தஞ்சை: கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி அழுத்தம்? தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி – போலீஸ் விசாரணை

  • 47

தஞ்சாவூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் செயல்பட்டு வந்த ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவி ஒருவரை ஹாஸ்டல் வார்டன் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த, மாணவி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்தவர்கள் அந்த மாணவியை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூய இருதய மேல்நிலைப் பள்ளி

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தத் தம்பதியின் 17 வயதில் ஒரு மகள். முதல் மனைவி இறந்த பின்பு, முருகானந்தம் சரண்யா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, முருகானந்தம் தன் மகளை தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைபள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அவர், பள்ளி வளாகத்தில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்துவந்தார்.

ராகேல்மேரி என்ற சகாய மேரி விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். முருகானந்தத்தின் மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில், வார்டன் சகாயமேரி அந்த மாணவியை கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறச் சொன்னதாகவும், அதற்கு அந்த மாணவி மறுத்துவிட்டதால் அவரை கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி, கடந்த 9-ம் தேதி விடுதியிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவருக்கு வயிற்று வலி அதிகமாகியிருக்கிறது. அதனால், அவர் வடுகம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி

இந்து மதத்தை சேர்ந்தஅந்த மாணவியை, கிறிஸ்துவ மதத்துக்கு மாற வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாக விசுவ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். இதுத் தொடர்பாக அந்த மாணவியும், `ஹாஸ்டல் வார்டன் கடந்த இரண்டு வருடங்களாகவே என்னை மதம் மாற அழுத்தம் கொடுத்து வந்தார். அதற்கு நான் மறுத்ததால் கொடுமைக்கு ஆளானேன்’ என வீடியோவில் பேசியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாணவி உயிரிழந்தார். அதையடுத்து, பாஜக-வினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த விவகாரத்தில், `அறையை சுத்தம் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அதனால் மாணவியால் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்’ என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் மாணவியின் உறவினர்கள், “மதம் மாறச் சொன்னதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம்” என கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது

இது குறித்து மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரித்தோம். “அந்தப் பிள்ளை நல்லா படிக்குற பொண்ணு. பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அவளை அடிக்கடி ஹாஸ்டல் வார்டன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி வந்தார். ஆனால், அவர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்திவந்தார். இதனால் கழிப்பறை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யச் சொல்லி கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள்.

`எனக்கு வாழவே பிடிக்கலை நான் சாவை நோக்கி போய் கொண்டிருக்கிறேன்’ என மாணவி தன்னுடைய நோட்டில் எழுதி வைத்திருக்கிறார். இதற்கு காரணம் ஹாஸ்டல் நிர்வாகம் தான். வார்டன் சகாய மேரி தன்னுடைய பணிகள் அனைத்தையும் அவரைச் செய்ய வைத்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தா, நல்ல நிலைக்கு போகலாம் என படிப்பில் கவனமாக இருக்க நினைத்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி

ஆனால், வார்டன் அளவுக்கு அதிகமாக வேலை வாங்கி வந்ததால் அவரால் படிக்க முடியவில்லை. மேலும், தொடர்ச்சியாக மதம் மாறவும் அழுத்தம் கொடுத்து, மதம் மாறினால் உனக்கு எல்லா உதவியும் கிடைக்கும்… நீ படிச்சு பெரிய ஆளா வருவ’னு கூறி வந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சளில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர், இப்ப எங்களை விட்டுட்டு போய் விட்டார். இதற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் அதுவே எங்களுடைய விருப்பம். அப்பதான் மாணவியின் ஆத்மாவும் சாந்தியடையும்” என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் விசாரித்தோம். “அந்த மாணவி, `என் சித்தி என்னை கொடுமை படுத்துறாங்க… அப்பாவும் என்னை கண்டுக்குறதில்ல!’ எனக் கூறிக்கொண்டே இருப்பார். அதனால் மன உளைச்சலில் இருந்தார். விடுமுறை விட்டால் கூட வீட்டுக்குச் செல்லாமல் ஹாஸ்டலிலேயே இருப்பார். சிஸ்டர் சகாயமேரிக்கு 62 வயதாகிறது. தன்னுடைய சொந்த குழந்தை போலவே அந்த மாணவியை கவனித்து வளர்த்து வந்தார். அவளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுப்பார்.

எங்க போனாலும் கூடவே அழைச்சிக்கிட்டு போவார். கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையின் போதுகூட புது டிரெஸ் எடுத்து கொடுத்தார். பீரோ சாவியைக்கூட அந்த மாணவியிடம்தான் கொடுத்து வைத்திருப்பார். இருவரும் நல்ல புரிதலுடன் இருந்து வந்தனர். அப்பா, அம்மா பாசம் கிடைக்கலை என்கிற ஏக்கம் அந்த மாணவிக்கு இருந்து வந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு எங்க போய் தங்குவேனு கேட்டுக்கொண்டே இருப்பாள். இந்த சூழலில், விஷம் குடித்திருக்கிறார். அதைகூட அவர் யாரிடமும் சொல்லவில்லை. வயிற்று வலி மற்றும் வாந்தி எடுத்து கொண்டே இருந்ததால் பெற்றோரிடம் அனுப்பிவைத்தோம்.

பள்ளி

அவர்களிடத்திலும் விஷம் குடித்ததை சொல்லவில்லை. உடல்நிலை முடியாமல் போனதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் தான் விஷம் குடித்ததை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், `வார்டன் அறையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய சொன்னார். அதனால் என்னால் படிக்க முடியவில்லை’ என போலீஸில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவும் செய்யப்பட்டு, வார்டன் சகாயமேரியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தவறானத் தகவல். அவர் சித்தி சரண்யா உண்மைக்கு மாறாகப் பேசி வருகிறார். சுய ஆதாயத்துக்காக தவறானத் தகவல்களை பரப்பி சிலர் உள் நோக்கத்துடன் இதில் செயல்பட்டு வருகின்றனர். விசாரணையில் உண்மை தெரியவரும்” என்றனர்.

Also Read: தஞ்சாவூர்: காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள்! – கதறும் உறவினர்கள்

AIARA

🔊 Listen to this தஞ்சாவூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் செயல்பட்டு வந்த ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவி ஒருவரை ஹாஸ்டல் வார்டன் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த, மாணவி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்தவர்கள் அந்த மாணவியை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூய இருதய மேல்நிலைப் பள்ளி அரியலூர்…

AIARA

🔊 Listen to this தஞ்சாவூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் செயல்பட்டு வந்த ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவி ஒருவரை ஹாஸ்டல் வார்டன் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த, மாணவி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்தவர்கள் அந்த மாணவியை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூய இருதய மேல்நிலைப் பள்ளி அரியலூர்…

Leave a Reply

Your email address will not be published.