உலக மண்வள நாள்: `மௌன வசந்தம்’ மனிதர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?

ஒவ்வொரு நாளும் பல உயிர்களை உயிர்ப்பித்துக் கொண்டும், உருவாக்கி கொண்டும் இருப்பது மண்தான். மண்ணோடு மனித வாழ்வும், முடிவும் நெருங்கிய தொடர்புடையது. எனவே மண்ணையும் மண்ணின் வளங்களையும் பாதுகாப்பது நம்முடைய கடமை. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் ரேச்சல் கார்சன் எழுதிய `Silent spring’ (மௌன வசந்தம்) எனும் நூலிலிருந்து மனிதனின் கண்டுபிடிப்பு எப்படி மனிதனுக்கே எதிராக மாறியது என்பதைப் பார்ப்போம்.

Agriculture (Representational Image)

ரேச்சல் கார்சன் ஒரு அமெரிக்க கடல் உயிரியலாளர், எழுத்தாளர் மற்றும் பாதுகாவலர். அவருடைய இந்தப் புத்தகம் உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை அடுத்த நிலைக்கு முன்னேற்றிய பெருமைக்குரியது. அவருடைய தோழி ஓல்கா ஓவன்ஸ் ஹக்ன்ஸ் (Olga owens Huckins) ஜனவரி 1950-ம் ஆண்டு `The Boston Herald’ பத்திரிகைக்கு, கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில், “அரசாங்கம் கொசுக்களை அழிப்பதற்காக வான்வழியே தெளித்த பூச்சிக்கொல்லியால் அநேக பறவைகள் (Robin) இறந்துள்ளன; வசந்த காலத்தில் பாடக்கூடிய பறவைகள் இல்லாததால் இது எங்களுக்கு ஒரு மௌனமான வசந்த காலம்” என எழுதி அனுப்புகிறார்.

அதன் ஒரு பிரதியை கார்சனுக்கு அனுப்புகிறார். ரேச்சல் கார்சன் இது சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்னை என்று அதற்கான ஆராய்ச்சியில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அது குறித்து தகவல்களைச் சேகரித்து 17 தலைப்புகளின் கீழ் புத்தகம் ஒன்றை விரிவாக எழுதுகிறார். இதற்கு ஒட்டுமொத்த ரசாயன தொழிற்சாலைகளும் எதிர்ப்பைத் தெரிவித்தன. இருந்தும் இந்தப் போராட்டத்தை அவர் விவசாயிகளுக்காகவும், சாதாரண மக்களுக்காகவும் தொடர்ந்தார்.

அவருடைய இறப்புக்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து, தேசிய சுற்றுசூழல் கொள்கை திட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் விதியைப் நிறைவேற்றி DDT என்ற ரசாயனத்தை தடை செய்ய உத்தரவிட்டது.

Rachel Carson

அன்று அமெரிக்கா, பூமி நாளை முதன்முதலாக கொண்டாடியது.

டி.டி.டீ (DDT) என்பது (டைக்குளோரோ டைபினைல் டிரைகுளோரோ ஈத்தேன் என்பதன் சுருக்கப்பெயர்) செயற்கையான பூச்சிகொல்லிகளில் ஒன்றாகும். இரண்டாம் உலகப் போரின் போது பொதுமக்கள் மற்றும் படைப்பிரிவு வீரர்களுக்கு நோய் மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது. அதிகத் திறன் கொண்ட டி.டி.டீ யைக் கண்டறிந்த காரணத்திற்காக சுவிட்சர்லாந்தைச் சார்ந்த வேதியியலாளர் பால் ஃகெர்மேன் முல்லர் என்பவருக்கு 1948-ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. போருக்குப் பிறகு அந்த மருந்தானது விவசாயத்திற்குள் நுழைகிறது. இது பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவு பயன்பாட்டால் பலவித பாதிப்புகள் ஏற்படுகிறது.

1. பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழிப்பதற்காக தெளிக்கப்படும் இதனால் மனிதனுக்கு நன்மை பயக்கும் உயிரினங்களும் அழிந்து போகின்றன. (1956-ல் மொட்டுப் புழுவை அழிப்பதற்காக 8,85,000 ஏக்கர் பரப்பில் தெளிக்கப்பட்ட ரசாயனத்தால் சிலந்தி பூச்சிகளும் இறந்து போயின)

2. உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களும் பாதிக்கப்படுவதால் இவை பூச்சிக்கொல்லிகள் அல்ல `உயிர்க் கொல்லிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

3. இந்த வேதிப்பொருட்கள் உணவுச் சங்கிலியில் எளிதாக நுழைந்து விடுகின்றன. உயிர்களில் Bioaccumulation ஆக தங்கிவிடுகின்றன. உதாரணத்திற்கு வேதி ரசாயனங்கள் உபயோகப்படுத்தாத மக்களிடம், அவர்கள் உடலில் வேதி ரசாயனங்கள் எவ்வளவு உள்ளது எனப் பரிசோதனை செய்த போது அவர்களின் உடல் உறுப்புகளில் அவை கலந்திருந்தது தெரியவந்தது. இவர்கள் முற்றிலும் பூச்சிக்கொல்லிகளை உபயோகப்படுத்தாதவர்கள். ஆனால் இவர்கள் வேறொரு பண்ணைகளில் இருந்து வாங்கி சாப்பிட்ட முட்டைகளில் இருந்து வேதி ரசாயனங்கள் வந்துள்ளன. முட்டைகளை இட்ட கோழிகள் பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்ட தாவரத்தை உண்டுள்ளன. தாவரத்திலிருந்து கோழிக்கு, கோழியிலிருந்து முட்டைக்கு, முட்டையிலிருந்து மனிதனுக்கு என உணவுச்சங்கிலியில் கடத்தப்பட்டு வந்துள்ளது.

Soil (Representational Image)

Also Read: `இப்படி செஞ்சா மண்தான் உரம், பூச்சி விரட்டி எல்லாமே!’ – மோடி பாராட்டிய தெலங்கானா விவசாயி

4. பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் பூமியிலேயே தங்கிவிடுவதால் பறவை, விலங்கு, பூச்சிகள் என அனைத்தின் உடலிலும் நுழைந்துவிடுகின்றன. இந்த ரசாயனங்கள் ஏரியிலுள்ள மீன்களிலும், மண்ணிலுள்ள மண்புழுவிலும், பறவைகளின் முட்டைகளிலும், மனிதனின் உடல் திசுக்களிலும் காணப்படுகின்றன. இது தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கும் செல்கிறது. சொல்லப்போனால் ஹைட்ரோ கார்பன்கள் தொப்புள் கொடியை கடந்து குழந்தைகளையும் சென்றடைகின்றன. இதனால் பிறப்பதற்கு முன்பே வயிற்றில்இருக்கும் குழந்தைகளுக்கும் வேதிபொருட்கள் கடத்தப்படுகிறது.

5. இவ்வாறு ரசாயனங்கள் கடத்தப்படும் போது அவற்றின் செறிவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

6. பூமியானது 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது கடலானது 97.5 சதவீதம் உப்பு நீரைக் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் காற்றில், கரையில், ஆற்றில், பனிக்கட்டியாக, நம்மைச்சற்றியும் ஈரப்பதமும் நீரும் உள்ளது. ஆனால் இந்நீர் விவசாயத்திற்கு பயன்படாது.

நீருக்கும் வாழ்க்கை சுழற்சி உள்ளது. விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதிகமாக உபயோகப்படுத்தப் படுவதால் மழை வரும் பொழுது ரசாயன கழிவுகள் நீரில் கலக்கின்றன. எனவே நீரிலுள்ள கடல்வாழ் மீன்களும் விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.

1960-ம் ஆண்டு United States Fish and Wild Life Service ஒரு ஆய்வு செய்தபோது கடல் மீனின் திசுக்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாகக் கண்டறிந்தனர்.

Pesticide (Representational Image)

Also Read: எளிதாக வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்; எப்படி? | Terrace Garden | Episode 8 | Pasumai Vikatan

7. 1960-ல் டியூக் ஏரி மற்றும் லோவர் க்ளாமாத் எனும் பகுதிகளிலில் வலசை பறவைகள் அதிகளவில் இறந்துள்ளன. இவை நேரடியாக பாதிக்கப்படாமல் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை மீன்களை உண்ணும் பறவைகள். ரசாயனங்களால் பாதிக்கப்பட்ட இறந்த மீன்களை இவை உண்டுள்ளன இந்த மீன்கள் கடல் நீரில் கலந்த ரசாயனங்களால் இறந்துள்ளன.

8. பூமியினுடைய மேற்பரப்பு ஈரப்பதமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். இதற்கு காரணம் உழவனின் நண்பன் மண்புழு. பூமியின் எச்சங்களை சிதைத்து மண்பரப்பில் அடர்த்தியை உருவாக்குகிறது. இதை செய்ய பத்து வருடங்களாகும். ஆனால் ரசாயனங்களால் இவை அழிந்துபோகின்றன. மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது.

9. ரசாயனங்களை பயிர்களுக்கு தெளிக்கும் பொழுது ஒட்டுமொத்தமாக இல்லாமல் (Blanket spraying) இல்லாமல் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட இடங்களில் (selective spraying) மட்டும் தெளிக்கலாம் என்று கார்சன் வலியுறுத்தினார்.

10. கொழுப்புகளில் ரசாயனங்கள் எளிதாக தங்கிவிடும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன்கள் உள்ளன. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் சொல்வதென்னவென்றால், நாடுகளுக்கு இடையே உணவுப் போக்குவரத்து நடக்கும்பொழுது, எல்லைக்கு வெளியே நடக்கும் உணவுமீறல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் மனிதனுடைய உடல் தாங்கிக்கொள்ள கூடிய ரசாயன அளவை (Tolerence) எடுத்துக்கொள்ளலாம் என்கிறது. ஆனால் நாம் பலவகையான உணவை மூன்று வேளையும் எடுத்துக்கொள்வதால் இந்த Tolerence அளவை கருத்தில் கொள்வது கடினமே.

Agriculture (Representational Image)

Also Read: மண் வளம்… எப்போது கவலைப்படப்போகிறோம்? #WorldSoilDay

மனிதன் ஒரு சுற்றுச்சூழலை சார்ந்து வாழும் ஒரு ஒட்டுண்ணி. ஆனால் மனிதனுடைய கண்டுபிடிப்புகளே மனித இனத்திற்கு அழிவாக உள்ளது. இயற்கையை கையாள்வதில் மிகவும் எளிய வழியை எடுத்துக்கொள்கிறான். எனவே சற்று கடினமான, இயற்கைக்கு நட்பான, வழியைத் தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும். அதற்கான தீர்வையும் கார்சன் அளித்துள்ளார். முதலில் இயற்கை சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் இருக்கவேண்டும். இரண்டாவதாக பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு மாற்று வழியை தேட வேண்டும். நட்புறவான சூழலோடு அணுக வேண்டும். மனிதனுடைய செயல்கள் சுற்றுச்சழலில் மிகவும் முக்கியமான ஒன்று.

இயற்கையை கட்டுப்படுத்த நினைத்தால், இயற்கையானது போர் செய்ய ஆரம்பிக்கும்.

🔊 Listen to this ஒவ்வொரு நாளும் பல உயிர்களை உயிர்ப்பித்துக் கொண்டும், உருவாக்கி கொண்டும் இருப்பது மண்தான். மண்ணோடு மனித வாழ்வும், முடிவும் நெருங்கிய தொடர்புடையது. எனவே மண்ணையும் மண்ணின் வளங்களையும் பாதுகாப்பது நம்முடைய கடமை. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ரேச்சல் கார்சன் எழுதிய `Silent spring’ (மௌன வசந்தம்) எனும் நூலிலிருந்து மனிதனின் கண்டுபிடிப்பு எப்படி மனிதனுக்கே எதிராக மாறியது என்பதைப் பார்ப்போம்.…

🔊 Listen to this ஒவ்வொரு நாளும் பல உயிர்களை உயிர்ப்பித்துக் கொண்டும், உருவாக்கி கொண்டும் இருப்பது மண்தான். மண்ணோடு மனித வாழ்வும், முடிவும் நெருங்கிய தொடர்புடையது. எனவே மண்ணையும் மண்ணின் வளங்களையும் பாதுகாப்பது நம்முடைய கடமை. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ரேச்சல் கார்சன் எழுதிய `Silent spring’ (மௌன வசந்தம்) எனும் நூலிலிருந்து மனிதனின் கண்டுபிடிப்பு எப்படி மனிதனுக்கே எதிராக மாறியது என்பதைப் பார்ப்போம்.…