“தமிழர்கள் மிகவும் நேசிக்கும் நாடான சிங்கப்பூர் இப்படிச் செய்யலாமா?”- நாம் தமிழர் நிர்வாகி

சிங்கப்பூரில் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான குமரேசன், அங்கு மாவீரர் நாள் கொண்டாடியதாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, வாழ்நாள்தடை விதிக்கப்பட்டு, சிங்கப்பூர்க் காவல்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து இதுபோல் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த அவலம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

சீமான்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூரைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் எடையூர்க் கடைவீதியில் கோழி இறைச்சிக் கடை நடத்திவருகிறார். இவரின் மகன் குமரேசன் கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியாற்றிவருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் இவர், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக மாவீரர் நாள் கொண்டாடியதாக, சிங்கப்பூர்க் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இவர் மீண்டும் சிங்கப்பூர் செல்ல முடியாத வகையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அங்கு பல நெருக்கடியான சூழலைச் சந்தித்த குமரேசன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் எடையூருக்கு வந்து சேர்ந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருப்பது, இப்பகுதி மக்களிடையே பெரும் அனுதாபத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் என்னதான் நடந்தது? நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய குமரேசன் ‘ரொம்ப ஏழ்மையான நிலையிலதான் எங்க குடும்பம் இருந்துகிட்டிருக்கு. நான் பத்தாவது வரைக்கும் படிச்சி, அதுக்குப் பிறகு ஐடிஐ முடிச்சேன். உறவினருக்குச் சொந்தமான நிலத்தோட பட்டாவை அடமானம் வச்சி, இரண்டு லட்சம் ரூபாய் செலவு பண்ணி 2018-ம் வருசம் சிங்கப்பூர் போனேன். அங்க துவாஷ் நகர்ல கப்பல் கட்டும் நிறுவனத்துல தொழிலாளராக வேலை பார்த்தேன். கடன்களை அடைச்சிட்டு இப்பதான் வீட்டுக்குப் பணம் அனுப்பவே ஆரம்பிச்சேன். அதுக்குள்ளார இப்படி ஆயிடுச்சி. என் வேலை போனதைப் பத்தியோ, சிங்கப்பூர்ல இருந்து திரும்பி வர வேண்டியதாயிடுச்சேங்கறதைப் பத்தியோகூட நான் பெருசா வேதனைப்படலை. ஆனால் எந்தத் தவறுமே செய்யாமலே இப்படி அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்களேன்னு நினைக்குறப்பதான் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. இது எனக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானமா நினைக்கல. தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாதான் இதை நான் பார்க்குறேன்.

குமரேசன்

நான் மட்டுமல்ல, நிறைய தமிழர்கள் இதுமாதிரி பாதிக்கப்பட்டுக்கிட்டுதான் இருக்காங்க. பத்து நாள்களுக்கு முன்னாடி, சிங்கப்பூர் போலீஸ் என்னைக் கைது பண்ணி விசாரணைக்கு அழைச்சிக்கிட்டுப் போனாங்க. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக, நான் மாவீரர் நாள் கொண்டியதாகவும், என்னோட கையில விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படம் இருந்ததாகவும் குற்றம்சாட்டினாங்க. இதுக்கு யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தாங்கன்னு கேட்டாங்க. ’நாம் தமிழர் கட்சியில் நான் உறுப்பினரா இருக்கேன். எங்க தலைவர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை ஆதரிக்கிறார். அதனால்தான் மாவீரர் நாள் கொண்டாடினோம்’னு சொன்னேன். உங்க கட்சியின் தலைவர் சீமான், எல்.டி.டி.இ இயக்கத்தை ஆதரிச்சாருன்னா, அதுல உறுப்பினரா இருக்குற நீங்களும் எல்.டி.டி.இ இயக்கத்தை ஆதரிக்கிறீங்கன்னுதானே அர்த்தம்’னு சொன்னாங்க. இதுல என்ன வேதனையான வேடிக்கைன்னா, இந்த வருசம் நாங்க மாவீரர் நாள் கொண்டாடவே இல்லை. போன வருசம் கொண்டாடலை. 2019-ம் வருசம் அதுவும் நாங்க தங்கியிருக்குற ரூம்ல, பிரபாகரன் போட்டோவை வச்சி, மெழுகுவத்தி ஏத்தினோம். அந்தப் போட்டோவை எங்களோட நண்பர் யாரோ ஒருத்தர் சமூக வலைதளத்துல பகிர்ந்திருக்காங்க. நான் எந்தத் தவறுமே செய்யலை. இரண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த, அதுவும் எங்க ரூம்ல, நடந்த ஒரு சாதாரண நிகழ்வுக்காக தண்டிக்கப்பட்டு வெளியேத்தப்பட்டதை நினைச்சா வேதனையா இருக்கு, 6 நாள் சிங்கப்பூர் ஜெயில்ல இருந்தேன். அதுக்குப் பிறகுதான் என்னை இங்க அனுப்பி வச்சாங்க’’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மணி.செந்தில் ‘’சிங்கப்பூர்ல வேலை பார்க்கக்கூடிய தமிழர்கள் பெரும்பாலானவங்க, சாதாரண தொழிலாளர்கள். தங்கள் குடும்ப ஏழ்மையின் காரணமாகவே அங்க பிழைப்புக்காகப் போறாங்க. நாம் தமிழர் கட்சியில உறுப்பினராக இருக்காங்கன்னு தெரிஞ்சாலே சிங்கப்பூர் காவல்துறை அவங்களை வெளியேத்திடுது. சமூக வலைதளங்களை ஸ்கேன் பண்ணக்கூடிய வசதி, சிங்கப்பூர் காவல்துறைகிட்ட இருக்கு. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா யாராவது பதிவுகள் போட்டால் அதைக் கண்டுபிடிச்சி நடவடிக்கை எடுக்குறாங்க. நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதுமாதிரி வெளியேற்றப்பட்டிருக்காங்க. யதார்த்த உண்மையைச் சொல்லணும்னா, சிங்கப்பூர் அரசாங்கத்துக்கோ, காவல்துறைக்கோ, இது இயல்பான நோக்கம் இல்லை. சீனர்கள், மலாய்க்காரர்களோட தூண்டுதலால்தான் இப்படிச் செய்றாங்க. இந்த அநீதி தொடர்ந்து நடந்துகிட்டேதான் இருக்கு. ஆனால் இப்பதான் முதல்முறையா இது வெளிச்சத்துக்கு வந்திருக்கு. ஏற்கெனவே இது தொடர்பா சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளை, எங்க கட்சியின் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் தலைமையில் சந்திச்சி முறையிட்டோம்.

மணி.நெந்தில்

பல நாடுகள்ல நாம் தமிழர் கட்சியின் கிளைகள் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. அங்கெல்லாம் இந்த மாதிரியாக கெடுபிடிகள் கிடையாது. இந்தியத் தேர்தல் ஆணையத்துல பதிவு செய்யப்பட்ட கட்சி இது. நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர்னு தெரிஞ்சாலே வெளியேத்துறது எந்த விதத்துல நியாயம்னு கேட்டோம். தமிழர்கள் மிகவும் மதிக்கக்கூடிய நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரோட வளர்ச்சியில தமிழர்களோட பங்களிப்பு மிக அதிகம். அதேமாதிரி மற்ற நாடுகளை எல்லாம்விட, சிங்கப்பூர் அரசாங்கம் தமிழர்கள் மேல அதிக பற்றுதலோட இருந்தது. குறிப்பா தமிழர்களோட நலன்ல அதிக அக்கறை காட்டின சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீகுவான் மறைந்தபோது, நாம் தமிழர் கட்சியின் சார்புல அஞ்சலிக் கூட்டமெல்லாம் நடத்தியிருக்கோம். தங்களது தாயக விடுதலைக்காகப் போராடிய எல்.டி.டி.இ இயக்கத்தை ஆதரிக்கிறோம்ங்கற ஒரே காரணத்துக்காக, இப்படி சிங்கப்பூர் காவல்துறை நடந்துக்குறது நியாயமில்லை’ன்னு முறையிட்டோம். இந்தப் பிரச்னைக்கு சிக்கிரம் விடிவு காலம் வரணும்’’ எனக் கவலையோடு தெரிவித்தார்.

AIARA

🔊 Listen to this சிங்கப்பூரில் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான குமரேசன், அங்கு மாவீரர் நாள் கொண்டாடியதாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, வாழ்நாள்தடை விதிக்கப்பட்டு, சிங்கப்பூர்க் காவல்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து இதுபோல் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த அவலம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியினர்…

AIARA

🔊 Listen to this சிங்கப்பூரில் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான குமரேசன், அங்கு மாவீரர் நாள் கொண்டாடியதாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, வாழ்நாள்தடை விதிக்கப்பட்டு, சிங்கப்பூர்க் காவல்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து இதுபோல் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த அவலம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியினர்…