உ.பி தேர்தல் களத்தில் அகிலேஷ் கை ஓங்குகிறதா?! – மம்தாவின் ஆதரவு எவ்வளவு தூரம் உதவும் – ஓர் அலசல்

இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பதால், இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநிலம் பரபரப்புடன் காணப்படுகிறது. பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாகக் களமிறங்குவதால், நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க-வை மீண்டும் அரியணையில் ஏறவிடக் கூடாது என்று சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக வேலை பார்க்கின்றன.

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு முதல்வரும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெற்று முதல்வர் ஆனதில்லை. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வின் யோகி ஆதித்யநாத் தொடர்ச்சியாக இரண்டாவது முறை முதல்வர் நாற்காலியில் அமருவார் என்று சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

அதேநேரம், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வேகத்துடன் புதிய தேர்தல் உத்திகளுடன் களத்தில் இறங்கியிருக்கிறார், முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ். 2012-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது சமாஜ்வாடி கட்சி. அப்போது, தான் முதல்வர் ஆகாமல், தன் மகன் அகிலேஷ் யாதவுக்கு முதல்வராகும் வாய்ப்பை வழங்கினார், சமாஜ்வாடு கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ். ஐந்தாண்டுக்கால ஆட்சிக்குப் பிறகு, 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தன.

ராகுல் காந்தி

அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் கரம்கோத்ததால், அந்தக் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என்று பலரும் கணிப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால், அங்கு மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. அதற்கடுத்து, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது என்றே சமாஜ்வாடி கட்சி முடிவுசெய்தது. இந்த முறை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் கூட்டணிவைத்தார். அதில், மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் மட்டுமே சமாஜ்வாடி வெற்றிபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் பல சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தான் அகிலேஷ் போட்டியிடவிருக்கிறார். ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி முடிவாகியிருக்கிறது. ஜெயந்த் சௌதாரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது சமாஜ்வாடி கட்சி.

ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், புதன்கிழமையன்று அகிலேஷ் யாதவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறோம். உ.பி-யில் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றுவரும் மோசமான ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் அடிப்படை லட்சியம். பல கட்சிகளுடன் சமாஜ்வாடி கட்சி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அந்த வகையில், எங்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது” என்று சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

அகிலேஷ்

இதற்கிடையில், பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உ.பி சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளார். மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பிறகு, உ.பி தேர்தலில் அகிலேஷுக்கு ஆதரவு கொடுப்பது பற்றிக் கருத்து தெரிவித்தார். “அகிலேஷ் விரும்பினால், உ.பி சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு ஆதரவு அளிப்பேன்” என்றார் மம்தா. மேற்கு வங்கத்தைத் தாண்டி கோவா, திரிபுரா, அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கால் பதிப்பதற்கு மம்தா பானர்ஜியின் கட்சி முயன்றுவருகிறது.

Also Read: ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்: அமெரிக்காவை சீனா அலறவிடுவதன் பின்னணி என்ன?

கடந்த தேர்தலைக் காட்டிலும், 2022 சட்டமன்றத் தேர்தலில் குறைவான தொகுதிகளே பா.ஜ.க-வுக்கு கிடைக்கும் என்றாலும், பா.ஜ.க-வே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படிப் பார்த்தால், இரண்டாவது இடத்தில் சமாஜ்வாடி கட்சி இருக்கிறது. மேலும், தனக்குப் போட்டியாக இருக்கும் கட்சியைத்தான் ஆட்சியில் இருக்கும் கட்சி அதிகமாக விமர்சிக்கும். அந்த வகையில், சமாஜ்வாடி கட்சியைத்தான் பா.ஜ.க-வினர் கடுமையாகத் தாக்கிவருகிறார்கள். இதனால், அனைத்துத் தரப்பினரின் பார்வையும் அகிலேஷ் யாதவ் மீது குவிந்துள்ளது.

அகிலேஷ் யாதவ்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அதைத் தனது முக்கியச் சாதனையாக பா.ஜ.க பிரசாரம் செய்துவருகிறது. அது ஓரளவுக்கு பா.ஜ.க-வுக்குக் கைகொடுக்கும். ஆனால், மேற்கு உ.பி-யில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அங்கு, விவசாயிகள் மத்தியில் பா.ஜ.க-வுக்குக் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசப்படும் நிலையில், அகிலேஷ் யாதவ் பா.ஜ.க-வுக்குக் கடும் போட்டியைக் கொடுத்துவருகிறார் என்பதும் உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

AIARA

🔊 Listen to this இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பதால், இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநிலம் பரபரப்புடன் காணப்படுகிறது. பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாகக் களமிறங்குவதால், நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க-வை மீண்டும் அரியணையில் ஏறவிடக் கூடாது என்று சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய…

AIARA

🔊 Listen to this இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பதால், இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநிலம் பரபரப்புடன் காணப்படுகிறது. பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாகக் களமிறங்குவதால், நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க-வை மீண்டும் அரியணையில் ஏறவிடக் கூடாது என்று சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய…