சிலைகளைத் தொட்டு உணர்ந்த விழிச்சவால் கொண்ட மாணவர்கள்; பிரெய்லி தினத்தன்று நெகிழ்ச்சி!

  • 6

1809-ம் வருடம் ஜனவரி 4-ம் தேதி பிறந்த ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் ப்ரைலி, இளம் வயதில் விபத்தில் சிக்கி பார்வைக் குறைபாட்டுக்கு உள்ளானார். ஆனாலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்ட அவர் தன்னைப்போல பார்வைக் குறைப்பாடு உள்ளவர்கள் தொட்டு உணர்ந்து அறிந்துகொள்ளும் விதமாக ஆறு புள்ளிகள் கொண்ட எழுத்துகளை 1824-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அவரது பிறந்த தினம், ப்ரைலி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நடுகல் குறித்து கேட்டறிந்த விழிச்சவால் கொண்ட மாணவிகள்

Also Read: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! – விழிச்சவால் தம்பதியரின் வெற்றி வாழ்க்கை

ப்ரைலி தினத்தையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் விழிச்சவால் கொண்ட மாணவர்கள் நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தூத்துக்குடியில் உள்ள `மதர் பைரோஸ்’ அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

பார்வையற்றோர் பள்ளியில் இருந்து அருங்காட்சியகம் அழைத்துச் செல்லப்பட்ட மாணவ, மாணவிகளை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி வரவேற்று பழங்கால சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த நடுகற்கள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார்.

ப்ரைலி தினம் – அருங்காட்சியகத்தில் மாணவர்கள்

தென் மாவட்டங்களில் பழங்கால மன்னர்கள், போர்ப்படைத் தளபதிகளுக்கு வைக்கப்பட்ட நடுகல் குறித்து விளக்கியதை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். அத்துடன், அந்த நடுகற்களில், கையில் வாளுடன் குதிரை மீது அமர்ந்திருக்கும் மன்னன், வாளுடன் இருக்கும் வீரன் போன்ற புடைப்புச் சிற்பங்களை அவர்கள் ஆர்வத்துடன் கைகளால் தடவி உணர்ந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “நாங்கள் சிலைகள் பற்றி புத்தகத்தில் நிறையப் படித்திருக்கிறோம். ஆனால், அதை இப்போதுதான் கைகளால் தொட்டுப் பார்க்க முடிந்தது. சிலைகள், நடுகற்கள், முதுமக்கள் தாழி எனப் பல பொருள்களைத் தொட்டு உணர்ந்து கொண்டோம்.

புடைப்புச் சிற்பங்களில் இருக்கும் வீரர்களின் கையில் இருக்கும் வாள், நரம்புகள் தெறிக்கக் குதிரை மீது அமர்ந்திருக்கும் கம்பீரம் ஆகியவற்றைத் தொடும்போதே உணர முடிந்தது. ப்ரைலி தினத்தில் எங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று உருக்கத்துடன் தெரிவித்தனர்

அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி கூறுகையில், “பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்கள் அருங்காட்சியகத்துக்கு வந்ததும் அவர்களுக்கு இங்குள்ள பொருள்கள், சிலைகள் உள்ளிட்டவற்றை விளக்கமாக எடுத்துச் சொன்னதும் மாணவ, மாணவிகள் மிகவும் உற்சாகமாகி அவற்றைத் தொட்டுப் பார்த்து அவற்றின் வடிவமைப்புகளைத் தெரிந்து கொண்டார்கள்.

சிலையைத் தொட்டு உணரும் மாணவன்

Also Read: இந்தியாவிலேயே முதன்முதலாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி உயர மனிதர்… மாற்றுத்திறனாளி சிவபால் சாதனை!

ஒவ்வொரு சிலையைப் பற்றிச் சொன்னதும் அவற்றை கைகளால் தடவி உணர்ந்ததுடன் அதன் சிறப்புகளையும், எந்தக் காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்ற தகவலையும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டது வியப்பளிப்பதாக இருந்தது. ப்ரைலி தினம் அவர்களுக்கு பயனளிக்கக் கூடியதாக அமைய அருங்காட்சியகம் உதவிகரமாக இருந்ததில் எங்களுக்கு திருப்தி” என்றார்.

பின்னர் மாணவ, மாணவிகள் அனைவரும் நெல்லையில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் விரும்பிய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் மாணவ, மாணவிகள் கூடுதல் உற்சாகம் அடைந்தனர்.

🔊 Listen to this 1809-ம் வருடம் ஜனவரி 4-ம் தேதி பிறந்த ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் ப்ரைலி, இளம் வயதில் விபத்தில் சிக்கி பார்வைக் குறைபாட்டுக்கு உள்ளானார். ஆனாலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்ட அவர் தன்னைப்போல பார்வைக் குறைப்பாடு உள்ளவர்கள் தொட்டு உணர்ந்து அறிந்துகொள்ளும் விதமாக ஆறு புள்ளிகள் கொண்ட எழுத்துகளை 1824-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அவரது பிறந்த தினம், ப்ரைலி தினமாக அனுசரிக்கப்படுகிறது. நடுகல் குறித்து கேட்டறிந்த விழிச்சவால் கொண்ட…

🔊 Listen to this 1809-ம் வருடம் ஜனவரி 4-ம் தேதி பிறந்த ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் ப்ரைலி, இளம் வயதில் விபத்தில் சிக்கி பார்வைக் குறைபாட்டுக்கு உள்ளானார். ஆனாலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்ட அவர் தன்னைப்போல பார்வைக் குறைப்பாடு உள்ளவர்கள் தொட்டு உணர்ந்து அறிந்துகொள்ளும் விதமாக ஆறு புள்ளிகள் கொண்ட எழுத்துகளை 1824-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அவரது பிறந்த தினம், ப்ரைலி தினமாக அனுசரிக்கப்படுகிறது. நடுகல் குறித்து கேட்டறிந்த விழிச்சவால் கொண்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *