சீனாவுக்கு அடிபணியாத தைவான்; தீர்க்கப்படாத பிரச்னையின் காரணம் என்ன? – முழு அலசல்

`தைவான் அமைதி வழியில் சீனாவுடன் இணைக்கப்படும்’ என சூசகமாகத் தெரிவித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். `தைவான் ஒருபோதும் சீனாவுக்கு அடிபணியாது’ எனப் பரபரப்பான பதிலடி தந்திருக்கிறார் தைவான் அதிபர் சாய் இங்-வென்! சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்னை என்பதைப் பார்ப்போம்.

தைவான்

தைவான் – சீனா மோதல் பின்னணி:

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலகட்டத்தில் சீனவின் சியாங் காய்-ஷேக்கின் குமிண்டாங் அரசுக்கும், மா சேதுங்கின் கம்யூனிஸ்ட் படைக்கும் இடையேயான போர் உக்கிரமடைந்தது. போரின் முடிவில், சீனாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றியது சீன கம்யூனிஸ்ட் கட்சி. 1949-ம் ஆண்டு பீஜிங்கை தலைநகராகக்கொண்டு, `மக்கள் சீனக் குடியரசு’ எனும் பெயரில் புதிய நாட்டை அறிவித்தது. அதேசமயம் கம்யூனிஸ்ட் படையால் விரட்டியடிக்கப்பட்ட சியாங் காய்-ஷேக்கின் அரசாங்கத்தினர், 15 லட்சம் மக்களுடன் தைவான் நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். அங்கு, `சீனக் குடியரசு ‘ எனும் பெயரில் அரசாங்கத்தை நிறுவி, `நாங்கள்தான் சட்டப்படி அமைந்த முழுமையான சீன அரசாங்கம்’ எனp பிரகடனப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையும், பெரும்பாலான உலக நாடுகளும் 1970-ம் ஆண்டுவரை சியாங்கின் அரசையே சீன அரசாக அங்கீகரித்தன.

மாவோ

ஆனால், 1971-ம் ஆண்டு காட்சி மாறியது. ஐ.நா சபை பீஜிங்கைத் தலைநகராகக்கொண்டு இயங்கும் மக்கள் சீன அரசுக்குத் தனது அங்கீகாரத்தை மாற்றியது. இதனால், சீனாவின் மற்ற பகுதிகளையும் மக்கள் சீனக் குடியரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது.

ஐ.நா-வால் வெளியேற்றப்பட்டு, தனித்துவிடப்பட்ட குமிண்டாங் சீனக் குடியரசு, தன்னைத் தனிநாடாக அறிவித்துக்கொண்டு தைவானாகவே தொடர்ந்தது. இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட சீன அரசு, அண்டை நாடுகளான மங்கோலியா, கம்போடியா, திபெத் நாடுகளின் பெரும்பகுதியைத் தன்னுடையது எனச் சொந்தம் கொண்டாடியது. குறிப்பாக, தைவான் தீவு முழுமையும் சீன அரசுக்குச் சொந்தமானது என அதிகாரக்குரல் எழுப்பியது. ஆனால், தைவான் இதை முற்றிலுமாக மறுத்தது.

தைவான் – சீனா

அதன் பின்னர் 1981-ம் ஆண்டு சீன அரசாங்கம், `ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற புதிய ஆட்சிமுறைத் திட்டத்தைக் கொண்டுவந்து, “தைவான் சீனாவுடன் இணைந்தால், ஹாங்காங்கில் இருப்பதுபோல, தைவானுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குவோம்” என அழைத்தது. சீனாவின் ஆசைவார்த்தைகளை நிராகரித்த தைவான் அரசு, நாங்கள் ஏற்கெனவே தன்னாட்சி அதிகாரம்மிக்க ஓர் இறையாண்மைகொண்ட அரசாங்கம்தான் என அதிரடியாக அறிவித்தது.

தைவான்

தைவானின் அரசியல், பொருளாதார வளர்ச்சி:

1990-களுக்குப் பிறகு தைவானின் ஆட்சியமைப்பு, ஜனநாயக நடைமுறையை நோக்கி நகர்ந்தது. 2000-ம் ஆண்டு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, குமிண்டாங் அரசைச் சாராத சென் ஷூயி-பியான் என்பவர் தைவான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தைவான் அரசாங்கம் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத்துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. தைவான் தனது மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியால் உலக வணிக அமைப்பு, ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு போன்றவற்றில் தவிர்க்க முடியாத அங்கமாக இடம்பெற்று, உலகின் 19-வது பெரிய பொருளாதார நாடாக உருப்பெற்றது.

தைவானின் வேகமான பொருளாதார வளர்ச்சி, பசிபிக் பெருங்கடலில் உயர்ந்துவரும் செல்வாக்கு போன்ற காரணங்கள் சீனாவின் வயிற்றில் புளியைக் கரைத்தன. தொடர்ந்து தைவானில் அமைந்திருக்கும் அரசு சட்டவிரோதமானது என்றும், தைவான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாகாணப்பகுதி என்றும் சீனா கூறிவந்தது. மேலும், 2005-ம் ஆண்டு தைவானைக் கட்டுப்படுத்தும் நோக்கில் `பிரிவினைவாத தடுப்புச்சட்டத்தை’ இயற்றியது.

தைவான்

இதைத் தொடர்ந்து தைவானுக்கும் சீனாவுக்குமான மோதல் மேலும் முற்றத் தொடங்கியது. தைவான் கடற்பரப்பில் சீனா தனது போர்க் கப்பல்களை நிலைநிறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், 2016-ம் ஆண்டு தைவான் அதிபராக சாய் இங்-வென் தேர்வுசெய்யப்பட்டார். அதுமுதல் தைவானின் பாதுகாப்பு, அங்கீகாரம், பசுபிக் கடல் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மேலைநாடுகளுடன் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டார்.

தைவான்

Also Read: தைவான்: உலகத்தின் மிக அபாயகரமான பகுதி… நாடுகளின் கதை – 6

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதுக்கு வாழ்த்து தெரிவித்தது முதல் அமெரிக்காவிடமிருந்து தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகுத்தார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தைவான் அதிபராக சாய் இங்-வென் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல் புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜோ பைடனுடன், தைவானுடனான உறவை வலுப்படுத்திக்கொண்டார்.

அமெரிக்காவுடனான உறவும், சீனா பறக்கவிட்ட போர் விமானங்களும்:

இதனால் ஆத்திரமடைந்த சீனா, கடந்த ஆறு மாதங்களாக தைவான் வான்பரப்பின் மீது தனது போர் விமானங்களை பறக்கவிட்டு அச்சுறுத்தியது. குறிப்பாக, கடந்த வாரம் மட்டும் 40 முதல் 150 வரையிலான போர் விமானங்களை தைவான் மீது சீன அரசாங்கம் பறக்கவிட்டது. இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சர் சியூ குவோ-செங், “கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான உறவில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது, சீனா 2025-ம் ஆண்டுக்குள் தைவான் மீது போர்த்தொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது” என கருத்து தெரிவித்திருந்தார்.

போர் விமானங்கள்

போர் விமானங்கள் பறக்கவிடப்பட்டது குறித்து விளக்கமளித்த சீன ராணுவம், “ தைவான் பகுதியில் அந்நிய நாடுகளின் நடமாட்டம் அதிகரித்துவருவதால், அதற்கு எச்சரிக்கை விடுக்கும்விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என மறைமுகமாக அமெரிக்கா, தைவானுக்கு மிரட்டல் விடுத்தது. அதேபோல் சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், “ தைவான் இப்போது அபாயத்தை உணர்ந்திருக்கும். இருந்தாலும் அது தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் இருக்கிறது. வெளிநாடுகளுடனான ராஜ்ஜிய, ராணுவ உறவை மேம்படுத்திக்கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறது” எனக் குற்றம்சாட்டியது.

ஜோ பைடன் – ஜி ஜின்பிங்

Also Read: `அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ – போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

தைவான் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்டும்விதமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பேசினார். அந்த உரையாடலில், `தைவான் உடன்படிக்கைக்கு சீனா கட்டுப்படும்’ என சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்திருப்பதாக பைடன் கூறியிருந்தார்.

ஜி ஜின்பிங் Vs சாய் இங்-வென் :

இந்த நிலையில் அதற்கு மாறாக, சீனப்புரட்சியின் நினைவுநாள் விழாவில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் “ தைவான் அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படும். தைவான் அரசின் தனிநாட்டுப் பிரிவினைவாதம்தான், தாய்நாடான சீனாவுடன் மீண்டும் தைவானை ஒன்றிணைப்பதற்கு தடையாக இருக்கிறது. சீன அரசாங்கம் தனது தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிச்சயமாக நிறைவேற்றும்!” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரித்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இதற்கு பதிலடிகொடுக்கும்விதமாக, தைவானின் தேசியநாள் விழாவில் பேசிய தைவான் அதிபர் சாய் இங்-வென், “நாம் எந்த அளவுக்கு சாதிக்கிறோமோ, அந்த அளவுக்கு சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் நமக்கு அதிகரிக்கும்! தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம்!” என அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

தைவான் அதிபர் சாய் இங்-வென்

பெரும்பாலான உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாதபோதிலும், தைவான் தனக்கென ஒரு நிலப்பரப்பு, மக்கள், அரசாங்கம், அரசியல் சட்டம், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், மூன்று லட்சம் வீரர்களைக்கொண்ட ராணுவம் என ஒரு தனிநாட்டுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு இயங்கிவருகிறது.

சமீபத்திய நிகழ்வுகள் சீனாவுக்கும் தைவானுக்குமான மோதலை மேலும் அதிகப்படுத்திவருகின்றன. பசிபிக் பிராந்தியத்தில் நடந்துவரும் இத்தகைய அசாதாரண சூழலால் உலக நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.

AIARA

🔊 Listen to this `தைவான் அமைதி வழியில் சீனாவுடன் இணைக்கப்படும்’ என சூசகமாகத் தெரிவித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். `தைவான் ஒருபோதும் சீனாவுக்கு அடிபணியாது’ எனப் பரபரப்பான பதிலடி தந்திருக்கிறார் தைவான் அதிபர் சாய் இங்-வென்! சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்னை என்பதைப் பார்ப்போம். தைவான் தைவான் – சீனா மோதல் பின்னணி: இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலகட்டத்தில் சீனவின் சியாங் காய்-ஷேக்கின் குமிண்டாங் அரசுக்கும், மா சேதுங்கின் கம்யூனிஸ்ட் படைக்கும்…

AIARA

🔊 Listen to this `தைவான் அமைதி வழியில் சீனாவுடன் இணைக்கப்படும்’ என சூசகமாகத் தெரிவித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். `தைவான் ஒருபோதும் சீனாவுக்கு அடிபணியாது’ எனப் பரபரப்பான பதிலடி தந்திருக்கிறார் தைவான் அதிபர் சாய் இங்-வென்! சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்னை என்பதைப் பார்ப்போம். தைவான் தைவான் – சீனா மோதல் பின்னணி: இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலகட்டத்தில் சீனவின் சியாங் காய்-ஷேக்கின் குமிண்டாங் அரசுக்கும், மா சேதுங்கின் கம்யூனிஸ்ட் படைக்கும்…