“பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியது இதற்காகத்தான்!” – பிரதமர் மோடி விளக்கம்

  • 4

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி 25-வது தேசிய இளைஞர் விழா, அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மூன்றையும் புதுவையில் கொண்டாட திட்டமிடப்பட்டது. அதற்காக இன்று (ஜனவரி 12) முதல் 16-ம் தேதி வரை நடக்கவிருந்த தேசிய இளைஞர் விழாவுக்காக நாடு முழுவதிலும் இருந்து 7,500 மாணவர்கள் புதுச்சேரிக்கு வருவதாக இருந்தது. அந்த விழாவை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடியும் புதுச்சேரிக்கு வருகை தரவிருந்தார். ஆனால் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டதுடன் தேசிய இளைஞர் விழாவை காணொலியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

காணொலியில் உரையாடும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று காலை தேசிய இளைஞர் விழாவை காணொலியில் தொடங்கி வைத்தார். தனியார் ஹோட்டலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர். அத்துடன் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், நாராயண் ரானே, மற்றும் நிசித் பிரமாணிக் உள்ளிட்டோரும் இணைய வழியாக பங்கேற்றனர்.

விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுவையில் ரூ.122 கோடி முதலீட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப மையத்தையும், கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.23 கோடியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து காணொலியில் பேசிய பிரதமர் மோடி, “நடப்பாண்டு விவேகானந்தரின் பிறந்தநாள் அதிக ஊக்கமளிக்கிறது. ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் மற்றும் மகாகவி சுப்ரமணிய பாரதியின் 100-வது நினைவு தினம் ஒரே ஆண்டில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் மோடி திறந்து வைத்த காமராஜர் மணிமண்டபம்

இந்த இரு முனிவர்களுக்கும் புதுச்சேரிக்கும் சிறப்புத் தொடர்பு உண்டு. இருவரும் ஒருவருக்கொருவர் இலக்கிய மற்றும் ஆன்மிகப் பயணத்தில் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். இன்று உலகம் இந்தியாவை நம்பிக்கையுடனும் பார்க்கிறது. ஏனெனில், இந்தியாவின் மக்கள்தொகை இளமையாக இருக்கிறது, இந்தியாவின் மனமும் இளமையாக இருக்கிறது. இந்தியாவின் திறன்களிலும், கனவுகளிலும் இளைஞர்கள் உள்ளனர். இந்தியா தனது எண்ணங்களிலும் நனவிலும் இளமையாக உள்ளது. இந்தியாவின் சிந்தனையும், தத்துவமும் எப்போதும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது, அதன் பழமையில் நவீனத்துவம் உள்ளது.

நாட்டின் இளைஞர்கள் எப்போதும் தேவைப்படும் நேரத்தில் முன்னோக்கி வந்துள்ளனர். தேசிய உணர்வு பிளவுபடும் போதெல்லாம், சங்கர் போன்ற இளைஞர்கள் வந்து ஆதி சங்கராச்சாரியாராக நாட்டை ஒற்றுமையின் இழையில் தைக்கிறார்கள். கொடுங்கோன்மை காலத்தில், குரு கோவிந்த் சிங் ஜியின் சாஹிப்ஜாதே போன்ற இளைஞர்களின் தியாகங்கள் இன்றும் நம்மை வழிநடத்துகின்றன. இந்தியா தனது சுதந்திரத்திற்காக தியாகம் செய்ய வேண்டியபோது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் மற்றும் நேதாஜி சுபாஷ் போன்ற இளம் புரட்சியாளர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க முன்வந்தனர்.

புதுச்சேரி அரசு

நாட்டிற்கு ஆன்மிக மறுமலர்ச்சி தேவைப்படும் போதெல்லாம், அரவிந்தர் மற்றும் சுப்ரமணிய பாரதி போன்ற ஞானிகள் காட்சிக்கு வருகிறார்கள். இந்திய இளைஞர்கள் ஜனநாயக விழுமியங்களைக் கொண்டுள்ளனர், இந்தியா மக்கள் தொகை அடிப்படையில் இளைஞர்களை வளர்ச்சி இயக்கமாகவும் கருதுகிறது. இந்திய இளைஞர்களிடம் தொழில்நுட்பத்தின் வசீகரத்துடன் ஜனநாயகத்தின் உணர்வும் இருக்கிறது. இந்திய இளைஞர்களுக்கு கடின உழைப்பு திறனுடன் எதிர்காலம் பற்றிய தெளிவும் உள்ளது. அதனால்தான் இந்தியா இன்று சொல்வதை நாளைய குரலாக உலகம் கருதுகிறது.

இந்தியாவில் எல்லையற்ற இரண்டு சக்திகளாக மக்கள்தொகை மற்றும் ஜனநாயகம் உள்ளன என்பதை உலகம் ஒப்புக்கொண்டுள்ளது. சுதந்திரத்தின் போது இளம் தலைமுறையினர் நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்ய ஒரு கணம் கூட தயங்கவில்லை. இன்றைய இளைஞர்கள் நாட்டுக்காக வாழ வேண்டும், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். இளைஞர்களின் திறன் பழைய ஸ்டீரியோ டைப்களால் சுமையாக இல்லை, அவற்றை எப்படி அசைப்பது என்பது அவர்களுக்கு தெரியும்.

இளைஞர்கள் புதிய சவால்கள், புதிய கோரிக்கைகளுக்கு ஏற்ப தன்னையும் சமூகத்தையும் பரிணமிக்க முடியும். புதியவற்றை உருவாக்க முடியும். ஒவ்வொரு தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் ‘செய்ய முடியும்’ என்ற எண்ணம் இன்றைய இளைஞர்களிடம் நிறைந்துள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை இளமையாக இருக்கிறது, இந்தியாவின் மனமும் இளமையாக இருக்கிறது. இந்தியாவின் திறன்களிலும், கனவுகளிலும் இளைஞர்கள் உள்ளனர். இந்தியா தனது எண்ணங்களிலும் நனவிலும் இளமையாக உள்ளது. இந்தியாவின் இளைஞர்கள் உலகளாவிய செழுமைக்கான குறியீட்டை எழுதுகிறார்கள். இந்தியாவில் இன்று 50,000 ஸ்டார்ட்-அப்களின் வலுவான சூழல் உள்ளது. அதில் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் தொற்றுநோய் கால சவாலுக்கு மத்தியில் வந்தன. `போட்டியிடு-ஆர்வமுடன் பங்கெடு- ஒன்றுபட்டு வெல்’ இதுவே புதிய இந்தியாவின் மந்திரமாகும்.

Also Read: பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா; ஒப்புதல் அளித்த அமைச்சரவை!

மகன்களும், மகள்களும் சமம் என்று அரசு நம்புவதால்தான், மகள்களின் முன்னேற்றத்துக்காக திருமண வயதை 21-ஆக உயர்த்த அரசு முடிவு எடுத்தது. இதன் மூலம் அவர்களும் தங்கள் வாழ்வை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அதிக நேரம் உருவாகும். இது அவர்கள் வாழ்வில் முக்கியத்துவத்தை தரும். சுதந்திர போராட்டத்தில் பல போராளிகளை நம் தேசம் பெற்றுள்ளது. அவர்களின் பங்களிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதுபோல் உரிய அங்கீகாரம் பெறாத உயரிய மனிதர்களை பற்றி இளைஞர்கள் எவ்வளவு அதிகமாக எழுதுகிறார்களோ அந்த அளவுக்கு நாட்டின் வரும் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு அதிகரிக்கும். இன்றைய இளைஞர்களிடம் ‘முடியும்’ என்ற மனப்பான்மை உள்ளது. இது ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக உள்ளது” என்றார்.

🔊 Listen to this நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி 25-வது தேசிய இளைஞர் விழா, அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மூன்றையும் புதுவையில் கொண்டாட திட்டமிடப்பட்டது. அதற்காக இன்று (ஜனவரி 12) முதல் 16-ம் தேதி வரை நடக்கவிருந்த தேசிய இளைஞர் விழாவுக்காக நாடு முழுவதிலும் இருந்து 7,500 மாணவர்கள் புதுச்சேரிக்கு வருவதாக இருந்தது. அந்த விழாவை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடியும் புதுச்சேரிக்கு வருகை தரவிருந்தார். ஆனால்…

🔊 Listen to this நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி 25-வது தேசிய இளைஞர் விழா, அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மூன்றையும் புதுவையில் கொண்டாட திட்டமிடப்பட்டது. அதற்காக இன்று (ஜனவரி 12) முதல் 16-ம் தேதி வரை நடக்கவிருந்த தேசிய இளைஞர் விழாவுக்காக நாடு முழுவதிலும் இருந்து 7,500 மாணவர்கள் புதுச்சேரிக்கு வருவதாக இருந்தது. அந்த விழாவை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடியும் புதுச்சேரிக்கு வருகை தரவிருந்தார். ஆனால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *