பொங்கல் பொருள்: `புளியில் பல்லி; தந்தை மீது புகார்!’ – மன உளைச்சலில் மகன் தீக்குளித்து தற்கொலை?

  • 5

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியிலிருக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கூட்டுறவுப் பண்டகக் கடை எண் இரண்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்குத் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. கடந்த ஏழாம் தேதி, தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்த 70 வயதாகும் நந்தன் என்ற முதியவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது, புளி பார்சலில் இறந்துப்போன பல்லிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்து, மீண்டும் ரேஷன் கடைக்கு வந்தவர், புளி பார்சலை மாற்றித்தருமாறு கடை ஊழியர் சரவணனிடம் கேட்டுள்ளார்.

முதியவர் நந்தன்

ரேஷன் கடை பணியாளர், வேறு பார்சலை தர மறுத்ததுடன், ‘பொருள்களை சப்ளை செய்த ஆளும் கட்சியினரிடம் போய் கேள்’ எனச்சொல்லி அலட்சியப்படுத்தும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த செய்தியாளர்களிடம், நடந்ததைக் கூறினார் நந்தன். ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தியதாக நந்தன் மீது ரேஷன் கடை ஊழியர் சரவணன் திருத்தணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். தவறான தகவலைப் பரப்பியதாக நந்தன் மீது பிணையில் வெளியில் வர முடியாதப் பிரிவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனால், நந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த நந்தனின் மகன் குப்புசாமி (36), தற்கொலை எண்ணத்தில் நேற்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அப்போது, வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 80 சதவிகித தீக்காயம் இருந்ததால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டிருந்த குப்புசாமி சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை கைது செய்யக்கோரி, திருத்தணி – அரக்கோணம் சாலையில் முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.பி கோ.ஹரி தலைமையில அ.தி.மு.க-வினர் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் கூறுகையில், “கால் கிலோ புளிக்காக முதியவர் நந்தன் விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை. அவர் அப்படியான நபரும் இல்லை. நல்ல மனிதர். புளியில் பல்லிக் கிடப்பதாகப் புகார் சொன்னதால், போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஸ்டேஷனில் வைத்து அவரை டார்ச்சர் செய்துள்ளனர். புளியில் பல்லிக் கிடந்த விவகாரத்தை ஊடகங்களில் சொன்னதால் ஆளும் தி.மு.க-வினரின் தூண்டுதலின்பேரில் போலீஸார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நந்தன் இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். தந்தையின் நிலையைப் பார்த்து மன உளைச்சலடைந்து, இளைஞர் குப்புசாமி உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு உயிர்ப் போகக் காரணமாக இருந்த உள்ளூர் ஆளும் கட்சிப் பிரமுகர்கள், பொய் வழக்கு பதிவு செய்த போலீஸார் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினரைப் போலீஸார் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகக் கூறிய தன் தந்தை நந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், தற்கொலைக்கு முயன்ற குப்புசாமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையைக் கூறினால் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என தி.மு.க ஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது. கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்விக் கேட்டால், மரணம்தான் பதிலாகக் கிடைக்கிறது. இது தற்கொலை அல்ல, ஜனநாயகப் படுகொலை’’ என்று தெரிவித்துள்ளார்.

AIARA

🔊 Listen to this திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியிலிருக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கூட்டுறவுப் பண்டகக் கடை எண் இரண்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்குத் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. கடந்த ஏழாம் தேதி, தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்த 70 வயதாகும் நந்தன் என்ற முதியவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது, புளி பார்சலில் இறந்துப்போன பல்லிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.…

AIARA

🔊 Listen to this திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியிலிருக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கூட்டுறவுப் பண்டகக் கடை எண் இரண்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்குத் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. கடந்த ஏழாம் தேதி, தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்த 70 வயதாகும் நந்தன் என்ற முதியவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது, புளி பார்சலில் இறந்துப்போன பல்லிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.…

Leave a Reply

Your email address will not be published.