“அமிதாப் பச்சன் வீட்டுச் சுவரை இடிக்க அதிகாரிகள் தயங்குகிறார்கள்!” – காங்கிரஸ் குற்றச்சாட்டு

நடிகர் அமிதாப் பச்சன் வீடு, மும்பை அந்தேரி ஜுகு பகுதியிலிருக்கிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஜூகுவின், தியானேஷ்வர் சாலையோரம் இருந்த வீடுகளின் காம்பவுண்ட் தடுப்புச் சுவர்கள் இடிக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அமிதாப் பச்சன் உட்பட அனைத்துக் கட்டட உரிமையாளர்களுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு கட்டடங்களிலிருந்து தேவையான நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. ஆனால் அமிதாப் பச்சன் மட்டும் சாலை விரிவாக்கத்துக்குத் தனது வீட்டு நிலத்தின் குறிப்பிட்ட பகுதியைக் கொடுக்கவில்லை.

அமிதாப் பச்சன்

மாநகராட்சி அதிகாரிகளும் அந்தக் குறிப்பிட்ட இடத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டு, மற்ற பகுதிகளில் சாலையை விரிவாக்கம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் காங்கிரஸ் கவுன்சிலர் துலிப் மிரண்டா, அமிதாப் பச்சன் வீட்டு நிலம் சாலை விரிவாக்கத்துக்குக் கையகப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், உடனே அந்த நிலத்தைக் கையகப்படுத்தி சாலை விரிவாக்கப் பணியை முடிக்க வேண்டும் என்றும் மாநகராட்சிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளித்த மாநகராட்சி அதிகாரிகள், நிலம் சர்வே செய்யப்பட்டு வழங்கப்பட்டவுடன் தேவையான நிலம் கையகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால், அந்தப் பணியும் நடக்கவில்லை. இதையடுத்து லோக் ஆயுக்தாவில் மிரண்டா இது தொடர்பாகப் புகார் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக மிரண்டா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு லோக் ஆயுக்தாவில் புகார் செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அமிதாப் பச்சனுக்கு மாநகராட்சி சட்டப் பிரிவு 299-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அதற்கு நான்கு ஆண்டுகளாக அமிதாப் பச்சன் பதிலளிக்காமல் இருக்கிறார். இது நியாயமற்றது. விதிகளுக்கு எதிரானது. மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு அமிதாப் பச்சன் வீட்டு நிலத்தைக் கையகப்படுத்தாமல் இருக்கிறது. அருகிலிருக்கும் நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. அமிதாப் பச்சன் வீட்டு நிலம் கையகப்படுத்தப்படாமல் இருப்பதால் சாலை விரிவாக்கப் பணி முடிவடையாமல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

லோக் ஆயுக்தா

இதற்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு லோக் ஆயுக்தா நீதிபதி வி.எம்.கனாடே உத்தரவிட்டிருக்கிறார்.

Also Read: மும்பை: அமிதாப் பச்சன் வீட்டுக்கு வெளியே போராட்டம்! சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தாரா?!

AIARA

🔊 Listen to this நடிகர் அமிதாப் பச்சன் வீடு, மும்பை அந்தேரி ஜுகு பகுதியிலிருக்கிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஜூகுவின், தியானேஷ்வர் சாலையோரம் இருந்த வீடுகளின் காம்பவுண்ட் தடுப்புச் சுவர்கள் இடிக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அமிதாப் பச்சன் உட்பட அனைத்துக் கட்டட உரிமையாளர்களுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு…

AIARA

🔊 Listen to this நடிகர் அமிதாப் பச்சன் வீடு, மும்பை அந்தேரி ஜுகு பகுதியிலிருக்கிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஜூகுவின், தியானேஷ்வர் சாலையோரம் இருந்த வீடுகளின் காம்பவுண்ட் தடுப்புச் சுவர்கள் இடிக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அமிதாப் பச்சன் உட்பட அனைத்துக் கட்டட உரிமையாளர்களுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு…