவர்னர் தமிழிசை

மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் பணியிடங்களை நிரப்ப முடியும் என முதல்வர் கூறுகிறார். இப்படி கூறுபவர்கள் ஏன் தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தார்கள்? புதுச்சேரியில் 24% படித்த பட்டதாரிகள் வேலையின்றி இருக்கின்றனர். குறிப்பாக புதுச்சேரியில் பொறியியல் படித்துவிட்டு சுமார் 1,200 பேர் ஒரு வருடத்திற்கு வெளியே வருகிறார்கள். மருத்துவக் கல்லூரியில் 500 பேர் வெளியே வருகிறார்கள். விவசாயம், செவிலியர், கால்நடை கல்லூரிகளில் ஆயிரக்கணக்கானோர் படித்துவிட்டு வருகின்றனர். மத்திய மோடி அரசு 2014 தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை கொடுப்போம் என கூறியது. இப்போது 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. 14 கோடி பேருக்கு வேலை அளித்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா வந்தபிறகு 24 கோடி பேர் வேலையின்றி நாட்டில் உள்ளனர். மோடி கதையும் அது தான், ரங்கசாமி கதையும் அதுதான்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் கூட்டுறவு துறையில் ஆட்களை நியமித்தோம். பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், தொழில் முனைவோர் ஆராய்ச்சிமையம் போன்றவை நாங்கள் கட்டி முடித்தது. இவர்கள் ஒன்றும் புதிதாக கட்டவில்லை. 10,000 பேருக்கு நாங்கள் ஒப்புதல் வாங்கி வைத்த பென்ஷனைத்தான் இப்போது அவர்கள் கொடுக்கிறார்கள். புதுச்சேரியை பொறுத்தவரை வாக்குறுதி அரசாகத்தான் இருக்கிறது. மக்கள் திட்டங்களை நிறைவேற்றும் அரசாக இல்லை. அரிசிக்காக ஒதுக்கும் பணத்ததைதான் ரூ.5,000/- மழை நிவாரணமாக கொடுத்தார் ரங்கசாமி. புதிதாக நிவாரணம், நிதி மத்திய அரசு தரவில்லை. மாநில அஸ்தஸ்து தரவில்லை. கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர். பேரிடர் மீட்புத் துறை தலைவர் முதல்வர்தான். ஆனால் கொரோனா காலத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை அவர் நடத்தவில்லை.

Also Read: ”பிரதமரும், உள்துறை அமைச்சரும் புதுச்சேரியைப் புறக்கணிக்கிறார்கள்!’’ – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

மாறாக கவர்னர் நடத்துகிறார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கிறதா ? இல்லை ஜனாதிபதி ஆட்சி நடக்கிறதா ? கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. ஆனால் அதற்கான கட்டமைப்பு இன்னமும் செய்யப்படவில்லை. மருத்துவமனைகளில் அதற்காக இடம் ஏற்படுத்தவில்லை. விழா கொண்டாட்டம், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டம் என்கிறார்கள். எல்லாவற்றிலும் நிர்வாகம் ஸ்தம்பித்து போயிருக்கிறது. பொது இடத்தில் பெரிய விழாக்கள் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலங்கானாவுக்குத் தான் முழுநேர கவர்னர். புதுச்சேரிக்கு அவர் துணைநிலை ஆளுநர்தான். ஆனால் அவர் எப்போதும் புதுச்சேரியிலேயே உட்கார்ந்திருக்கிறார். ஏனென்றால் இங்கு அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். முதல்வரை டம்மியாகி விட்டார்கள். கவர்னரை எதிர்த்து எதற்காக நாங்கள் போராடினாமோ அதனை ரங்கசாமி வீணடித்து விட்டார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கவில்லை, கவர்னரின் அரசு தான் நடக்கிறது. இது வெட்கக்கேடான விஷயம். பா.ஜ.கவினர் சடுகுடு விளையாடுகிறார்கள். சடுகுடு விளையாடும் நேரமா இது?” என்றார் காட்டமாக.

🔊 Listen to this படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி காந்தி நகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் எதிரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, “புதுச்சேரி மாநிலத்தில் படித்த பட்டதாரிகளுக்கு கடந்த 6 மாதமாக என்ஆர்.காங் – பாஜக கூட்டணி அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால்…

🔊 Listen to this படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி காந்தி நகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் எதிரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, “புதுச்சேரி மாநிலத்தில் படித்த பட்டதாரிகளுக்கு கடந்த 6 மாதமாக என்ஆர்.காங் – பாஜக கூட்டணி அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *