`சீனா அப்படியொரு பாலத்தை கட்டவேயில்லை. இது வதந்தி’ – பான்காங் ஏரியில் சீன பாலமும் பாஜக விளக்கமும்!

  • 4

கிழக்கு லடாக்கின் இந்திய எல்லையோரத்தில் இருக்கும் பான்காங் ஏரியின் குறுக்கே, சீன ராணுவம் பாலம் கட்டிவருவதாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இதை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச புவி நுண்ணறிவு நிபுணர் (geo-intelligence expert) டேமியன் சைமன் (Damien Symon), சீனா அமைக்கும் பாலத்தின் செயற்கைக்கோள் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து பதிவிட்டிருக்கிறார்.

செயற்கைக்கோள் புகைப்படம்

கடந்த 2020 மே மாதம், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு அருகே இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா-சீனா இரு தரப்பிலும் தங்கள் எல்லையொட்டியப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. மிக முக்கியமாக எல்லையோரங்களில் சாலைகள் அமைப்பது, முகாம்கள், வீடுகள், ராணுவ நிலைகள் அமைப்பது என ராணுவ கட்டமைப்பை இருநாடுகளும் வேகமாக பலப்படுத்தத்தொடங்கின.

இந்தியா கடந்த ஆண்டு செப்டம்பரில், உலகின் மிக உயரமான சாலையை லடாக்கில் திறந்தது. லடாக்கின் பான்காங் ஏரியையும் லே நகரையும் இணைக்கும் இந்த சாலையை, இந்திய ராணுவத்தின் 58-வது இன்ஜினீயர் ரெஜிமென்ட்டானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 18,600 அடி உயரத்தில் அமைத்திருந்தது. மேலும், இந்த சாலை கட்டுமானம்தான் சீனாவின் முந்தைய தாக்குதலுக்கான காரணம் என்றும் அப்போது சொல்லப்பட்டது. அதேசமயம், சீனாவும் இந்திய எல்லைப்பகுதியான லடாக் மட்டுமல்லாமல் அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், பூடான் நாட்டு பகுதிகளிலும் தனது ராணுவ கட்டமைப்பை திரைமறைவில் வலுப்படுத்ததொடங்கியது. குறிப்பாக, இந்திய எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரததேசத்தில் சுமார் 4.5 கி.மீ தூரத்துக்கு ஊடுருவி, நூற்றுக்கும்மேற்பட்ட வீடுகளை கட்டி ஒரு கிராமத்தையே உருவாக்கியது.

அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா கட்டிய வீடுகள்

அதேபோல, சிக்கிம் டோக்லாமிலிருந்து சுமார் 7 கி.மீ-க்கு அப்பால் புதிதாக பல பதுங்கு குழிகளையும் அமைத்தது. இவை அனைத்தையும் செயற்கைக்கோள் படங்கள் மூலமாக இந்தியா கண்டுபிடித்தது. சீனாவின் எல்லைதாண்டிய அத்துமீறல்களை இந்தியா தொடர்ச்சியாக கண்டித்து வந்தது.

கல்வான் – விவகாரம்

அதன் தொடர்ச்சியாக, தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் தான் அடைந்த பின்னடைவை சரிகட்டும் விதமாக, பான்காங் ஏரியில் சீனா பாலம் கட்டிவருவதாக அதிச்சித்தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

லடாக் கிழக்குப் பகுதியில் இந்திய எல்லையோரம் அமைந்திருக்கும் இந்த பான்காங் ஏரியின் மொத்தமுள்ள 270 சதுர மைல் பரப்பளவில், 50% பரப்பளவு சீனாவிடமும், 40% பரப்பளவு இந்தியாவிடமும் 10% பரப்பளவு சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியாகவும் இருக்கிறது. இந்த ஏரியின் வடக்குப்பகுதியில் இருக்கும் குர்னாக்கையும், தெற்குப்பகுதியையும் இணைக்கும் விதமாக சீன பாலம் கட்டிவருகிறது. இதன்மூலம், குர்னாக் பகுதிக்கு செல்ல ரூடாக்கு சாலைவழியாக 200 கி.மீ. ஏரியை சுற்றி சென்றுகொண்டிருந்த நிலை மாறும். புதிய பாலத்தின்மூலம் வெறும் 50 கி.மீட்டருக்குள்ளாக, குறைவான தூரத்தில், நேரத்தில் விரைவாக சீன ராணுவம் குர்னாக் பகுதியை சென்றடையும்.

பான்காங் ஏரி வரைபடம்

இது இந்தியப்படைகளை தாக்க, சீனா வேகமாக தனது ராணுவத்தை எல்லைப்பகுதியை நோக்கி நகர்த்த ஏதுவாக அமையும் என பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், சீனாவின் பான்காங் ஏரி பாலம் கட்டுமானம் தொடர்பாக இந்தியாவுக்கு ஏற்கெனவே தகவல் தெரியும் என்றும், இந்தியா ஏனோ அமைதியாக இருக்கிறது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியில் கசிந்துவருகின்றன.

இந்தியா – சீனா

இந்த நிலையில், கடந்த ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது ஐந்து நட்சத்திர சிவப்பு தேசியக்கொடியை ஏற்றியதாக, சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. மேலும், அதுசம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்களும் இணையதளங்களில் வெளிவந்தன. இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவும் இந்திய ராணுவவீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றுவதுபோன்ற புகைப்படங்களை பாஜக தலைவர்கள் வெளியிட்டு நிலைமையை சமாளித்தனர்.

இந்த நிலையில், பான்காங் ஏரியில் சீனா பாலம் கட்டும் விவகாரம் மேலும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமரின் மௌனத்தால் எழுந்துள்ள கூச்சல் காதடைக்கச் செய்கிறது. நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் சிறப்புக்குரியவை” என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்

மேலும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பான்காங் த்சோ உள்ளிட்ட அக்சாய் சின் முழுவதிலும் சாலைகள், பாலங்களை சீனா கட்டி எழுப்பி வருவதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. சீனா கட்டியுள்ள பாலம் பான்காங் ஏரியின் இருபுறமும் இணைக்கிறது. சீன வீரர்கள் மற்றும் தளவாடங்கள் அங்கு செல்வதற்கு பல வழிகள் திறக்கப்படும். இப்போதும் மோடி அரசு ஏன் இப்படி எதுவும் செய்யாமல் இருக்கிறது?” என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

நாராயணன் திருப்பதி

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் திருப்பதி நாராயணனிடம் கேட்டோம்.“இந்திய வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து கொடியேற்றி காண்பித்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. சீனா அப்படியொரு பாலத்தை அங்கு கட்டவேயில்லை. இவை வெறும் ஒரு வதந்தி!” என்று கூறியதுடன் முடித்துக்கொண்டார்.

🔊 Listen to this கிழக்கு லடாக்கின் இந்திய எல்லையோரத்தில் இருக்கும் பான்காங் ஏரியின் குறுக்கே, சீன ராணுவம் பாலம் கட்டிவருவதாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இதை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச புவி நுண்ணறிவு நிபுணர் (geo-intelligence expert) டேமியன் சைமன் (Damien Symon), சீனா அமைக்கும் பாலத்தின் செயற்கைக்கோள் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து பதிவிட்டிருக்கிறார். செயற்கைக்கோள் புகைப்படம் கடந்த 2020 மே மாதம், கிழக்கு லடாக்கின் கல்வான்…

🔊 Listen to this கிழக்கு லடாக்கின் இந்திய எல்லையோரத்தில் இருக்கும் பான்காங் ஏரியின் குறுக்கே, சீன ராணுவம் பாலம் கட்டிவருவதாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இதை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச புவி நுண்ணறிவு நிபுணர் (geo-intelligence expert) டேமியன் சைமன் (Damien Symon), சீனா அமைக்கும் பாலத்தின் செயற்கைக்கோள் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து பதிவிட்டிருக்கிறார். செயற்கைக்கோள் புகைப்படம் கடந்த 2020 மே மாதம், கிழக்கு லடாக்கின் கல்வான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *