அசுரன், பேட்டைக்காளி… AC கேரவனில் களத்துக்குச் சென்று மிரட்டும் காளைகள்; அள்ளி வரும் பரிசுகள்!

  • 13

இலங்கை அமைச்சர், ஜல்லிக்கட்டு நாயகன் செந்தில் தொண்டமான் மாடு பேட்டைக்காளி வருதுப்பா… தொட்டுப்பாரு… ஓடாத, தொட்டுப்பாரு… எக்கச்சக்க பரிசு இருக்குப்பான்னு… ஜல்லிக்கட்டு வர்ணனையாளர், வர்ணனை செய்ய ஜல்லிக்கட்டு அரங்கமே அதிரும்..ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகள் இறங்கினாலே எதிர்பார்ப்புகள் கூடும். இந்தக் காளைகள் ஒவ்வொன்றும் களத்தில் மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டுவதுடன், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழும். ஏ.சி கேரவன், ஆரோக்கியமான உணவுகள் என இந்த வீரமிகு காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்துப் பராமரித்து வருகிறார் செந்தில் தொண்டமான். இலங்கையில் இரண்டு முறை அமைச்சர், ஒருமுறை உவா மாகாணத்தின் முதல்வர், துணை முதல்வராகவும் பணியாற்றிவர். தற்போது பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு பரபரப்பு பணிகளுக்குமிடையே ஜல்லிக்கட்டுக் காளைகளுக்காக போனில் நேரம் ஒதுக்குகிறார்.

தொண்டமான்

பட்டமங்கலம் அருகே ஆலவிளாம்பட்டியில் தான் இவர்களுக்குச் சொந்தமான தோப்பு இருக்கிறது. இங்குதான், செந்தில் தொண்டமானின் இந்த வீரமிகு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அம்மாவின் பூர்வீக கிராமமான சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்திற்கு வந்திருந்தவரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம். “ஜல்லிக்கட்டுக் களத்திற்குச் சென்று வெற்றியுடன் திரும்பியிருக்கிறது “செம்மல்”காளை. அதற்கு ஆரத்தி எடுத்து, சடங்குகள் செய்து வெற்றி பெற்றதை விழா போல கொண்டாடிக்கொண்டிருந்த செந்தில் தொண்டமான். ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரைக்கும் கலாசாரம் சம்பந்தப்பட்ட விஷயமட்டுமல்லாம, கடவுள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். ஜல்லிக்கட்டு மாட்டை, சாமி மாதிரி தான் ஜல்லிக்கட்டுல உள்ளவங்க நினைப்பாங்க. நாங்களும் சாமி மாதிரி தான் காளைகளைப் பார்க்கிறோம்.

போட்டியில கலந்துக்கிறதுக்கு முன்னாடி, காளைகளுக்குக் கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளும் செஞ்சு தான் களத்துக்கே அனுப்புவோம். ஜல்லிக்கட்டு கிளம்புறதுக்கு முன்னால, குளிப்பாட்டி, பொட்டெல்லாம் வச்சி, மணி வேட்டி எல்லாம் கட்டி, போகும் போது ஆரத்தி எடுக்கிறது, திரும்ப வெற்றி பெற்று வந்ததும் ஆரத்தி எடுக்கிறதுன்னு, மனிதர் வெற்றி பெற்றால் என்னென்ன செய்வோமோ அந்த மாதிரி தான் எங்க காளைகளுக்குச் செய்வோம். அப்பாவுக்குச் சொந்த ஊரு திருநெல்வேலி. அம்மா பொறந்து வளர்ந்தது எல்லாம் சிவகங்கை பக்கத்துல இருக்க பட்டமங்கலம் கிராமம். எங்க அம்மா வழியில பரம்பரை, பரம்பரையா மாடு வளர்த்துக்கிட்டு இருக்காங்க. இலங்கையில பொறந்தாலும், நான் படிச்சது, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு தான். தமிழர்களோட பாரம்பரியம், பண்பாடு சார்ந்த விஷயம்ங்கிறதால, எனக்கு ஜல்லிக்கட்டுக் காளைகள் மீதான ஈடுபாடு அதிகரிச்சது. கல்லூரிக் காலங்கள்ல ரொம்ப ஆர்வமா காளைகளை வளர்க்க ஆரம்பிச்சேன். இப்பவும், அந்த ஆர்வத்தோட தொடர்ந்துக்கிட்டு இருக்கேன்.

காளை

இலங்கையில இருந்தாலும், எப்படியும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்திடுவேன். ஊருக்கு வந்திட்டாலே, சொந்தக்காரங்களைப் பார்க்கிறோமோ இல்லையோ, காளைகளைப் பார்க்கிறது தான் முதல் வேளை. இலங்கையில பல்வேறு பொறுப்புகள்ல பரபரப்பா வேலைபார்த்துக்கிட்டு இருக்கிறதால, பக்கத்துல இருந்து பார்த்துக்கிற முடியாத நிலைமை. காளைகளைப் பராமரிப்பதற்கு சில பராமரிப்பாளர்களை வச்சிருக்கேன். வேலை ஒருபக்கம் இருந்தாலும், ஓய்வு நேரத்துல கொஞ்ச நேரம் காளைகளுக்காக ஒதுக்கிடுவேன். அந்த நேரத்துல வீடியோ கால் மூலமா பரமாரிப்பாளர்கள்கிட்ட பேசுவேன்.

காளைகளோட விளையாட்டுலயிருந்து பராமரிப்பு என அனைத்தையும் கேட்டு தெரிஞ்சிக்குவேன். மாடுகளுக்கு ஏசி கேரவன் எல்லாம் எதுக்குன்னு சிலர் கேட்பாங்க. ‘தமிழகம் முழுவதுமே எங்க காளைகள் போட்டியில கலந்துக்கிட்டு வருது. அதுக்கு ஒரு அலுப்பு இல்லாம கூட்டிக்கிட்டுப் போயிட்டு வரணும்ல அதுனால தான் இந்த ஏற்பாடு. கடந்த 10வருஷமா எங்களோட காளைகளை கேரவன்ல கூட்டிக்கிட்டுப் போயிக்கிட்டு இருக்கோம்.

ஆரோக்கியமான உணவுகள், பயிற்சிகள் தொடர்ந்து கொடுக்கிறதால, காளைகள் எல்லாம் களத்தில் உற்சாகமாக விளையாடுதுங்க.

இப்ப எனக்கிட்ட பேட்டைக்காளி, அசுரன்னு மொத்தம் 11 காளைகள் இருக்கு. 11 காளைகளும் எனக்கு பிடிச்ச காளைகள் தான். நாம காளைகள் பெரும்பாலும் களத்தில் இறங்கிட்டாலே கண்டிப்பா வெற்றியைத் தேடித் தந்திடும். 2019 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல பேட்டைக்காளி களத்தில் அசுரத்தனமா ஆடிய ஆட்டம் உங்க எல்லாருக்குமே தெரியும். அது ரொம்ப ரசிக்கப்பட்டுச்சு.
அந்த வீடியோ மட்டும் சோசியல் மீடியால கிட்டத்தட்ட 10 மில்லியன் வியூஸ் போயிருந்துச்சு. சோசியல் மீடியால பேட்டைக்காளிக்குன்னு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு. பேட்டைக்காளி நீண்ட நேரம் களத்துல நிண்டு விளையாண்டு பிடிபடாத காளைன்னு பெயர் வாங்கும். பிடிபடாத காளையா எனக்குப் பெருமிதம் தேடித்தர்றதை பெருமையாகக் கருதுகிறதில்ல, நீண்ட நேரம் களத்துல விளையாண்டாலும், வீரர் யாருக்கும் காயம் ஏற்படுத்தாம வந்திடும். அதைத் தான் பெருமையாகக் கருதுகிறேன்.

காளை

தமிழர்களின் மரபு வழி விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த விடாமல் பீட்டா போன்ற அமைப்புகள் தடைகோரியது. அந்த நேரத்துல தான் முதல் அமைப்பாக, 2008-ல் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தை உருவாக்கினோம். அதுல தலைவராக ஒன்டிராஜ் இருக்காரு. கெளரவத் தலைவரா நான் இருக்கேன். சூரியூர் ராஜா, ஜல்லிக்கட்டு ராஜேஷ் எல்லாம் குழுவா சேர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். பீட்டாவுக்கு உலகம் முழுவதும் ஆள் பலம் இருக்கிறது. பீட்டாவுக்கு எதிராக பல அமைப்புகள் களத்திலிருந்தாலும், நாங்களும் வலுவாகக் களத்தில் இறங்கினோம். பீட்டாவுக்கு நிகராக, எங்களது அமைப்பின் மூலம் உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தோம்.

உலக அளவில் தமிழர்களை ஒன்று திரட்டி போரட்டத்தில் ஈடுபட வைத்தோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக பீட்டாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்கள் குழுவினையும் அமைத்தோம். மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற இளைஞர்கள் முன்னெடுத்த மெரினா போராட்டம் ஒரு காரணம் என்றால், எங்கள் சங்கத்தின் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளும் ஒரு காரணம். அனைவரின் கூட்டு முயற்சியாலும் இன்று ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்கிறது. அதோடு, காயமடைகிற வீரர்களுக்கு மருத்துவ உதவிகள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்குத் தேவையான உதவிகள், நடத்துவதற்கான அனுமதி, பேரிகார்டு உள்ளிட்ட உபகரணங்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்டவற்றை எந்த வித விளம்பரமும் இல்லாமல் செஞ்சிக்கிட்டு இருக்கோம்.

காளை

ஜல்லிக்கட்டை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்துக்கிட்டு வர்றோம். 2017-ல் தபால் துறை மூலமாக ஜல்லிக்கட்டு தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 ஜல்லிக்கட்டுல மொத, மொதல்ல டூவிலர் பிரைஸ்னு அறிமுகப்படுத்தினாங்க. அப்போ, எங்களோட காளை தான் டூவிலர் முதல் பரிசு வாங்குச்சு. அதே மாதிரி 2017 -ல் தடை நீங்குன பிறகு நடந்த 2017-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல கார் பரிசா அறிமுகப்படுத்தினாங்க. அதுவும் எங்களோட காளை ஜெயிச்சிக்கொடுத்துச்சு. 2018, 2019-னு அடுத்தடுத்து 2 கார், 2 புல்லட் உள்ளிட்ட 7 பைக் ஜெயிச்சிக்கொடுத்திருக்கு. கட்டில், பீரோ, தங்கக்காசுன்னு எக்கச்சக்க பரிசுகளையும் இந்தக் காளைகள் ஜெயிச்சுக் கொடுத்திருக்கு. அதோட, எங்க மாடுகளால யாருக்கும் பாதிப்பு ஏற்படலைங்கிறது தான் எங்களுக்குப் பெருமை”என்கிறார் பெருமிதத்துடன்.

AIARA

🔊 Listen to this இலங்கை அமைச்சர், ஜல்லிக்கட்டு நாயகன் செந்தில் தொண்டமான் மாடு பேட்டைக்காளி வருதுப்பா… தொட்டுப்பாரு… ஓடாத, தொட்டுப்பாரு… எக்கச்சக்க பரிசு இருக்குப்பான்னு… ஜல்லிக்கட்டு வர்ணனையாளர், வர்ணனை செய்ய ஜல்லிக்கட்டு அரங்கமே அதிரும்..ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகள் இறங்கினாலே எதிர்பார்ப்புகள் கூடும். இந்தக் காளைகள் ஒவ்வொன்றும் களத்தில் மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டுவதுடன், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழும். ஏ.சி கேரவன், ஆரோக்கியமான உணவுகள் என இந்த வீரமிகு காளைகளை தங்கள்…

AIARA

🔊 Listen to this இலங்கை அமைச்சர், ஜல்லிக்கட்டு நாயகன் செந்தில் தொண்டமான் மாடு பேட்டைக்காளி வருதுப்பா… தொட்டுப்பாரு… ஓடாத, தொட்டுப்பாரு… எக்கச்சக்க பரிசு இருக்குப்பான்னு… ஜல்லிக்கட்டு வர்ணனையாளர், வர்ணனை செய்ய ஜல்லிக்கட்டு அரங்கமே அதிரும்..ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகள் இறங்கினாலே எதிர்பார்ப்புகள் கூடும். இந்தக் காளைகள் ஒவ்வொன்றும் களத்தில் மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டுவதுடன், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழும். ஏ.சி கேரவன், ஆரோக்கியமான உணவுகள் என இந்த வீரமிகு காளைகளை தங்கள்…

Leave a Reply

Your email address will not be published.