“அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் ஜல்லிக்கட்டா?” – குளறுபடிகளால் கொதிக்கும் மதுரை மக்கள்

  • 7

பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வாடிவாசலுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த காளைகளையும், அதன் உரிமையாளர்களையும் பெரிய கழியால் ஒருவர் சுற்றி சுற்றி தாக்குவதும், அதனால் அலறியபடி காளைகளும் ஆட்களும் சிதறி ஓடுகின்ற வீடியோவும், காவல்துறையினர் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களைத் தாக்குகிற வீடியோவும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாலமேட்டில் தாக்குதல் சம்பவம்

இது மட்டுமல்லாமல், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களையும், மாடு வளர்ப்போரையும், பார்வையாளர்களையும் காவல்துறையினர் பலமுறை தடியடி நடத்தி துரத்தியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“ஜல்லிக்கட்டில் வெளையாட லட்சக்கணக்கில் செலவு செய்து காளைகளை வாங்கி வளர்த்து, ஓய்வில்லாமல் பராமரிச்சு தயார்படுத்தி இங்கு கொண்டு வந்தால், உள்ளூர் ஆட்களின் தாக்குதல் ஒருபக்கமென்றால், அதிகாரிகளின் மோசமான வசவுகளையும், போலீஸிடம் அடியும் வாங்குவது எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எந்த வெளையாட்டு போட்டியிலாவது பங்கெடுப்பவர்களை இந்த மாதிரி கேவலமாக நடத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? நாங்களும் படித்தவர்கள்தான், பல்வேறு தொழில்களைச் செய்து கௌரவமாக வாழ்கிறவர்கள்தான். ஆனால், எங்களை ஜல்லிக்கட்டு நடத்துறவங்களும், கண்காணிக்கிற அரசு அதிகாரிகள், காவல்துறையினரும் போக்கிரிகளைப் போல நடத்துகிறார்கள். நாங்கள் எதிர்த்து பேசினால் எங்கள் காளைகளை அனுமதிக்க மாட்டார்கள், பொய் வழக்கு போடுவார்கள், இந்த ஜல்லிக்கட்டு மீதான பிரியத்தால் அனைத்தையும் பொறுத்துப் போகிறோம்” என்று கொதிப்புடன் பேசுகிறார்கள் மாடு வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. சங்க காலம் தொட்டு மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் நாள்களில் ஜல்லிக்கட்டு நடப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் மிகவும் புகழ் பெற்றவை.

ஆரம்ப காலத்தில் முறையான கட்டுப்பாடுகள் இல்லாமல், இஷ்டத்துக்கு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகள், கால மாற்றத்தில் முறைப்படுத்தப்பட்டது. சில வருடங்களுக்கு முன் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது, தமிழகமே ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தில் குதித்தது. அதன் விளைவால் தமிழக அரசு சிறப்பு அரசாணை பிறப்பித்து, பின்னர் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின் ஜல்லிக்கட்டே அறியாத நடத்தாத மாவட்ட மக்களும் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தனர். பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், இளைய தலைமுறையினர் விரும்பும் பண்பாட்டு விளையாட்டாக மாறிவிட்டது.

அதே நேரம், ஜல்லிக்கட்டு நடக்கும்போதெல்லாம் மாடு வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு நடக்கிற ஊர் மக்களும், தாங்கள் மிகவும் புறக்கணிக்கப்படுவதாகவும், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாகவும் ஒவ்வொரு முறையும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டும் ஏகப்பட்ட புகார்கள் கிளம்பியுள்ளன.

அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், “ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஒட்டுமொத்த தமிழக மக்களும் போராடியதன் விளைவால் இன்றைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் மகிழ்ச்சியாக நடத்தப்படுகின்றன. அதிலும் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு விஷயங்கள் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால், அப்படி போராடி மீட்ட மக்களால் ஜல்லிக்கட்டை மகிழ்ச்சியாக நேரில் பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்கள் அதிகாரிகள், காவல்துறையினர் இவர்களுக்காக நடத்தும் விழாவாக மாறிவிட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Also Read: ஜல்லிக்கட்டு: காளைகளின் களமான பாலமேடு; அதிக காளைகளைப் பிடித்து இளைஞர் பிரபாகரன் முதலிடம்!

அ.தி.மு.க ஆட்சியில அந்தக் கட்சி அமைச்சர்கள், நிர்வாகிகளும், தி.மு.க ஆட்சியில இப்பவுள்ள அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், கட்சிக்கார்கள்னு அவங்க கட்டுப்பாட்டில் விழா நடக்குது. ஜல்லிக்கட்டு பார்க்க வரும் மக்களை ஏதோ சட்டவிரோத செயலுக்கு வந்தவர்கள் போல போலீஸ் பார்க்கிறது. என்னன்னு தெரியல, ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தப்ப தூக்குன லத்திய, போலீஸு இப்பவும் கீழே போடல, அவங்களுக்கு ஆத்திரம் வந்திருச்சுன்னா ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவங்க மேல லத்தியால் விளையாட ஆரம்பிச்சுடுறாங்க” என்றனர்.

பாலமேட்டில் தன் காளையைப் பிடித்த வீரரை மாட்டுக்காரர் தாக்கிய சம்பவமும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை தடியடி நடத்தியதில் வீரர்களும், மாட்டு உரிமையாளர்களும் தாக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்கள் சிலர், “ஜல்லிக்கட்டு நடத்துற ஊருல இருக்குறோமுனுதான் பேரு. சொந்த பந்தத்தை அழைச்சிட்டு வந்து வெளையாட்ட காட்ட முடியல. அதுவும் கொரோனா கட்டுப்பாடுன்னு மக்களை முன்பக்க கேலரியில அனுமதிக்கல. ஆனா, ஆபீஸருங்க, கட்சிக்காரங்க மட்டும் வசதியா உக்காந்து ஜல்லிக்கட்ட ரசிக்கிறாங்க. எங்களை பக்கத்துலயே விடல. உள்ளூர்ல நடக்குற போட்டியை டிவிலதான் பார்க்க வேண்டியதா போச்சு. ஜல்லிக்கட்டு போராட்டம் இங்க நடந்தப்ப காலேஜ் புள்ளைங்களும், வெளியூர்காரங்களும் வந்து போராடுனாங்க. நாங்களும் அவங்களோட சேர்ந்து போராடுனோம். அப்ப போலீஸ்காரவுகதான் எல்லோரையும் அடிச்சு விரட்டுனாக. இன்னைக்கு அதே போலீஸ்காரங்கதான் குடும்பம் குடும்பமா வந்து ஜல்லிக்கட்ட நிம்மதியா பார்க்குறாக, மறுபடியும் எங்கள அடிச்சு விரட்டுறாக” என்று பொங்கித் தீர்த்தார்கள்.

கார்களில் வந்திறங்கும் விஐபி குடும்பத்தினர்.

Also Read: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா – சிறப்புப் புகைப்படங்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அங்குள்ள கமிட்டியினருக்குள் கோஷ்டிப் பிரச்னை இருந்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே தலைமையேற்று நடத்தியது. ஆனால், அதிகாரிகள் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்ததால் அவனியாபுரம் மக்கள் கொந்தளித்தனர்.

அங்கு வசிக்கும் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி செய்தியாளர்களை அழைத்து, “இவ்வளவு கெடுபிடியுடன் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு பதில் நடத்தாமலயே இருந்திருக்கலாம். 150 பேருக்கு மட்டும் அனுமதி என்கிறார்கள். இது எப்படி சாத்தியம், 150 பேர்களை எப்படி தேர்வு செய்வார்கள்? அதிகாரிகள் மட்டும் கண்டுகளிக்கவா? வீட்டு மாடியில் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று வாடிவாசலுக்கு அருகிலுள்ள வீட்டுக்காரர்களிடம் காவல்துறையினர் எச்சரித்தனர்.

வேல ராம மூர்த்தி

தமிழர்களின் கலாசார அடையாளமான ஜல்லிக்கட்டை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவது சரியாக இருக்குமா? இதற்கு அரசு ஜல்லிக்கட்டை நடத்தாமலே இருக்கலாம்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

“நெதமும் ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சு, புள்ளைய வளர்க்கிற மாதிரி மாட்டை வளர்க்குறோம். ஆனா, ஜல்லிக்கட்டுக்கு வந்தா எங்கள புழு பூச்சி மாதிரி நடத்துறாங்க. விழா கமிட்டின்னு சொல்லிக்கிறவங்க ஆள் பார்த்து நடந்துக்கிறாங்க. மாடு புடிச்சவங்களுக்கும், பிடிபடாத மாட்டுக்காரங்களுக்கும் பரிசு கொடுப்பதில் பாரபட்சம் நடக்குது. உள்ளூர் வீரர், உள்ளூர் மாடுகளுக்கு ஒரு நியாயம், வெளியூர் வீரர், வெளியூர் மாடுகளுக்கு ஒரு நியாயம்னு நடந்துக்கிறாங்க

பாலமேட்டுல முதல் பரிசு கொடுக்க வேண்டிய வீரருக்கு ஆரம்பத்தில் அறிவித்த கார் பரிசை கடைசியில மாற்றி, பைக்னு அறிவிக்கிறாங்க. அதே நேரம் முதலிடம் வந்த மாட்டுக்கு மட்டும் கார் பரிசு கொடுக்குறாங்க. இதுக்குள்ள பல விஷயங்கள் அடங்கியிருக்கு. அதுமட்டுமல்லாமல் மாடுகளையும், வீரர்களையும் ஆன்லைன்ல பதிவு செய்யணும்னு சொன்னாலும், அமைச்சர், அதிகாரிங்க மனசு வச்சாதான் டோக்கன் கிடைக்கிற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. அலங்காநல்லூர்ல முதல் பரிசு பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக்குக்கு கடைசி நேரத்துலதான் அனுமதி கிடைச்சதுன்னா பார்த்துக்கங்க. ஒருவேளை அவருக்கு அனுமதி கிடைக்கலைன்னா, சிறந்த வீரர் இருப்பது தெரியாமல் போயிருக்கும்” என்றவர்கள் தொடர்ந்து,

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Also Read: 665 காளைகள் சீறிப்பாய்ந்த வன்னியன் விடுதி கிராம ஜல்லிக்கட்டு… 13 காளைகளை அடக்கிய இளைஞர்!

“பல்வேறு நிறுவனங்கள் தங்கக் காசு முதல், சைக்கிள், எலெக்ட்ரானிக் பொருள்கள், பைக், காருன்னு ஸ்பான்சர் பண்ணினாலும், பரிசுகளை வழங்குவதில் பல முறைகேடுகள் நடக்குது. எவ்வளவு ஸ்பான்சர்கள் எவ்வளவு பரிசுகள் வழங்கினாங்க என்பதற்கு எந்த கணக்கும் கிடையாது. அது மட்டுமல்லாமல் காளைகளை விடும்போது, அரசியல் கட்சிக்காரங்க இடையில புகுந்து கட்சித்தலைவர்கள் பெயர்களில் காளைகளை அறிவிக்கிறாங்க. இது அந்தத் தலைவர்களுக்கே தெரியாது. இதனால அந்தக் காளைகளைப் பிடிக்கலாமா பிடிக்கக்கூடாதா என்பதில் வீரர்களுக்கு குழப்பம் ஏற்படுது. அரசியல் தலைவர்கள் பெயர்களில் விடப்படும் காளைகளை பிடிக்கக் கூடாது என சிலர் மறைமுகமாக உத்தரவிடுகிறார்கள்” என்றனர்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டித்தலைவர் கோவிந்தனிடம் பேசினோம், “ரொம்ப சிறப்பாகத் திட்டமிட்டு அனைவரும் பாராட்டும் வகையில் போட்டியை நடத்தினோம். வீரர்கள், மாட்டு உரிமையாளர்களுக்கு சிறப்பாக வசதிகள் செய்து கொடுத்தோம். வெற்றி பெற்றவர்கள் கூடுதல் பரிசுகளை எதிர்பார்க்கிறார்கள். இந்த முறை அப்படியில்லாமல் முறையாகப் பரிசுகளை வழங்கினோம். அதுமட்டுமன்றி வெற்றி பெறாத மாடுகளுக்கும், அவிழ்த்து விடப்படாத மாடுகளுக்கும் தங்க காசுகள் வழங்கினோம். கோவிட் கட்டுப்பாடுகளால் 150 பேருக்குதான் அனுமதி என்றாலும், உள்ளுர் மக்கள் பார்ப்பதற்கு அனுமதித்தோம். மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தார்கள். கோவிட் கட்டுப்பாடுகள் போன பின்பு அடுத்த ஆண்டு வெளியூர் மக்களும் வந்து பார்க்கும்படி இன்னும் சிறப்பாக ஜல்லிக்கட்டை நடத்துவோம்” என்றார்.

கலெக்டர் அனீஷ் சேகர்

Also Read: கறார் போலீஸ்… கடுப்பான மாட்டு உரிமையாளர்கள்! – கோவை ஜல்லிக்கட்டு ரிப்போர்ட்

“உள்ளூர் மக்களிடம் காவல்துறையினர் கெடுபிடி காட்டி, வி.ஐ.பி-க்கள் மட்டும் பார்க்கும் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டதாகப் புகார் சொல்கிறார்களே” என்று கலெக்டர் அனீஷ் சேகரிடம் கேட்டோம்.

“கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் அதிகமான மக்களை அனுமதிக்கவில்லை. மற்றபடி சமூக இடைவெளியுடன் மக்கள் வந்து பார்க்க அனுமதித்துள்ளோம். வேறெந்த கெடுபிடியும் இல்லை. சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளோம்” என்றார்.

இந்நிலையில் பாலமேட்டில் மாடுகளையும் வீரர்களையும் தடியால் தாக்கிய சம்பவத்தை விசாரித்த காவல்துறை, சம்பந்தப்பட்ட பவுன் என்பவரை கைது செய்துள்ளது.

“சிலர் மாடுகளை கும்பலாக உள்ளே விட்டதால், என் மாடு காயமடைந்தது. அதனால் ஆத்திரத்தில் கம்பை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது தாக்கினேன். அப்போது தெரியாமல் மற்ற மாடுகள் மீதும் பட்டுவிட்டது. மாடு வளர்க்கும் நான் மாடுகளை துன்புறுத்தும் எண்ணத்தோடு செய்யவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

மாடுகளும் வீரர்களும் இல்லையென்றால் ஜல்லிக்கட்டே இல்லை என்பதை ஆட்சியாளர்களும், மாவட்ட அதிகாரிகளும், ஜல்லிக்கட்டு கமிட்டியும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

AIARA

🔊 Listen to this பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வாடிவாசலுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த காளைகளையும், அதன் உரிமையாளர்களையும் பெரிய கழியால் ஒருவர் சுற்றி சுற்றி தாக்குவதும், அதனால் அலறியபடி காளைகளும் ஆட்களும் சிதறி ஓடுகின்ற வீடியோவும், காவல்துறையினர் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களைத் தாக்குகிற வீடியோவும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாலமேட்டில் தாக்குதல் சம்பவம் இது மட்டுமல்லாமல், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களையும், மாடு வளர்ப்போரையும், பார்வையாளர்களையும் காவல்துறையினர் பலமுறை தடியடி நடத்தி துரத்தியதும் அதிர்ச்சியை…

AIARA

🔊 Listen to this பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வாடிவாசலுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த காளைகளையும், அதன் உரிமையாளர்களையும் பெரிய கழியால் ஒருவர் சுற்றி சுற்றி தாக்குவதும், அதனால் அலறியபடி காளைகளும் ஆட்களும் சிதறி ஓடுகின்ற வீடியோவும், காவல்துறையினர் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களைத் தாக்குகிற வீடியோவும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாலமேட்டில் தாக்குதல் சம்பவம் இது மட்டுமல்லாமல், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களையும், மாடு வளர்ப்போரையும், பார்வையாளர்களையும் காவல்துறையினர் பலமுறை தடியடி நடத்தி துரத்தியதும் அதிர்ச்சியை…

Leave a Reply

Your email address will not be published.