புதுச்சேரி: `கொரோனா கட்டுப்பாடுகளை உடனே அமல்படுத்துங்கள்!’ –அதிகாரிகளை `அலர்ட்’ செய்த தமிழிசை

  • 5

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளையும் மருத்துவக் கட்டமைப்பையும் மேம்படுத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு.

கொரோனா ஆலோசனைக் கூட்டம்

தொடர்ந்து அவர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் இன்று முதல் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையுடன் பிற அவசிய சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊடரங்கு முறை ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் `புதுச்சேரி மாதிரி’ கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டாவது அலையின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

சித்தா / இயற்கை மருத்துவ முறை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் என்பதால், ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா / இயற்கை மருத்துவ முறையைக் கையாள வேண்டும். மக்கள் எளிதில் வந்து சிகிச்சை பெற வசதியாக, அதற்காகத் தனி மையம் அமைக்க வேண்டும். அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூலிகைச்சாறு, ஊட்டச்சத்து உணவு ஆகியவற்றை வழங்கலாம். தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்த வேண்டும். 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி அரசு

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக இயக்க வேண்டும். தொலை மருத்துவம் முறையை உடனடியாகத் தொடங்க வேண்டும். நடமாடும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாகனம், நடமாடும் பிராணவாயு வாகனம் ஆகியவற்றைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். அவரசகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தும் வகையில், மருத்துவம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். கொரோனா நோய்ப் பரவல் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளைக் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், பிராணவாயு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், ஆகியவற்றைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை தயார்ப்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கோவிட் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

Also Read: புதுச்சேரி: `வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு’ – புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த ஆளுநர் தமிழிசை

பொதுமக்கள் கூடும் இடங்களில் உடல் வெப்பநிலையைச் சோதிக்க வேண்டும். பொது இடங்களில் கிருமிநாசினி மையங்களைத் திறக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டத்தினர், தன்னார்வலர்கள் ஆகியோரை இதில் ஈடுபடுத்தலாம். தொற்றுப் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் அனைத்துத் துறைகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்” என்றார்.

🔊 Listen to this நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளையும் மருத்துவக் கட்டமைப்பையும் மேம்படுத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது புதுச்சேரியில் தற்போதைய…

🔊 Listen to this நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளையும் மருத்துவக் கட்டமைப்பையும் மேம்படுத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது புதுச்சேரியில் தற்போதைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *