`ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் குளறுபடியா?!’ – கல்வித்துறை சர்ச்சையும் விளக்கமும்

  • 4

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு சீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட துறைகளில் ஒன்று கல்வித்துறை. காரணம் கடந்த பத்து ஆண்டுகளாக அந்த துறையில் நடைப்பெற்று வந்த நிர்வாக குளறுபடிகள் அப்படி. வருகைப் பதிவேடு தொடங்கி பணிமாறுதல் கலந்தாய்வு வரை அனைத்திலும் குழப்பங்கள். மாணவர் சேர்க்கை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, வரவு செலவு மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றை கணினி மயமாக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறையால் துவங்கப்பட்டதுதான் எமிஸ் (EMIS – Educational Management Information System) என்று சொல்லக் கூடிய கல்வி மேலாண்மை தகவல் மையம். கல்வித்துறையின் கீழ் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் பள்ளிகள், வகுப்பு விபரங்கள் போன்றவை இந்த தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. தற்போது ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும் இந்த தளத்தில்தான் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

EMIS – கல்வி மேலாண்மை தகவல் மையம்

அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி முடிக்கப்படும் என்று அறிவித்தது கல்வித்துறை. ஆனால் EMIS தளத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் விண்ணப்பம் பெறும் தேதி ஜனவரி 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஜனவரி 24-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வரை பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் இருக்கும் குளறுபடிகளை பட்டியலிடுகிறார்கள் ஆசிரியர்கள்.

தனது பெயரை குறிப்பிட வேண்டாமென்று நம்மிடம் பேசிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், “தினமும் காலையில் பள்ளி தொடங்கியதும் மாணவர்களுக்கு வருகைப் பதிவேட்டில் அட்டண்டென்ஸ் எடுத்து முடித்ததும், ஆன்லைனிலும் அட்டண்டென்ஸ் எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அட்டண்டென்சிலும் இதுதான் நடைமுறை. சிக்கலே இங்கதான் ஆரம்பிக்குது. ஆசிரியர்கள், மாணவர்கள் ரெண்டு பேரோட அட்டண்டென்ஸையும் காலைல 9 மணியில இருந்து 9.30-க்குள்ள க்ளோஸ் பண்ணிடனும்னு சொல்றாங்க. அந்த அரைமணி நேரத்துல தமிழ்நாட்டுல இருக்கற அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் எல்லாமே ஆன்லைன்லதான் இருக்கும்.

ஒரே நேரத்துல அத்தனை பள்ளிகளோட என்ட்ரியையும் தாங்குற திறன் கல்வித்துறையோட சர்வருக்கு இல்லை. அதனால அந்த நேரத்துல EMIS போர்ட்டல் ’ஹேங்க்’ ஆகி குறிப்பிட்ட நேரத்துக்குள்ள அட்டன்டென்சை குளோஸ் பண்ண முடியாம போயிடும். பல பள்ளிகள்ல இன்னும் இன்டர்நெட் கனெக்‌ஷனே கொடுக்காம இருக்காங்க. சில இடத்துல கனெக்‌ஷன் இருந்தாலும் சிக்னல் கிடைக்கல. நடைமுறையில் இருக்கற இந்த சிக்கல்களை புரிஞ்சுக்காமலும், அதனை சரி பண்ணாமலும் ஏன் அட்டண்டென்ஸ் வைக்கலனு அதிகாரிங்க எங்களை மிரட்டுறாங்க. அதேபோல பள்ளி நிதியில் இருந்து செலவுக்கு பணம் எடுத்தால் அதை உடனே EMIS-ல பதிவு பண்ணனும்னு சொல்றாங்க. அது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னைக்கு தேதியை போட்டு நான் பணத்தை எடுத்துட்டா ரெண்டே நாள்ல அதுக்கான பில்லை ஏத்திடனும். அதுவும் ஜி.எஸ்.டி பில்லா இருக்கனும்னு சொல்றாங்க. எல்லா வேலைகளுக்கும் எப்படி ரெண்டே நாள்ல பில்லை கொடுக்க முடியும் ? இந்த செலவு கணக்கை என்ட்ரி பண்றது எப்படினு இதுவரைக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியை குடுக்கல” என்றார் விரக்தியுடன்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பணிமாறுதல் கலந்தாய்வில் இருக்கும் குழப்பங்கள் குறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர் ஒருவர், “ஆசிரியர்களின் ஆன்லைன் பணி மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் தொடர்பா 12 டிசம்பர் 2020 அன்று தமிழக அரசு அரசாணை எண்:176-ஐ வெளியிட்டது. அந்த அரசாணைப்படி 30 டிசம்பர் 2021 அன்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட கலந்தாய்வு அட்டவணையில், மறுநாள் 2021 டிசம்பர் 31-ம் தேதில இருந்து EMIS-ல் ஆசிரியர்களே நேரடியா அப்ளை பண்ணனும், 2022 ஜனவரி 7-ம் தேதிக்குள் அதனை முடிக்கனும்னும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அப்ளிகேஷனை நாங்களே ஏத்துறதுக்கான வசதி EMIS-ல இல்லை. பள்ளிக் கல்வித்துறை ஆணையரோட அந்த அறிவிப்பு எங்களுக்கு துறை மூலமா வரல. ஏதொவொரு வாட்ஸ்-அப் குழு மூலம்தான் தெரிஞ்சிக்கிட்டோம்.

அதை எப்படி அப்லோட் செய்யனும்னு எங்களுக்கு பயிற்சி குடுக்கலங்கறது ஒருபக்கம் இருந்தாலும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குக் கூட அதைப்பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால வேற வழியில்லாம சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் EMIS-ஐ தொடர்பு கொண்டு பிரச்னைகளைக் கூறியதையடுத்து, ஜனவரி 5-ஆம் தேதி மதியம் பதிவேற்றும் வசதி தரப்பட்டது. அதுக்கப்புறம்தான் குளறுபடிகள் இன்னும் அதிகமாச்சி. யாருக்கு யார் ஒப்புதல் தருவது என்பதில் தொடங்கி குழப்பங்கள் ஒன்னு ஒன்னா வந்ததால இறுதிக் காலக்கெடுவை தாண்டி ஜனவரி 12-ம் தேதி வரைக்கும் குளறுபடிகளோட அப்லோட் பண்ணி முடிச்சாங்க. இந்த ஆன்லைன் மாறுதல் கலந்தாய்வு புதுசு கிடையாது. கடந்த பத்து வருஷமா நடைமுறையில் இருக்கறதுதான். ஆனால் எங்ககிட்ட இருந்து அப்ளிகேஷன்களை வாங்கி மாவட்ட அளவில் அதிகாரிகள் ஆன்லைன்ல பதிவு செய்வாங்க. இப்போ ஆசிரியர்களே நேரடியா பதிவு பண்ணனும்னு சொல்றாங்க. அது மட்டும்தான் புதிய நடைமுறை. அதனால் வசூல் வேட்டை நடத்துவதற்காக வேண்டுமென்றே இந்தக் குளறுபடிகளை ஏற்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறோம்.

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

சில இடங்களில் 5 லட்சம் ரூபாய் வரை பேரமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாடே கொரோனா புதிய அலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை ஒரே இடத்துல கூட்டி, கொரோனா விதிகளை மீறி பயிற்சியை நடத்திக்கிட்டுருக்கு கல்வித்துறை.

ஒன்றரை வருஷமா முடிக் கிடந்த பள்ளிகளை திறந்ததும், மாணவர்களுக்கு கலைத்திட்ட கற்பித்தலை போதிக்காமல் புத்தாக்கப் பயிற்சிகள் நடத்துங்கள் என்று கல்வித்துறை கூறியிருந்ததால் ஆசிரியர்களும் அப்படியே செஞ்சாங்க. ஆனால் பள்ளிகள் தொடங்கிய மூனே வாரத்துல மாணவர்களின் கற்றல் அடைவைச் சோதிக்க மண்டல அளவிலான ஆய்வுகளை நடத்தியது கல்வித்துறை. கலைத்திட்டக் கற்பித்தலே நடைபெறாத அந்த மூன்று வாரத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மாணவர்களுக்கான கற்றல் அடைவை ஆசிரியர்கள் சரியாகப் போதிக்கவில்லை என்று சொன்ன கல்வித்துறை, இப்போ ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவு பயிற்சிகளை வழங்குகிறோம்னு சொல்வது வேடிக்கையாக இருக்கு.

நடத்தாத பாடத்தில் கற்றல் அடைவை எப்படி சோதித்தார்கள் என்பது கல்வித்துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம். வகுப்புக்கு 20 மாணவர் என்ற விகிதத்தில் சூழற்சி முறையில் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. ஆனால் கொரோனா பரவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறி மாணவர்களின் அந்த நேரடி வகுப்புகளை நிறுத்திய அரசு, தற்போது இல்லம் தேடிக் கல்வி என்ற பெயரில் அதே மாணவர்களை அதே பள்ளியில் அமரவைக்கும் கூத்தை என்னவென்று சொல்வது? அதேபோல தமிழுக்கும் தமிழ் வழிக் கற்றலுக்கும் முக்கியத்துவம் தரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசில் வெளியிடப்பட்ட அரசாணை எண்:176-ல் ஒரு வார்த்தை கூட தமிழில் இல்லை. அரசு நிர்வாகத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டை உறுதிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட தமிழ் வளர்ச்சித் துறை இருக்கிறதா என்று தெரியவில்லை. களநிலவரத்தை உணர்ந்துகொள்ள முடியாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கல்வித்துறையின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சென்றதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம்” என்று நொந்துகொள்கிறார்.

Also Read: சர்ச்சை வீடியோ: `பணியிட மாறுதலுக்கு 5 லட்சம் ரூபாய்?’ – மறுக்கும் திமுக பிரமுகர்!

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தற்போதைய நிலவரப்படி. அனைவரும் EMIS-ஐ பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்டர்நெட் கனெக்ஷன் இல்லை என்று கூறும் இடங்களில் அந்த வசதியை செய்து கொடுத்து வருகிறோம். எங்கெல்லாம் அந்த குறைபாடுகள் இருக்கிறதோ அதை கண்டறிந்து சரி செய்து EMIS ல் 100% துல்லியத்தை கொண்டு வரும் பணிகளை செய்து வருகிறோம். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முக்கிய நோக்கம். ஒரு லட்சம் யூனிட்டில் இல்லம் தேடிக் கல்வி செயல்படுகிறது. ஒரு பள்ளி வளாகத்தில் 1000 மாணவர்கள் அமர்ந்து, படிப்பதற்கும் ஒரு லட்சம் இடத்தில் 12, 15 பேர் அமர்ந்து படிப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது. அதனால் அந்த விஷயத்தில் யாரும் பயப்பட தேவையில்லை.

பணியிடை மாறுதல் விவகாரத்தில் விகடன் மூலமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கும்படி முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதில் முக்கியமானது ஆசிரியர்களின் பணியிடை மாறுதல். மாறுதல் கலந்தாய்வில் 100% தகுதியின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும். அதனால் யாரும் எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும்னு சொல்லி பணம் கேட்பவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

AIARA

🔊 Listen to this தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு சீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட துறைகளில் ஒன்று கல்வித்துறை. காரணம் கடந்த பத்து ஆண்டுகளாக அந்த துறையில் நடைப்பெற்று வந்த நிர்வாக குளறுபடிகள் அப்படி. வருகைப் பதிவேடு தொடங்கி பணிமாறுதல் கலந்தாய்வு வரை அனைத்திலும் குழப்பங்கள். மாணவர் சேர்க்கை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, வரவு செலவு மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றை கணினி மயமாக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறையால் துவங்கப்பட்டதுதான்…

AIARA

🔊 Listen to this தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு சீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட துறைகளில் ஒன்று கல்வித்துறை. காரணம் கடந்த பத்து ஆண்டுகளாக அந்த துறையில் நடைப்பெற்று வந்த நிர்வாக குளறுபடிகள் அப்படி. வருகைப் பதிவேடு தொடங்கி பணிமாறுதல் கலந்தாய்வு வரை அனைத்திலும் குழப்பங்கள். மாணவர் சேர்க்கை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, வரவு செலவு மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றை கணினி மயமாக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறையால் துவங்கப்பட்டதுதான்…

Leave a Reply

Your email address will not be published.