`அதிகாலையில் பால் வியாபாரம்; பகலில் இலை விற்பனை!’ – சுயதொழிலில் கலக்கும் கரூர் இளைஞர்

  • 6

“படிக்கிற காலத்துல, `நல்லா படிச்சு, கைநிறைய சம்பளம் தர்ற வேலைக்குப் போகணும்’னு நினைச்சேன். அதனால்தான், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு, மூணு வருஷம் வேலை பார்த்தேன். ஆனால், அந்த வேலை என்னை ரோபோ போல மாற்றியது. மன அழுத்தத்தை கொடுத்துச்சு. அதனால், அதை தூக்கிப் போட்டுட்டு, அப்பா செஞ்ச இலை வியாபாரம், பால் ஊத்துற தொழிலுக்கு வந்தேன்.

மாட்டுடன் தயாளன்

முன்னைவிட வருமானமும் அதிகம் கிடைக்குது. எல்லாத்தையும்விட, `எனக்கு ராஜாவாதான் வாழுறேன்’னு மனசுக்கு நிறைவான வாழ்க்கையை வாழ முடியுது” என்று `தன்னிலை விளக்கம்’ கொடுத்து, உற்சாகமாக பேசுகிறார் தயாளன் தங்கராஜ்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை முத்தலாடம்பட்டியைச் சேர்ந்தவர் தயாளன் தங்கராஜ். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்தவர், தற்போது பால் வியாபாரம், தந்தையின் இலை வியாபாரம் என்று சொந்த தொழிலில் கால் ஊன்றி, சாதித்திருக்கிறார். மாட்டில் பால் கறந்துகொண்டிருந்த தயாளன் தங்கராஜை, ஓர் அதிகாலையில் சந்தித்துப் பேசினோம்.

பால் ஊற்றும் தயாளன்

“நான் படிக்கிற காலத்துல, `நல்லா படிச்சு, பெரிய வேலைக்குப் போகணும்’னுதான் நினைச்சேன். இருந்தாலும், வீட்டில் இருந்த மாடுகளை கவனிப்பது, அப்பா செய்து வந்த மொத்த வாழை இலை வியாபாரத்தை விடுமுறை நாட்களில் கவனிப்பதுனு சகல வேலைகளையும் கத்துக்கிட்டேன். வீடு இருக்கும் இடத்தை தவிர, எங்களுக்கு வேறு நிலம் இல்லை. அப்பா, வாழை இலை வியாபாரம் மூலம் சம்பாதித்த ரூ. 20,000-த்தை வச்சுதான் குடும்பம் நகர்ந்துச்சு. இருந்தாலும், கடன உடன வாங்கி என்னை இன்ஜினீயரிங் படிக்க வச்சார். 2016 ல் முடிச்சுட்டு, கோவையில் ஒரு கம்பெனியில, ரூ.12,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். தொடர்ந்து, வெள்ளக்கோயில்ல உள்ள பில்டிங் கன்ட்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, டெல்லி, ஹைதராபாத்னு 2019-ம் வருஷம் வரை வேலை பார்த்தேன். அப்போது, ரூ.30,000 சம்பளம் வாங்கினேன். எனக்கு கீழே 40 பேர் வரை வேலைப் பார்த்தாங்க.

ஆனால், வேலைப் பளு தந்த மன அழுத்தம், யாருக்கோ அடிமையா இருக்கோம்ங்கிற நினைப்பு எல்லாம் சேர்ந்து, எனக்கு பெரும் அயர்ச்சியைக் கொடுத்துச்சு. இதற்கிடையில், 2017-லேயே திருமணம் ஆனுச்சு. 2018 நவம்பர்ல பெண் குழந்தை பிறந்துச்சு. அதோடு, 2019-ம் ஆண்டு எங்க அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டுச்சு. அதனால், `ஊரோடு போய் ஏதாச்சும் தொழில் பண்ணுவோம்’னு வேலையை ரிசைன் பண்ணிட்டு, ஊருக்கு வந்துட்டேன். வீட்டுல கண்டிச்சாங்க. ஆனா, என்னோட உறுதியைப் பார்த்த பிறகு, எனக்கு குறுக்க நிக்கலை. ஆனா, முதல்ல எனக்கு என்ன தொழில் பண்றதுனு பிடிபடலை. `அவசர முடிவு எடுத்துட்டோமோ?’னு மனசு முழுக்க குழப்பம் ஏற்பட்டுச்சு. அதன்பிறகுதான், அப்பா பார்க்கும் தொழிலையே இன்னும் டெவலெப் பண்ணலாம்னு தோணுச்சு.

இலை வெட்டும் தயாளன்

உறவினர்களும், நண்பர்களும், `நல்ல வேலையை விட்டுட்டு, இப்படி வந்து மாட்டிக்க பாக்குறியே’னு சொன்னாங்க. காதுல வாங்கிக்காம, களத்தில் இறங்கினேன். பரமத்தி வேலூர், திம்மாச்சிபுரம், பெட்டவாய்த்தலை, ஈரோடு, குளித்தலைனு வாழை இலைகளை வாங்கி, ஹோட்டல்களுக்கும், திருமண ஆர்டர் மூலமா திருமண மண்டபங்களுக்கும் மொத்தமா இலை கொடுக்கிற தொழில் இது. நான் வந்ததும், ஹோட்டல், கல்யாண மண்டபங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைச்சேன். ஆனால், நான் ஒவ்வொரு ஹோட்டலா போய் கேட்டப்ப, ஆரம்பத்துல சரியான ரெஸ்பான்ஸ் இல்லை.

அப்புறம், தொடர்ந்து முயற்சி பண்ணி, பத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், 4 திருமண மண்டபங்களை கூடுதலா பிடிச்சேன். ஈரோட்டில் இருந்து வாகனத்தில் இலையைக் கொண்டு வந்து கொடுத்திருவாங்க. ஆனா, மத்த ஊர்களுக்கு அப்பா லோடு ஆட்டோவுல போய் முதல்நாள் மாலையே இலைகளை வாங்கிட்டு வந்திருவார். ஒரு ஆளை வேலைக்கு வச்சுருக்கிறோம். அவர் மறுநாள் அதிகாலையில் இருந்து ஹோட்டல், திருமண மண்டபங்களுக்கு அனுப்ப வேண்டிய டிபன் இலை, சாப்பாட்டு இலை, தாபா ஹோட்டல்ல உள்ள பிளேட்டுக்குரிய இலை, தள்ளுவண்டி கடைகளுக்கு தேவையான பிட் இலைகள்னு தேவையான சைஸ்களில் கட் பண்ணிருவார். அதன்பிறகு, நானும், எங்கப்பாவும் மதியம் வரை இலைகளை வண்டியில் கொண்டு போய் ஹோட்டல்களுக்கும், திருமண மண்டபங்களுக்கும் கொடுப்போம்.

மாட்டுடன் தயாளன்

நல்லா உழைச்சதால, மாதம் ரூ. 25,000 லாபம் கிடைக்க ஆரம்பிச்சது. `இந்த வருமானம் பத்தாதே’னு நினைச்சப்ப, பால் வியாபாரமும் பாக்கலாம்னு தோணுச்சு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி, 3 மாடுகளும், 2 கன்னுக்குட்டிகளும் எங்க வீட்டுல இருந்துச்சு. அதுல, இரண்டு மாடுகளில் பால் கறக்க ஆரம்பிச்சேன். அப்புறம், பக்கத்துல உள்ளவங்க வீட்டுல 2 மாடுகளில் பால் கறக்க ஆரம்பிச்சேன். இப்போ, மொத்தமா, 4 மாடுகளில் பால் கறக்குறேன். காலையில் 20 லிட்டர் பாலும், மாலையில் 10 லிட்டர் பாலும் கிடைக்குது. விடியக்காலையிலேயே எழுந்து மாடுகளில் நானே பால் கறந்து, அதை ராயனூர், தான்தோன்றிமலை, ஜீவா நகர்னு கொண்டு போய் வீடு வீடா கொடுப்பேன்.

அதன்பிறகு, காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிட்டுவிட்டு, இலை வியாபாரத்துக்கு போயிருவேன். மாலையில் அதேபோல் பால் கறந்து வீடுகளுக்கு கொடுப்பேன். வேஸ்டாகும் இலை பீஸ்களை எங்க வீட்டு மாடுங்களுக்கு உணவா கொடுத்திருவோம். பால் தொழில்ல எல்லா செலவுகளும் போக மாசம் ரூ.25,000 லாபம் கிடைக்குது. ஆக, பால், வாழை இலை தொழில்கள்ல மாசம் ரூ.50,000 வரை வருமானம் வருது. ஆனா, இலையை ஹோட்டல்ல கொடுக்கும்போதும், பணம் வசூலிக்கும்போதும் சிலர் என்னை கோபப்படுத்திருவாங்க. அப்போது, பேசாம வீட்டுக்கு வந்து, அப்பாகிட்ட சொல்வேன். அவர் போய் அவர்களிடம் டீல் பண்ணிக்குவார்.

பால் ஊற்றும் தயாளன்

Also Read: தேனீ மற்றும் வண்ண மீன்கள் வளர்ப்பு; மாதம் ரூ.80,000 வருமானம்; கலக்கும் கரூர் இளைஞர்!

மத்தபடி, சொந்த ஊர்ல, வாழ்க்கை நினைச்சபடியும், நிம்மதியாகவும் போகுது. அடுத்து, பெரிய அளவில் மாட்டுப்பண்ணை வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதுக்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு பிடிக்க பேசிக்கிட்டு இருக்கிறேன். அதோடு, மண்புழு உரம் மாதிரியான இயற்கை உரங்களை தயாரிக்க இருக்கிறேன். வேஸ்ட்டாகும் வாழை இலைகளை வச்சு, மண்புழு உரம் தயாரிக்க இருக்கிறேன். ஏன்னா, வாழை இலை மக்கி, அதுல வரும் மண்புழு வீரியமா இருக்கும்னு தகவல் படிச்சுருக்கேன். நிச்சயம் பெரும் தொழில் முனைவோராக மாறுவேன்” என்றார்.

முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்!.

AIARA

🔊 Listen to this “படிக்கிற காலத்துல, `நல்லா படிச்சு, கைநிறைய சம்பளம் தர்ற வேலைக்குப் போகணும்’னு நினைச்சேன். அதனால்தான், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு, மூணு வருஷம் வேலை பார்த்தேன். ஆனால், அந்த வேலை என்னை ரோபோ போல மாற்றியது. மன அழுத்தத்தை கொடுத்துச்சு. அதனால், அதை தூக்கிப் போட்டுட்டு, அப்பா செஞ்ச இலை வியாபாரம், பால் ஊத்துற தொழிலுக்கு வந்தேன். மாட்டுடன் தயாளன் முன்னைவிட வருமானமும் அதிகம் கிடைக்குது. எல்லாத்தையும்விட, `எனக்கு ராஜாவாதான் வாழுறேன்’னு மனசுக்கு…

AIARA

🔊 Listen to this “படிக்கிற காலத்துல, `நல்லா படிச்சு, கைநிறைய சம்பளம் தர்ற வேலைக்குப் போகணும்’னு நினைச்சேன். அதனால்தான், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு, மூணு வருஷம் வேலை பார்த்தேன். ஆனால், அந்த வேலை என்னை ரோபோ போல மாற்றியது. மன அழுத்தத்தை கொடுத்துச்சு. அதனால், அதை தூக்கிப் போட்டுட்டு, அப்பா செஞ்ச இலை வியாபாரம், பால் ஊத்துற தொழிலுக்கு வந்தேன். மாட்டுடன் தயாளன் முன்னைவிட வருமானமும் அதிகம் கிடைக்குது. எல்லாத்தையும்விட, `எனக்கு ராஜாவாதான் வாழுறேன்’னு மனசுக்கு…

Leave a Reply

Your email address will not be published.