தொடர் பட்டாசு ஆலை விபத்துகள்… பறிபோகும் உயிர்கள்… அதிக உற்பத்தி அழுத்தம் காரணமா?!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடு முருகன். களத்தூர் அருகிலுள்ள நாகலாபுரத்தில் இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. 15 அறைகளில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். கடந்த 1-ம் தேதி புத்தாண்டு நாளில் ஃபேன்ஸி ரகப் பட்டாசு உற்பத்தி நடந்துவந்தது. அப்போது வெடிமருந்து தயார் செய்தபோது ஏற்பட்ட உராய்வினால் பயங்கரச் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில்ஆறு அறைகள் தரைமட்டமாகின.

விபத்தில் தரைமட்டமான அறை

இதில், கோபால கிருஷ்ணன், காளியப்பன், வேல்முருகன், உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். எட்டுப் பேர் காயமடைந்தனர். ஆங்கிலப் புத்தாண்டு நாளில் நடந்த இந்த வெடி விபத்து சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நத்தம்பட்டி காவல் நிலைய போலீஸார், பட்டாசு ஆலை உரிமையாளரான வழிவிடு முருகன் மீது, இந்திய வெடிபொருள் சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 10 போலீஸார் கொண்ட தனிப்படையினர் தலைமறைவாக இருக்கும் வழிவிடு முருகனைத் தேடிவருகின்றனர். காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பட்டாசு உற்பத்திக்கான வெடி மருந்துகளைக் கையாளுவதற்கு தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததே காரணம் எனக் கூறியுள்ளனர்.

தரைமட்டமான அறை

இதையடுத்து ஆலையின் உரிமத்தை ரத்துசெய்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மகாலட்சுமியிடம் பேசினோம். “விருதுநகர் மாவட்டத்துல சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் முக்கியத் தொழிலே பட்டாசு உற்பத்திதான்.

சிறியதும் பெரியதுமாக 996 ஆலைகள் இயங்கிவருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், இந்தியாவின் பட்டாசுத் தேவையில் 95 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து லட்சம் பேர் இந்தத் தொழிலை நம்பியிருக்கிறார்கள். பட்டாசு ஆலை உரிமையாளர்களின் முக்கிய நோக்கமே உற்பத்தியை அதிகரிக்கணும்கிறதுதான். அஞ்சு பேரு வேலையை ஒரு தொழிலாளி பார்க்கணும். ஒரு ரூமுக்குள்ள அதிகபட்சமா நாலு பேருதான் இருந்து வேலை பார்க்கணும்.

மகாலட்சுமி

ஆனா, பத்து பேரு வரைக்கும் உட்கார்ந்து வேலை பார்க்கச் சொல்லுறாங்க. ரூமுக்குள்ள செய்யவேண்டிய பட்டாசு உற்பத்தியைத் திறந்தவெளியிலயும் மரத்தடியிலயும் செய்யுறாங்க. இப்படி இடைவெளியே இல்லாம உட்கார்ந்து வேலை பார்க்கறதுனாலயும், அதிக உற்பத்தி நெருக்கடியும், அவசரமும் விபத்துகளுக்குக் காரணமா இருக்கு. இதுல சில கம்பெனிகள்ல உற்பத்திக்கு ஏத்த கூலி தருவோம்னு சொல்லுறதுனால கூடுதலாகக் கூலி கிடைக்குமேன்னு வேகமாகப் பட்டாசுகளை உற்பத்தி செய்வாங்க.

அதுலயும் சில முதலாளிமாருங்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வந்து புரொடக்‌ஷன் எண்ணிக்கையைப் பார்த்து குறைஞ்சுட்டா திட்டுவாங்க. இதனாலயே அதிக மன உளைச்சல் ஆகிடும். சில கம்பெனிகளில் இந்தப் ஃபேன்ஸி ரக பட்டாசு தயாரிக்குற மருந்துக் கலப்புகளில் அரசால் தடைசெய்யப்பட்ட சில மருந்துகளும் கலக்கப்படுது.

தரைமட்டமான அறைகள்

வீரியம்மிக்க இந்த மருந்துகளைத் தொழிலாளர்களுக்கு எப்படிக் கையாளணும்னு சொல்லிக் கொடுக்குறதுமில்லை. இவையெல்லாம்தான் பட்டாசு விபத்துக்குக் காரணம். கடந்த 10 ஆண்டுகளில் 204 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துகளில், 296 பேர் உயிரிழந்துள்ளனர். 233 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிக உற்பத்தி, அதிக லாப நோக்கம் இல்லாம பட்டாசு உற்பத்திக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிமையாளர்கள் பின்பற்றினால்தான் பட்டாசு விபத்துகளைத் தடுக்க முடியும்” என்றார்.

நெறிமுறைகளைப் பின்பற்றி, விபத்துகள் இல்லாத சூழலை நிஜமாக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது!

AIARA

🔊 Listen to this விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடு முருகன். களத்தூர் அருகிலுள்ள நாகலாபுரத்தில் இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. 15 அறைகளில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். கடந்த 1-ம் தேதி புத்தாண்டு நாளில் ஃபேன்ஸி ரகப் பட்டாசு உற்பத்தி நடந்துவந்தது. அப்போது வெடிமருந்து தயார் செய்தபோது ஏற்பட்ட உராய்வினால் பயங்கரச் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில்ஆறு அறைகள் தரைமட்டமாகின. விபத்தில் தரைமட்டமான அறை இதில்,…

AIARA

🔊 Listen to this விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடு முருகன். களத்தூர் அருகிலுள்ள நாகலாபுரத்தில் இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. 15 அறைகளில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். கடந்த 1-ம் தேதி புத்தாண்டு நாளில் ஃபேன்ஸி ரகப் பட்டாசு உற்பத்தி நடந்துவந்தது. அப்போது வெடிமருந்து தயார் செய்தபோது ஏற்பட்ட உராய்வினால் பயங்கரச் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில்ஆறு அறைகள் தரைமட்டமாகின. விபத்தில் தரைமட்டமான அறை இதில்,…

Leave a Reply

Your email address will not be published.