புதுச்சேரி: பொதுப்பாதையில் தீண்டாமை சுவர் எழுப்பினாரா பாஜக எம்.எல்.ஏ? – என்ன நடந்தது?

  • 5

புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகரில் தனியார் குடியிருப்புகளும், அதையொட்டி இருக்கும் மொட்டைத்தோப்பு என்ற பகுதியில் அடுக்குமாடி அரசு குடியிருப்புகளும் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு குடியிருப்புகளிலும் தலா நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நல்ல பொருளாதார பின்னணியைக் கொண்டவர்கள் சுதந்திர பொன்விழா நகரிலும், விளிம்பு நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்கள் மொட்டைத்தோப்பு பகுதியிலும் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடியிருப்புகளையும் பிரிக்கும் பொதுவழியை மொட்டைத்தோப்பு பகுதியில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். அதனால் சுதந்திர பொன்விழா நகரின் ஒரு பகுதியினர் அந்த வழியை அடைக்க நீண்ட நாள்களாக முயற்சி செய்துவந்தனர்.

மொட்டைத்தோப்பு குடியிருப்புப் பகுதி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த வழியை மறித்து தடுப்புச்சுவர் எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது மொட்டைத்தோப்பு பகுதி மக்கள், `எங்களை ஒதுக்கி தீண்டாமை சுவர் எழுப்புகிறீர்களா?’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ஏழை மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் பொதுவழியை தடுத்து தீண்டாமை சுவர் எழுப்புவதை உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் தலைமையில் பேரணியாக சென்று புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வனி குமாரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் மொட்டைத்தோப்பு பகுதி மக்கள். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமைச் செயலாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து, மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மீண்டும் அந்த தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான ஜான்குமார் முன்னிலையில் வழியை மறித்து தடுப்புச் சுவர் எழுப்ப இருப்பதாக தகவல் பரவியது. அந்தத் தகவல் காட்டுத் தீயாக பரவியதால் மொட்டைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் அந்த இடத்தில் குவிந்தனர். அதையடுத்த சில நிமிடங்களில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றார் எம்.எல்.ஏ ஜான்குமார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய மொட்டைத்தோப்பு பகுதி மக்கள், `எங்களை பார்த்தால் அவமானமாக இருக்கிறதா?

சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்புப் பகுதி

தீண்டாமை சுவர் எழுப்புகிறீர்களா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் உடனே அந்த பகுதிக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அதையடுத்து பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி எம்.எல்.ஏ ஜான்குமார் முன்னிலையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான பூமி பூஜை போடப்பட்டு, தடுப்புகளை கட்டி இரும்புக்கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கியது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டார் எம்.எல்.ஏ ஜான்குமார்.

அதனை தொடர்ந்து, அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், உழவர்கரை செயலர் ராம்ஜி, தீண்டாமை ஒழிப்பு நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், கொளஞ்சியப்பன், குப்புசாமி ஆகியோர், “`பொதுப்பாதையில் எப்படி தடுப்புச் சுவர் ஏற்படுத்த முடியும்?” என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். பின்னர், புதுச்சேரி ஆட்சியர் வல்லவனிடம் சி.பி.எம் பிரதேச செயலர் ராஜாங்கம் தகவலை தெரிவித்து தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

சுற்றுச்சுவர் பூமி பூஜையில் ஜான்குமார் எம்.எல்.ஏ

உடனே மொட்டைதோப்பு பகுதிக்கு வந்த மாவட்ட துணை ஆட்சியர் கந்தசாமி இரண்டு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார். அப்போது தடுப்புச் சுவர் அமைக்கக் கூடாது என தலைமைச் செயலாளரிடம் கடந்த ஆண்டே மனு அளித்திருப்பதாக துணை ஆட்சியரிடம் தெரிவித்தனர் மொட்டைத்தோப்பு குடியிருப்புவாசிகள். அதையடுத்து அந்தப் பகுதியில் தடுப்புச் சுவர் அமைப்பதற்கு தடைவிதித்த துணை ஆட்சியர் கந்தசாமி, பாதையை மறைத்து வைக்கப்பட்ட தடுப்புவேலிகளை உடனே அகற்றுங்கள் என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க எம்.எல்.ஏ ஜான்குமாரை நாம் தொடர்புகொண்டபோது, “சுதந்திரா பொன்விழா நகரில் அந்த இடம் சொசைட்டிக்கு சொந்தமானது. அதுக்குப் பக்கத்தில் இருந்த குடிசைப் பகுதி மக்களுக்கு தொகுப்பு வீடு கொடுக்கப்பட்டுவிட்டது. சொசைட்டிக்கு சொந்தமான இடத்தை குடிசைப்பகுதி மக்களுக்கு வழியாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அப்போதிருந்த எம்.எல்.ஏ அரசிடம் பேசி அனுமதி கொடுத்துவிட்டார். அதற்கு சொசைட்டிக்கு தரப்பினர் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதற்கிடையில் குடிசைப்பகுதியில் இருப்பவர்கள் அங்கு சென்று பெட்ரோல் திருடுவது, கஞ்சா அடிப்பது மட்டுமல்லாமல் சொல்லக்கூடாத சில தகாத செயல்களையும் செய்து வந்தார்கள். இதையெல்லாம் செய்வதற்கு அங்கிருந்த நாய்கள் தொல்லையாக இருக்கிறது என்று 9 நாய்களை கொழுப்பு தடவி கொலை செய்துவிட்டார்கள்.

புதுச்சேரி

Also Read: பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நடந்தது என்ன? #Metoo

அதற்காக சிறைக்கும் சென்று வந்திருக்கிறார் நாய்களை கொலை செய்த நபர். அதையடுத்து அவர்கள் ஆட்சியரிடம் முறையிட்டதன் அடிப்படையில், அங்கு பொதுப்பணித்துறை மூலம் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு அனுமதி கொடுத்தார் ஆட்சியர். ஆனால் பொதுப்பணித்துறை வருவதற்குள் அந்த குடியிருப்புவாசிகளே சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் இறங்கியதால் பிரச்னை ஆகிவிட்டது. வருகின்ற 27-ம் தேதி பொதுப்பணித்துறையினரே அந்த இடத்தில் சுற்றுச்சுவரை அமைக்கின்றனர். அதற்குள் இந்த விவகாரத்தை சிலர் தீண்டாமை சுவர் என்று தவறான தகவல்களை பரப்பிவிட்டனர்” என்றார்.

AIARA

🔊 Listen to this புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகரில் தனியார் குடியிருப்புகளும், அதையொட்டி இருக்கும் மொட்டைத்தோப்பு என்ற பகுதியில் அடுக்குமாடி அரசு குடியிருப்புகளும் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு குடியிருப்புகளிலும் தலா நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நல்ல பொருளாதார பின்னணியைக் கொண்டவர்கள் சுதந்திர பொன்விழா நகரிலும், விளிம்பு நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்கள் மொட்டைத்தோப்பு பகுதியிலும் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடியிருப்புகளையும் பிரிக்கும் பொதுவழியை மொட்டைத்தோப்பு பகுதியில் வசிக்கும்…

AIARA

🔊 Listen to this புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகரில் தனியார் குடியிருப்புகளும், அதையொட்டி இருக்கும் மொட்டைத்தோப்பு என்ற பகுதியில் அடுக்குமாடி அரசு குடியிருப்புகளும் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு குடியிருப்புகளிலும் தலா நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நல்ல பொருளாதார பின்னணியைக் கொண்டவர்கள் சுதந்திர பொன்விழா நகரிலும், விளிம்பு நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்கள் மொட்டைத்தோப்பு பகுதியிலும் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடியிருப்புகளையும் பிரிக்கும் பொதுவழியை மொட்டைத்தோப்பு பகுதியில் வசிக்கும்…

Leave a Reply

Your email address will not be published.