உத்தர் அரசியல்: காங்கிரஸ் ஆட்சியில் உள்குத்து, வெளிக்குத்து அட்ராசிட்டிஸ் | மினி தொடர்|பாகம் – 2

  • 4

காங்கிரஸ் கோலோச்சிய காலம் (1951 – 1976)

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காங்கிரஸின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. 1951 – 52 ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் வெற்றிகளை காங்கிரஸ் பெற்றது. 430 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 1951-ல் தேர்தல் நடைபெற்றது. அதில், 388 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க-வுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் அமைப்பாக இருந்த பாரதிய ஜன சங்கம், 1951 தேர்தலில் பங்கு பெற்றது. அது, 211 இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

கோவிந்த் வல்லப பந்த்

உ.பி-யில் சோசலிசம்?!

1951 தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி 20 தொகுதிகளில் ஜெயித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பழைமைவாதம் ஆழமாக வேரூன்றிய உத்தரப்பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தில், ‘சோசலிஸ்ட் கட்சி’, ‘புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி’, ‘பிரஜா சோசலிஸ்ட் கட்சி’, ‘சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி’ என்று சொசலிஸ்ட் என்கிற சொல்லைத் தாங்கிய பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டதும், சில இடங்களில் வெற்றியைப் பெற்றதும் இன்றைய தலைமுறைக்கு வியப்பான செய்தியே.

‘சோசலிஸ்ட்’ என்ற பெயர் கொண்ட ஒரு கட்சி உ.பி-யில் நான்கு முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. அதுதான், சமாஜ்வாதி கட்சி. ‘சமாஜ்வாதி’ என்ற இந்தி வார்த்தைக்கு சோசலிஸ்ட் என்று பொருள். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ்வை ‘சோசலிஸ்ட் தலைவர்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.

“ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கைகளுடன் சமத்துவக் கோட்பாடு கொண்ட சோசலிச சமூகத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்ட கட்சி” என்பதைத் தன் கொள்கையாகப் பிரகடனம் செய்துள்ள சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முதலாயம் சிங் யாதவ். அப்படிப்பட்டவர், 33 சதவிகித பெண்கள் இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்கிறார். சோசலிஸ்ட் தலைவரே இப்படியென்றால், அந்த மாநிலத்தில் பிற சித்தாந்தங்களைக் கொண்ட அரசியல்வாதிகளின் சிந்தனைகளும், செயல்பாடுகள் எப்படி இருக்கும்? இருக்கட்டும். 1951-ல், உ.பி-யின் முதல் முதலமைச்சர் யார் என்பதைப் பார்ப்போம்.

பாதியில் சென்ற வல்லப பந்த்!

1951-ல் உ.பி-யின் முதலாவது முதலமைச்சராக பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் பதவியேற்றார். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, வல்லபபாய் படேல் ஆகியோருடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரான இவர், இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவர வேண்டும் என்று பிரயத்தனம் செய்து, அதில் தோல்வியடைந்தவர்.

சம்பூர்னானந்த்

சமஸ்கிருத பண்டிதர் வந்தார்!

முதல்வர் பதவிக்காலம் முழுமையடைவதற்கு முன்பாகவே அவரை டெல்லி அழைத்தது. அவர், 1954-ல் மத்திய உள்துறை அமைச்சராகிவிட்டார். அதனால், உ.பி முதல்வர் பதவி காலியானது. அந்த இடத்துக்கு வாரணாசியைச் சேர்ந்த சமஸ்கிருதப் பண்டிதரான சம்பூர்னானந்த் வந்தார்.

1957-ம் ஆண்டு, இரண்டாவது சட்டமன்றத் தேர்தலை உத்தரப்பிரதேசம் சந்தித்தது. அதில், 286 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 44 இடங்களுடன் பிரஜா சோசலிஸ்ட் கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 243 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜன சங்கம், 17 தொகுதிகளில் ஜெயித்தது. சம்பூர்னானந்த் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். அடுத்த மூன்று ஆண்டுகளில், அவரது ஆட்சிக்கு தலைவலி ஏற்பட்டது.

முதல் பெண் முதல்வர்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமலாபதி திரிபாதியுடன் மோதல் ஏற்பட்டு, 1960-ல் முதல்வர் பதவியிலிருந்து சம்பூர்னானந்த் விலகினார். அவருக்குப் பிறகு, 1952-ல் பாரதிய ஜன சங்க வேட்பாளரை லக்னோ தொகுதியில் தோற்கடித்த சந்திர பானு குப்தா, உ.பி முதல்வரானார்.

சுசெதா கிரிபாலனி

சுசெதா கிரிபாலனி!

சந்திரபானு குப்தாவால் சுமார் இரண்டு ஆண்டுகள்தான் முதல்வராக நீடிக்க முடிந்தது. 1963-ம் ஆண்டு சுசெதா கிரிபாலனி முதல்வர் ஆனார். இவர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த ஜே.பி.கிரிபாலியின் மனைவி. இவர்தான், உ.பி-யின் முதல் பெண் முதல்வர். சுமார் மூன்றரை ஆண்டுகள் அவர் முதல்வராக இருந்தார்.

காங்கிரஸ் அல்லாத காலம்!

1967-ல் நான்காவது சட்டமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸின் சரிவு பளிச்சென்று தெரிந்தது. இந்தத் தேர்தலில், 199 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. 1951-ல் வெறும் 2 இடங்களைப் பிடித்த பாரதிய ஜன சங்கம், இந்த முறை 98 இடங்களைப் பிடித்து பெரிய வளர்ச்சியைக் கண்டிருந்தது. அந்த நேரத்தில், ஜாட் தலைவரான சௌத்ரி சரண் சிங் காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்று பாரதிய கிராந்தி தளம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். ‘கிராந்தி’ என்ற இந்தி பதத்துக்கு ‘புரட்சி’ என்று பொருள்.

சௌத்ரி சரண் சிங்

சரண் சிங் முதல்வரானார்!

1967 தேர்தலில்199 இடங்களை மட்டுமே பெற்றதால், ஆட்சியமைக்கும் அளவுக்கு காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை. அப்படியான சூழலில், சோசலிஸ்ட் தலைவர்களான ராம் மனோகர் லோஹியா, ராம் நரேன் மற்றும் பாரதிய ஜன சங் தலைவரான நானாஜி தேஷ்முக் ஆகியோரின் ஆதரவுடன் சௌத்ரி சரண் சிங் முதல்வரானார். இவரின் மகன் தான் ராஷ்டிரிய லோக் தள நிறுவனரான அஜித் சிங். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அஜித் சிங் உயிரிழந்த பிறகு, அவரின் மகன் ஜெயந்த் சௌத்ரி ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவராக இருக்கிறார். தற்போது, சமாஜ்வாதி கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் கூட்டணி வைத்துள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்ற சௌத்ரி சரண் சிங்குக்கு, ஆட்சியில் பல நெருக்கடிகள். அரசுக்கான ஆதரவை சில கட்சிகள் விலக்கிக்கொண்டதால், ஓர் ஆண்டிலேயே (1968, பிப்ரவரி) முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு அவர் ஆளானார். அங்கு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Also Read: உத்தர் அரசியல்: வெல்லப்போவது யோகியா… அகிலேஷா?! – மினி தொடர் | பகுதி 1

மீண்டும் காங்கிரஸ்!

1969 சட்டமன்றத் தேர்தலில் 211 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியமைத்தது காங்கிரஸ். அந்தத் தேர்தலில், பாரதிய கிராந்தி தளம் 98 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 80 தொகுதிகளிலும், சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி 33 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பாரதிய ஜன சங்கம் 33 இடங்களையும் இந்து மகா சபா ஓர் இடத்தையும் பிடித்தன.

சம்பூர்னானந்த் பதவி விலகியதன் காரணமாக, சந்திரபானு குப்தா (1960-ல் முதல்வர்) இரண்டாவது முறையாக முதல்வரானார். அடுத்த ஓராண்டில் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதால், சந்திரபானு குப்தா பதவி விலகினார். அதையடுத்து, இந்திரா காந்தியின் இந்திய தேசிய காங்கிரஸ் (ஆர்) உதவியுடன், 1970 பிப்ரவரியில் சௌத்ரி சரண் சிங் மீண்டும் முதல்வரானார்.

சந்திரபானு குப்தா

கட்சி தாவிய காங். எம்.எல்.ஏ-க்கள்!

பதவியேற்ற சில மாதங்களிலேயே சௌத்ரி சரண் சிங்குக்கு சோதனை ஆரம்பமானது. இந்திய தேசிய காங்கிரஸ் (ஆர்) கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்களைப் பதவி விலகச் சொன்னார், சௌத்ரி சரண் சிங். அவர்கள், முடியாது என்றார்கள். உடனே, ‘அந்த 14 பேரையும் டிஸ்மிஸ் செய்யுங்கள்’ என்று ஆஞநர் பி.கோபால ரெட்டியிடம் கூறினார் சௌத்ரி சரண் சிங். அப்போது சௌத்ரி சரண் சிங்குக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆளுநரோ, ‘நீங்கள் ராஜினாமா செய்யுங்கள்’ என்று சௌத்ரி சரண் சிங்கிடம் கூறினார். பிறகு என்ன? குயடிரசுத் தலைவர் ஆட்சிதான்.

1967-ல், அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு. பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். குறைந்த எண்ணிக்கையில் வெற்றிபெற்ற மாநிலங்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வேறு கட்சிகளுக்குத் தாவினர். காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாமல்போன மாநிலங்களில்…. பாரதிய கிராந்தி தளம், சம்யுக்தா சோசலிச கட்சி, பிராஜா சோசலிச கட்சி, ஜன சங்கம் ஆகியவை இணைந்து உருவாக்கியிருந்த ‘சம்யுக்தா விதயக் தளம்’ (எஸ்.வி.டி) என்ற அமைப்பு ஆட்சியமைத்தது.

இந்திரா காந்தி

1974-ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அதற்கு பிறகு, ஆட்சிக் கலைப்பு,.. குடியரசுத் தலைவர் ஆட்சி… எமர்ஜென்சி… ஜனதா அரசு என பரபரப்பான காட்சிகளை உத்தரப்பிரதேசம் கண்டது. அவற்றையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(உத்தர் அரசியல்… அலசுவோம்)

AIARA

🔊 Listen to this காங்கிரஸ் கோலோச்சிய காலம் (1951 – 1976) சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காங்கிரஸின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. 1951 – 52 ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் வெற்றிகளை காங்கிரஸ் பெற்றது. 430 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 1951-ல் தேர்தல் நடைபெற்றது. அதில், 388 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க-வுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் அமைப்பாக இருந்த பாரதிய ஜன சங்கம், 1951 தேர்தலில் பங்கு பெற்றது. அது,…

AIARA

🔊 Listen to this காங்கிரஸ் கோலோச்சிய காலம் (1951 – 1976) சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காங்கிரஸின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. 1951 – 52 ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் வெற்றிகளை காங்கிரஸ் பெற்றது. 430 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 1951-ல் தேர்தல் நடைபெற்றது. அதில், 388 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க-வுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் அமைப்பாக இருந்த பாரதிய ஜன சங்கம், 1951 தேர்தலில் பங்கு பெற்றது. அது,…

Leave a Reply

Your email address will not be published.