மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கணவர் – நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் தர்ணா!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மகள் மாரியம்மாள். இவருக்கும் கோவில்பட்டி அருகிலிருக்கும் காட்டுராமன்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான லட்சுமணன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாரியம்மாளுடன் பேச்சுவார்த்தையைத் தவிர்த்துவந்த அவர் கணவர் லட்சுமணன், மனைவிக்குத் தெரியாமலேயே இரண்டாவதாக நித்யா எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட மாரியம்மாள்

இதையறிந்த மாரியம்மாள், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் லட்சுமணன், மாமனார் கிருஷ்ணன், மாமியார் சிந்தா, கணவரின் இரண்டாவது மனைவி நித்யா, அவரின் பெற்றோர்களான கருப்பசாமி, பூப்பாண்டியம்மாள் உள்ளிட்டோர்மீது புகார் அளித்தார். ஆனால், அவர் புகாரின் மீது போலீஸார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த மாரியம்மாள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென தன் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவரை அப்புறப்படுத்த முயன்றும், மாரியம்மாள் தன் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை எனக் கூறி தொடர் தர்ணாவில் ஈடுபட்டார். அதையடுத்து, போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அப்போதும் அவர் தர்ணாவைக் கைவிடாததால், மகளிர் போலீஸார் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறியவற்றைக் கேட்ட போலீஸார், புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.

கண்ணீருடன் மாரியம்மாள்

அதையடுத்து அவர், போராட்டத்தைக் கைவிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் புகார் மனு அளித்தார். இது குறித்து மாரியம்மாளிடம் பேசினோம். “என்னோட கணவர் கோவில்பட்டியில இருக்குற அரசுப் பள்ளியில இயற்பியல் ஆசிரியரா வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். என்னோட கணவர், அதே பள்ளியில ஆசிரியையா வேலை பார்க்குற நித்யாங்கிற பெண்ணை ரெண்டாவதா கல்யாணம் செஞ்சுருக்கார். இந்த விஷயம் எனக்கு ரொம்ப நாளுக்குப் பிறகுதான் தெரிய வந்துச்சு.

இப்போ அந்த பொண்ணு நித்யா, ஒன்பது மாச கர்ப்பிணி. இது சமபந்தமா கோவில்பட்டி அனைத்து மகளிர் ஸ்டேஷன்ல கணவர் மேலயும், ரெண்டாவதா கல்யாணம் செய்ய உடந்தையா இருந்தவங்க மேலயும் கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். ஆனா, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் கணவருக்கு, ஏன் ரெண்டாவது கல்யாணம் செஞ்சுவெச்சீங்கன்னு என்னோட மாமனாரிடம் கேட்டதுக்கு, `நீ லட்சக்கணக்குல பணம் கொண்டு வந்து கொடுத்தா மகனோட சேர்த்துவைக்கிறேன்’ன்னு சொன்னார்.

மாரியம்மாளை அழைத்துச் சென்ற போலீஸார்

என்னாலயோ, என்னோட குடும்பத்தினராலயோ அவங்க கேட்குற அளவுக்குப் பணம் தர முடியாது. என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்தப்போ 20 பவுன் நகையை வரதட்சணையா கொடுத்தோம். அதுல 10 பவுன் நகையை என்னோட கணவர் வித்துட்டார். மீதி 10 பவுன் நகையை அடமானம்வெச்சுட்டாங்க. முதல் மனைவி நான் உயிருடன் இருக்கும்போதே என்னுடைய சம்மதம் இல்லாமல் என்னோட கணவர் ரெண்டாவது திருமணம் செய்தது என்னை மிகுந்த வேதனை அடையச் செய்திருக்கிறது. என்னோட கணவர் உள்ளிட்டோரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

🔊 Listen to this தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மகள் மாரியம்மாள். இவருக்கும் கோவில்பட்டி அருகிலிருக்கும் காட்டுராமன்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான லட்சுமணன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாரியம்மாளுடன் பேச்சுவார்த்தையைத் தவிர்த்துவந்த அவர் கணவர் லட்சுமணன், மனைவிக்குத் தெரியாமலேயே இரண்டாவதாக நித்யா எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…

🔊 Listen to this தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மகள் மாரியம்மாள். இவருக்கும் கோவில்பட்டி அருகிலிருக்கும் காட்டுராமன்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான லட்சுமணன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாரியம்மாளுடன் பேச்சுவார்த்தையைத் தவிர்த்துவந்த அவர் கணவர் லட்சுமணன், மனைவிக்குத் தெரியாமலேயே இரண்டாவதாக நித்யா எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…