புதுக்கோட்டை: `புது குடிநீர் தொட்டிகூட உடனே வேண்டாம்; இத மொதல்ல அகற்றுங்க’ -கலங்கும் கிராமம்

நெல்லை டவுணில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் உள்ளே கழிவறையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அதனருகில் நின்ற மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மழைக்குப் பிறகு பள்ளி இங்குள்ள கட்டடங்களை ஆய்வு செய்யாமல் மெத்தனப்போக்காக இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே அம்மாப்பட்டினம் கிராமத்தில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல் நிலை குடிநீர்த் தேக்கத்தொட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது.

குடிநீர்த் தேக்கத் தொட்டி

இந்த தொட்டி இடிந்து விழுந்தால், அங்கன்வாடி கட்டடம், பள்ளியின் கட்டடங்கள் இடிந்து விழுவதோடு, மாணவர்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிகாரிகள் தரப்பில், விரைவிலேயே இடித்து அகற்றப்படும் என்று சவ்வாக இழுக்க, நெல்லை சம்பவத்தைப் போல இனி ஒரு சம்பவம் ஏற்படாமல் இருக்க உடனே இடித்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் கேட்டபோது, “தற்போது நெல்லையில் நடந்த சம்பவம் மனதைப் பதைபதைக்க வைக்குது. கடந்த சில தினங்களாகவே ஒருவித பயத்தோடு தான் எங்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிக்கிட்டு இருக்கோம். இப்ப இந்தச் சம்பத்தைக் கேட்டதும் ரொம்ப கஷ்டமா இருக்கு.

Also Read: நெல்லை: பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்… தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூவர் கைது!

தூண்களில் சிமெண்ட் காரை எல்லாம் பெயர்ந்து கம்பி வெளிய தெரிய ஆரம்பிச்சிருச்சு. கொஞ்சம், கொஞ்சமா இடிஞ்சிக்கிட்டே வருது. கிட்டத்தட்ட எப்போ இடிஞ்சு விழும்னு சொல்ல முடியாத நிலையில தான் இருக்கு. பெரிய தொட்டிங்கிறதால, விழுந்தா பெரிய பாதிப்பு ஏற்படும். நாங்களும் ஒரு வருஷத்துக்கும் மேலாக இதை இடிச்சி அப்புறப்படுத்தங்கன்னு போராடிக்கிட்டு இருக்கோம். பள்ளி மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்படக்கூடாதுன்னு தான் கோரிக்கை வைக்கிறோம். இந்தத் தொட்டி இல்லாமலும், மாற்று வழியில் மற்ற தொட்டிகளுக்கு குடி நீரைக் கொண்டு செல்ல முடியும். எங்களுக்கு புது தொட்டி கூட உடனே வேண்டாம். இப்போதைக்கு இதை இடிச்சி அகற்றினாலே போதும். பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் எடுக்காமல், அது ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கணும்” என்கின்றனர்.

குடிநீர்த் தேக்கத் தொட்டி

மணமேல்குடி பி.டி.ஓ தமிழ்செல்வனிடம் இதுதொடர்பாக பேசியபோது. “மணமேல்குடி பிளாக் முழுவதுமே சில வாரங்களுக்கு முன்பு பழுதான கட்டடங்களை நேரடியாகப் பார்வையிட்ட செயற்பொறியாளர்கள் ஆய்வு நடத்தி அறிக்கைக் கொடுத்திருக்கிறனர். இந்தக் குடி நீர்த்தொட்டி இன்னும் சில பழுதான தொட்டிகளும் இருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போது தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. இ.இ அல்லது பி.டியிடமிருந்து ஆர்டர் கிடைத்த உடனே இடித்துவிடுவோம். இதுதொடர்பாக, இன்று கூட உயர் அதிகாரியிடம் இந்தத் தொட்டியை இடிப்பது குறித்து வலியுறுத்தியிருக்கிறேன். மேலும், அங்கன்வாடியிலும், பள்ளி ஆசிரியர்களிடமும் பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பந்தப்பட்ட கட்டடத்தை மாணவர்கள் சில தினங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். உடனே தொட்டி இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

AIARA

🔊 Listen to this நெல்லை டவுணில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் உள்ளே கழிவறையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அதனருகில் நின்ற மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மழைக்குப் பிறகு பள்ளி இங்குள்ள கட்டடங்களை ஆய்வு செய்யாமல் மெத்தனப்போக்காக இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டம்…

AIARA

🔊 Listen to this நெல்லை டவுணில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் உள்ளே கழிவறையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அதனருகில் நின்ற மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மழைக்குப் பிறகு பள்ளி இங்குள்ள கட்டடங்களை ஆய்வு செய்யாமல் மெத்தனப்போக்காக இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டம்…