சுவாமி விவேகானந்தர் புகழ்மிக்க வார்த்தைகளை உதிர்த்த இடம்… கும்பகோணத்தில் தயாராகும் ஆளுயுர சிலை!

  • 4

125 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில், ஆளுயுர வெண்கல சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை எந்தளவிற்கு போற்றப்படுகிறதோ, அதற்கு நிகராக கும்பகோணத்தில் அவர் ஆற்றிய உரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. அதன் 125-வது ஆண்டு விழா, வருகிற பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ளது. விவேகானந்தர் உரையாற்றிய அதே இடத்தில் ஆளுயுர வெண்கல சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடமும், கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹால் நிர்வாகத்தினரும் ஈடுபட்டுள்ளார்கள்.

போர்ட்டர் டவுன் ஹால்

1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை சரித்திர புகழ்மிக்கதாக இன்றுவரையிலும் போற்றப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர், இந்திய நாட்டின் பாரம்பரியப் பெருமையை நிலைநாட்டி விட்டு 1897-ம் ஆண்டு தாயகம் திரும்பினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் வழியாக ரயிலில் பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர், ரயிலில் இருந்தபடியே மக்களைச் சந்தித்து அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு ஆசியும் வழங்கினார். ஆனால் கும்பகோணத்தில் மட்டும் 3 நாள்கள் தங்கியிருந்து, போர்ட்டர் டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில் உரையாற்றினார். இது மிகவும் முக்கியமான சரித்திர நிகழ்வாகப் போற்றப்படுகிறது. இந்நிலையில்தான் போர்ட்டர் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில் அவரின் ஆளுயுர வெண்கல சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் இது உருவாக்கப்படுகிறது. ஆறரையடி உயரத்தில் இந்தச் சிலை அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர், “இந்திய நாட்டின் கலாசார பெருமைகளை மேலைநாடுகளில் நிலைநாட்டிய சுவாமி விவேகானந்தர் 1897-ம் ஆண்டு தாயகம் திரும்பினார். இலங்கை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, தஞ்சாவூர் வழியாக பிப்ரவரி 3-ம் தேதி கும்பகோணத்தை அடைந்தார். மூன்று தினங்கள் சுவாமிஜி தங்கியிருந்து கும்பகோணத்தை மேலும் புனிதப்படுத்தினார்.

போர்ட்டர் டவுன் ஹால்

அன்று மாலை கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் ‘வேதாந்தப் பணி’ என்ற தலைப்பில் ஓர் எழுச்சி உரை நிகழ்த்தினார். அந்த உரை நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட அனைத்து விடுதலை வீரர்களுக்கும் பெரும் உத்வேகம் தந்தது. விடுதலைப் போராட்டத்திற்கும், விடுதலை பெற்ற பிறகு நாட்டைக் கட்டமைப்பதில் பல்வேறு வழிகாட்டுதல்கள் சுவாமிஜியின் கருத்துகளில் கூறப்பட்டுள்ளன. அந்தக் கருத்துகள் இன்றும் நமக்கு மிகவும் எழுச்சி ஊட்டுகின்றன; தேசிய நலனிற்கும் பயன்படுகின்றன.

சுவாமி விவேகானந்தரின் அக்னி போன்ற சிந்தனைகளுள் மிக முக்கியமான ஒன்று – ‘எழுந்திருங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; லட்சியத்தை அடையும் வரை ஓயாது செயலாற்றுங்கள்’ என்பதாகும். நரம்பை முறுக்கேற்றும் அந்த நாயகனின் இந்த வார்த்தைகள் கும்பகோணத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதி மாலையில் முழங்கப்பட்டவை ஆகும். தேச நலனையும் பாரம்பரியத்தையும் வளத்தையும் போற்றி, பாதுகாத்து, பெருக்குவதையே தமது வாழ்க்கையாகக் கொண்டவர் சுவாமி விவேகானந்தர். கும்பகோணம் போர்ட்டர் நகர மன்றத்தில் அந்தத் துறவிவேந்தர் உரையாற்றிய அதே வளாகத்தில் அவருக்கு ஆளுயர திருவுருவச் சிலையை குடந்தை நகர பெருமக்களோடு சேர்ந்து அமைக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இவ்விழா ஏற்பாடுகளில் முக்கிய அங்கம் வகிக்கும் போர்ட்டர் டவுன் ஹால் நிர்வாகக் குழு தலைவரும் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை அன்பழகன், “தமிழ்நாட்டில் ஏராளமான ஆன்மிக நகரங்கள் இருக்கின்றன. ஆனால் சுவாமி விவேகானந்தர், கும்பகோணத்தில் மூன்று நாள்கள் தங்கியிருந்து உரையாற்றியது, கும்பகோணத்திற்கு கிடைத்த பெருமையாக இங்குள்ள மக்கள் கருதுகிறோம். அவருக்கு ஆளுயுர சிலை வைக்கக்கூடிய ஏற்பாடுகளில் நானும் ஒரு முக்கிய நபராக இருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். 2019-ம் ஆண்டு சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்ள நான் சென்றிருந்தேன். சுவாமி விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் உரையாற்றிய இடத்தைப் பார்க்க போனேன். ஆனால், அங்கு எந்தப் பதிவும் இல்லை. அங்கு கல்வெட்டு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

விழா குழுவினர்

குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன், “மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியவர் சுவாமி விவேகானந்தர். தன்னம்பிக்கை, உடல் ஆரோக்கியம், உள்ளத்தூய்மை, தேச பக்தியை வலியுறுத்தினார். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் விவேகானந்தரின் வழிகாட்டுதல்களைக் கொண்டு செல்ல, கும்பகோணத்தில் அமைக்கப்பட உள்ள சிலை முக்கிய பங்காற்றும்” எனத் தெரிவித்தார்.

சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு தஞ்சாவூர் ரயில் மார்க்கமாகச் சென்றபோது, பிப்ரவரி 3-ம் தேதி காலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கூடியிருந்த திரளான மக்களை சந்தித்து ஆசீர்வதித்தித்தார். அதனை நினைவுகூரும் வகையில் தஞ்சாவூர் ரயில் நிலையில் உலோகத்தாலான நினைவுப் பதிவும் அமைக்கப்படவுள்ளது. அந்தப் பதிவினை கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் பிப்ரவரி 3-ம் தேதி காலை 10 மணிக்குத் திறந்து வைக்க உள்ளார்.

AIARA

🔊 Listen to this 125 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில், ஆளுயுர வெண்கல சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை எந்தளவிற்கு போற்றப்படுகிறதோ, அதற்கு நிகராக கும்பகோணத்தில் அவர் ஆற்றிய உரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. அதன் 125-வது ஆண்டு விழா, வருகிற பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ளது. விவேகானந்தர் உரையாற்றிய அதே…

AIARA

🔊 Listen to this 125 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில், ஆளுயுர வெண்கல சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை எந்தளவிற்கு போற்றப்படுகிறதோ, அதற்கு நிகராக கும்பகோணத்தில் அவர் ஆற்றிய உரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. அதன் 125-வது ஆண்டு விழா, வருகிற பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ளது. விவேகானந்தர் உரையாற்றிய அதே…

Leave a Reply

Your email address will not be published.